கேது, நாக தோஷ நிவர்த்தி ஸ்தலம் ;


Posted by-Kalki Teamகேது, நாக தோஷத்தால் அவதிப்படுபவர்கள் செம்பங்குடி நாகநாதசுவாமி கோவில் இறைவனை வழிபாடு செய்தால் தோஷம் நீங்கும் என்பது ஐதீகம்.

கோவில் தோற்றம், கேது சன்னதி

மகாவிஷ்ணு, கேதுவை கிரக மூர்த்தியாகவும், ஞான சக்தி மூர்த்தியாகவும் பலருக்கு உணர்த்திய தலம் செம்பங்குடி. இந்த அனுக்கிரகத்தை மகாவிஷ்ணுவிடம் இருந்து பெறுவதற்கு முன்பாக, ‘செம்பாம்புகுடி’ என்று அழைக்கப்பட்டு, தற்போது ‘செம்பங்குடி’ என்று அழைக்கப்படும் இந்த தலத்தில் பல ஆண்டுகளாக கேது பகவான் யோக நிலையில் இருந்து வழிபட்டு வந்தார். அதன்பிறகுதான், மகாவிஷ்ணு தோன்றி, கேது பகவானுக்கு அனுக்கிரகம் செய்தார்.

இந்த ஊரில் தான் நாகநாத சுவாமி கோவில் இருக்கிறது. இத்தல இறைவனின் பெயர் ‘நாகநாத சுவாமி.’ இறைவியின் பெயர் ‘கற்பூரவல்லியம்மன்.’ இது கேது தோஷ நிவா்த்தி தலமாகவும் விளங்குகிறது. ஆலயத்தின் வடக்கு பிரகாரத்தில் கேது பகவான் யோக நிலையில், தனி ஆலயத்தில் வீற்றிருந்து பக்தர்களுக்கு அருளை அள்ளி வழங்குகிறார். தனது சாபம் நீங்க, கேது பகவான் இத்தல இறைவனை ஆராதித்து சாபம் நீங்கப் பெற்றதாக செவி வழி புராண தகவல் ஒன்று சொல்லப்படுகிறது. கேது தோஷம் உள்ளவர்கள், கேது பகவானுக்கு வேத ஞான தானியமான முழு முந்திரியால் ஆன மாலையை, குரு மற்றும் புதன் ஓரை நேரத்தில் அணிவித்து வழிபாடு செய்து வந்தால் தோஷம் நீங்கும் என்பது ஐதீகம்.

இத்தலம் நாகதோஷ நிவர்த்தி தலமாகவும் விளங்குகிறது. நாக மூர்த்திகள் அனைவரும், மானுட உருவில் பாத யாத்திரையாக வந்து வழிபட்ட தலம் இது என்று சொல்லப்படுகிறது. செம்பதனிருப்பு, சொர்ணபுரம், செம்பங்குடி ஆகியவை நாக தோஷ நிவர்த்தி தலங்களாக கருதப்படுகின்றன. எனவே நாக தோஷம் உள்ளவர்கள் இத்தலங்கள் ஏதாவது ஒன்றில் இருந்து, இன்னொரு தலத்திற்கு பாத யாத்திரை சென்று இறைவனை வழிபட தோஷம் நீங்குமாம். இந்த ஆலயத்தின் தல விருட்சம் புரச மரம்.

நாகப்பட்டினம் மாவட்டம் சீா்காழியில் இருந்து திருமுல்லை வாசல் சாலையில், சீர்காழியில் இருந்து 4 கிலோமீட்டர் தொலைவில் செம்பங்குடி உள்ளது. சீா்காழி பேருந்து நிலையத்தில் இருந்து பஸ் மற்றும் ஆட்டோ வசதி உண்டு.

இவ்வாலயத்தில் ஒரு கால பூஜைமட்டும் நடைபெறுகிறது. தகவல் தெரிவித்து தரிசனம் செய்யலாம்.Post Comment

Post Comment