தயிருக்கும் யோகர்ட்டுக்கும் என்ன வித்தியாசம்?


Posted by-Kalki Team



தயிருக்கும் யோகர்ட்டுக்கும் இடையே என்ன வித்தியாசம் என்றால், தயார் செய்யப்படும் முறைகள், பாக்டீரியாக்களின் அளவுகள், பாலின் தன்மை ஆகியவற்றைப் பொறுத்தது என்று கூறப்படுகிறது.

தயிர் யோகர்ட்டு

தயிர், யோகர்ட் இரண்டும் இடையில் என்ன வித்தியாசம்? என்பது பரவலாக உள்ள கேள்வி. அதுவும் டயட் என்னும் உணவு கட்டுப்பாட்டை பின்பற்றுவோர் நடுவில் யோகர்ட் என்பது பிரபலமான வார்த்தை.

சிலர், இந்தியாவில் தயிர் என்று கூறுவதைதான், மேற்குலக நாடுகளில் யோகர்ட் என்று அழைக்கின்றனர் என்று நம்புகின்றனர். தயிருக்கும் யோகர்ட்டுக்கும் இடையே என்ன வித்தியாசம் என்றால், தயார் செய்யப்படும் முறைகள், பாக்டீரியாக்களின் அளவுகள், பாலின் தன்மை ஆகியவற்றைப் பொறுத்தது என்று கூறப்படுகிறது.

சமீப காலங்களில் எடை குறைப்பது, உடல் பருமனுக்காக சிகிச்சை போன்றவற்றில் யோகர்ட் மிக முக்கிய பங்கு வகிக்கிறது. மார்க்கெட்டுகளில் மிக எளிதாகவும் கிடைக்க ஆரம்பித்துவிட்டன. அதிலும் பல்வேறு வகையான யோகார்ட்டுகள் கிடைக்கின்றன. அதில் மிகவும் பிரபலமானதும் எல்லோராலும் விரும்பப்படுவது எதுவெனில் கிரேக் யோகார்ட் தான். பெரும்பாலாக டயட்டீஷியன்கள் இந்த கிரேக்க யோகர்ட்டையே பரிந்துரையும் செய்கிறார்கள்.

உடற்பயிற்சியின் போது பொதுவாக தசைகள் அயற்சி அடையும். அதுபோன்ற தசை இறுக்கம் மற்றும் அழுத்தங்களைக் குறைக்கும் பணியை யோகர்ட் செய்யும். பயிற்சியின்போது தசையில் ஏற்படும் அயற்சியை குறைக்கும் பண்பும் யோகர்ட்டுக்கு உண்டு. உடற்பயிற்சியின்போது ஏற்படும் களைப்பிலிருந்து உடல் சீக்கிரமாக மீள்வதற்கும் இது உதவும்.

சிறிய கிண்ணத்திலுள்ள தயிரில் 3 முதல் 4 கிராம் புரதம் (புரோட்டீன்) இருக்கும். அதே அளவான கிரீக் யோகர்ட்டில் 8 முதல் 10 கிராம் புரதம் இருக்கும்.

உடலின் நோய் எதிர்ப்பு ஆற்றல் பராமரிக்கப்படுவதற்கு டி-செல்களே பொறுப்பு. தினமும் யோகர்ட் சாப்பிட்டு வந்தால் டி-செல்களின் செயல்பாடு சிறப்பாக இருக்கும். பாலிலுள்ள லாக்டோஸ் ஒத்துக்கொள்ளாதவர்கள்கூட யோகர்ட்டை சேர்த்துக்கொள்ளலாம். பாலிலுள்ள லாக்டோஸ் யோகர்ட்டில் லாக்டிக் அமிலமாக மாற்றப்படுகிறது. இது எளிதில் செரிக்கக்கூடியதாகும்.

வீட்டில் யோகர்ட் தயாரிக்கும் முறை

தேவைப்படும் அளவு பால் எடுத்து அதை கொதிக்கும் வரைக்கும் சூடாக்கவும். கொதித்த பாலை கண்ணாடி பாத்திரம் ஒன்றில் ஊற்றவும். தானாக வெதுவெதுப்பாக (100 - 105 டிகிரி பாரன்ஹீட்) நிலையை அடையும் வரை ஆற விடவேண்டும். அப்போது பாலின்மேல் ஆடை படரும். முன்பு வீட்டில் தயாரித்த அல்லது கடையில் வாங்கிய யோகர்ட்டில் இரண்டு மேசைக்கரண்டி அளவு எடுத்து ஆறிய பாலுடன் சேர்க்கவும். முடிந்த அளவு பால்மேல் படர்ந்த ஆடை சிதைவுறாமல் கலக்கவும்.

இந்த கண்ணாடி பாத்திரத்தை வெதுவெதுப்பான தண்ணீருக்குள் குறைந்தது எட்டு மணி நேரம் அல்லது இரவு முழுவதும் வைக்கவும். 8 முதல் 12 மணி நேரம் விரும்பத்தக்கது. எவ்வளவு நேரம் யோகர்ட் உறைகிறதோ அவ்வளவு புளிப்புச் சுவை கிட்டும்.

எஞ்சிய நீர்மத்தை கவனமாக வடித்தெடுக்கவும். குளிர்சாதன பெட்டியில் நான்கு மணி நேரம் வைத்திருந்து பின்னர் பயன்படுத்தவும். தயாரித்து 4 முதல் 5 நாள்களுக்குள் பயன்படுத்தவும்.


Post Comment

Post Comment