ஆடி மாத வெள்ளிக்கிழமை வழிபாடு செய்வதால் உண்டாகும் பலன்கள்..!!


Posted by-Kalki Teamஆடி மாத வெள்ளிக்கிழமைகளுக்கு என சிறப்பான மகத்துவம் உள்ளது. சிவனுடைய சக்தியை விட அம்மனுடைய சக்தி ஆடி மாதத்தில் அதிகமாக இருக்கும். ஆடி மாதத்தில் மட்டும் சிவன் சக்திக்குள் இருப்பார் என்பது ஐதீகமாக கருதப்படுகிறது.

பெண்கள் ஆடி வெள்ளிக்கிழமைகளில் விரதமிருந்து அம்மனை வணங்கி வழிபட்டால் நல்ல பலன் கிடைக்கும். ஆடி வெள்ளியன்று துர்க்கையம்மனை ராகு காலத்தில் எலுமிச்சை விளக்கு ஏற்றி வழிபாடு செய்து வந்தால் திருமணம் ஆகாத கன்னி பெண்களுக்கு நல்ல வரன் கிடைக்கும்.

எத்தனை வெள்ளிக்கிழமைகள் வந்தாலும் ஆடி வெள்ளிக்கு என்று ஒரு தனிச்சிறப்பு உண்டு. இதனை சுக்கிர வார விரதம் என்று கூறுவார்கள். இந்த மாதங்களில் வரும் வெள்ளிக்கிழமைகளில் பெண்கள் விரதம் இருந்து வீடுகளிலும் கோவில்களிலும் சிறப்பு பூஜைகள் செய்வார்கள்.

ஆடி வெள்ளியன்று மாலை நேரத்தில் ஆலயங்களில் குத்து விளக்குப் பூஜை நடைபெறும். 108 அல்லது 1008 விளக்குகள் வைத்துப் பூஜை செய்வார்கள். அப்போது சுமங்கலிப் பெண்களுக்கு தேங்காய், பழம், வெற்றிலை, பாக்கு, மஞ்சள், குங்குமம் ஆகியவற்றோடு ரவிக்கைத் துணியும் வைத்துத் தருவது வழக்கமாக உள்ளது.

ஆடி வெள்ளியன்று மகாலட்சுமியை வழிபட்டால் நிறைந்த செல்வம் இல்லம் தேடி வரும் என்பது பெரியவர்களின் நம்பிக்கை ஆகும்.

அம்மனுக்கு பிடித்த உணவுகள் என்றால் அது வேம்பு, கூழ், எலுமிச்சை ஆகியவை ஆகும். இவை உடல் நலத்திற்கு நன்மை அளிப்பவை ஆகும். வியாதியை தடுப்பதற்கும் உதவுகின்றன. ஆடி கடைசி வெள்ளிக்கிழமை அன்று மகாலட்சுமிக்கு உகந்த வரலட்சுமி விரதம் மேற்கொண்டு வழிபாடு செய்தால் வளங்கள் அனைத்தும் வந்து சேரும்.Post Comment

Post Comment