மேடையில் கண்கலங்கிய நடிகை!


Posted by-Kalki Teamஅறிமுக இயக்குநர் ஹரிஷ் ராம் இயக்கத்தில் உருவாகியுள்ள தும்பா என்கிற நகைச்சுவை கலந்த சாகசப் படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார் கீர்த்தி பாண்டியன். இவர், நடிகர் அருண் பாண்டியனின் மகள். கதாநாயகனாக தர்ஷன் நடித்துள்ளார். இசை - அனிருத், விவேக் - மெர்வின், சந்தோஷ் தயாநிதி. நாளை இப்படம் வெளிவரவுள்ளது.

இப்படத்தின் செய்தியாளர் சந்திப்பில் பேசிய நடிகை கீர்த்தி பாண்டியன் பேச்சை ஆரம்பிக்கும் போதே கண்கலங்கினார். பிறகு இயக்குநர் ஹரிஷூக்கு நன்றி சொல்லியபடி தன் பேச்சை ஆரம்பித்தார். அவர் கூறியதாவது:

இந்தப் படத்தின் இயக்குநர் ஹரீஸுக்கு ரொம்ப நன்றி சொல்லவேண்டும். என்னுடைய உடல் தோற்றம் பற்றி எதுவும் சொல்லாத இயக்குநர். கடந்த மூன்றரை வருடங்களாக நான் கதை கேட்டுள்ளேன். நான் சில கதைகளைத் தவிர்த்துள்ளேன். என்னைப் பலர் தவிர்த்த தருணங்களும் உண்டு. பெரிய பெரிய இயக்குநர்கள் கூட தன்னம்பிக்கையை உடைக்கும் அளவுக்குப் பேசியுள்ளார்கள். ஒல்லியாக உள்ளேன், கலர் கம்மியாக உள்ளேன், இப்படி இருந்தால் யாரும் பார்க்கமாட்டார்கள் என்று தொடர்ந்து இப்படிக் கூறியுள்ளார்கள். ஆனால், ஹரிஷ் மட்டுமே நான் எடையை அதிகரிக்க வேண்டும், நான் மாறவேண்டும் என்று ஒரு தருணத்தில் கூட சொல்லவில்லை. ஒரு நடிகையாக என் மீது அதிக நம்பிக்கை வைத்திருந்தார். இதை நான் எப்போதும் மறக்கமாட்டேன். படப்பிடிப்பு முன்பு நான் தன்னம்பிக்கை இல்லாமல் இருந்தேன். இயக்குநர்களுக்கும் தயாரிப்பாளர்களுக்கும் நான் சொல்லிக்கொள்ள விரும்புவது - வெளித்தோற்றத்தை வைத்து மட்டுமே நடிகையை நீங்கள் தேர்வு செய்தால் பிறகு திறமை உள்ளவர்களுக்கு வாய்ப்பே கிடைக்காமல் போய்விடும் என்று கண்கலங்கியபடி பேசினார்.Post Comment

Post Comment