குருவாயூர் கோவிலில் நாளை மோடி துலாபாரம் செலுத்துகிறார் :


Posted by-Kalki Teamகேரள மாநிலம் குருவாயூரில் உள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீகிருஷ்ணன் கோவிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்ய பிரதமர் மோடி திட்டமிட்டுள்ளார். தொடர்ந்து மோடி, துலாபார நேர்ச்சை நிறைவேற்றுகிறார்.

பாராளுமன்ற தேர்தலில் பாரதிய ஜனதா அமோக வெற்றி பெற்றது. நரேந்திர மோடி 2-வது முறையாக பிரதமராக பதவியேற்றார்.

பதவியேற்ற பின் அவர் கேரள மாநிலம் குருவாயூரில் உள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீகிருஷ்ணன் கோவிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்ய திட்டமிட்டார். நாளை அவர் குருவாயூர் கோவிலில் தரிசனம் செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இதற்காக பிரதமர் மோடி இன்று இரவு டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் புறப்பட்டு இரவு 11.35 மணிக்கு கொச்சி விமான நிலையம் வந்து சேருகிறார். அங்கிருந்து காரில் அரசு விருந்தினர் மாளிகைக்கு செல்லும் அவர் இரவில் ஓய்வெடுக்கிறார்.

பின்னர் நாளை காலை 9 மணிக்கு அவர் ஹெலிகாப்டரில் புறப்பட்டு குருவாயூர் செல்கிறார். அங்குள்ள ஸ்ரீகிருஷ்ணா கல்லூரி மைதானத்தில் அவரது ஹெலிகாப்டர் இறங்குகிறது. அங்கிருந்து காரில் புறப்பட்டு குருவாயூர் கோவிலுக்கு செல்கிறார்.

காலை 10 மணி முதல் 11.10 மணி வரை அவர் கோவிலில் முகாமிட்டு சாமி தரிசனம் செய்கிறார். சாமி சன்னதிக்கு செல்லும் மோடி, மஞ்சள் பட்டு, கதலிப்பழம் ஆகியவற்றை காணிக்கையாக படைத்து சாமியை வழிபடுகிறார். பின்னர் அய்யப்ப சுவாமி சன்னதி, பகவதி அம்மன் சன்னதிக்கும் சென்று தரிசனம் செய்கிறார்.

தொடர்ந்து மோடி, துலாபார நேர்ச்சை நிறைவேற்றுகிறார். எடைக்கு எடையாக தாமரைப்பூ மற்றும் கதலிப்பழங்களை அவர் கொடுக்கிறார். இதற்காக 112 கிலோ தாமரைப்பூக்கள் தயார் நிலையில் வைக்கப்படுகிறது. இந்த பூக்கள் தேவைக்கேற்ப பயன்படுத்தப்படும்.

மோடி துலாபாரம் கொடுப்பதற்கான தாமரை பூக்களை குமரி மாவட்டம் தோவாளையில் உள்ள பூ மார்க்கெட்டில் இருந்து வாங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. குருவாயூர் தரிசனத்துக்கு பின் மோடி டெல்லி புறப்பட்டுச் செல்கிறார்.

கடந்த 2008-ம் ஆண்டு மோடி குஜராத் மாநில முதல்-மந்திரியாக இருந்தபோது குருவாயூர் கோவிலுக்கு வந்து தரிசனம் செய்தார். அப்போதும் அவர் தாமரைப்பூக்களை துலாபாரமாக கொடுத்தார்.


Post Comment

Post Comment