சராஹன் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது :


Posted by-Kalki Teamகடவுள் மொத்த அழகையும் அள்ளி உருவாக்கிய இடம். சட்லஜ் பள்ளத்தாக்கில் அமைந்துள்ள ஒரு குக்கிராமம். கின்னௌரின் நுழைவாயில். இப்படி பல விஷயங்கள் சராஹனைப்பற்றி சொல்லிக்கொண்டே போகலாம். சராஹன், இமாச்சலப் பிரதேசத்தின், சிம்லா மாவட்டத்தில் உள்ள ஒரு முக்கிய சுற்றுலாத்தலமாகும். இயற்கையை ரசிப்பவர்களுக்கு ஒரு வரப்பிரசாதமாக இவ்விடம் உள்ளது. கடல் மட்டத்திலிருந்து சுமார் 2165 உயரத்தில் அமைந்துள்ள இவ்விடம், ஆப்பிள் தோட்டங்கள், பைன் காடுகள், சிறு நீரோடைகள், பழமையான அமைப்புகள் மற்றும் ஓட்டு வீடுகள் போன்றவற்றால் புகழ்பெற்று விளங்குகிறது. சராஹன் தொடர்பாக பல புராணங்கள் மற்றும் கட்டுக்கதைகள் உள்ளன.

ஒரு புராணப்படி, குலு மன்னர், அண்டை பேரரசான புஷைர் மீது போர் பிரகடனம் செய்தார். புஷைர் மன்னர் போரில் வெற்றி பெற்று குலு மன்னனின் தலையை துண்டித்து, மக்களின் பார்வைக்காக சராஹனிற்கு கொண்டு வந்தான். இறந்த மன்னரின் இறுதிச்சடங்கை செய்ய, அவரது குடும்பம், அவரது தலையைக்கேட்க, புஷைர் மன்னன் மூன்று நிபந்தனைகளை விதித்தான். முதல் நிபந்தனையாக, குலு மக்கள் தன்னை எதிர்க்கக் கூடாது என்றும், இரண்டாம் நிபந்தனையாக, தன்னால் கைப்பற்றப்பட்ட குலுவை திரும்பத்தர முடியாது என்றும், கடைசி நிபந்தனையாக குலுவிலிருந்து சராஹனுக்கு எடுத்துச் செல்லப்பட்ட, குலுவின் முக்கிய கடவுளான ரங்கநாதரை மீண்டும் திருப்பித் தர முடியாது என்றான்.

மூன்று நிபந்தனைகளும் ஒப்புக்கொள்ளப்பட்டன. ஆனால் அதற்கு இணையாக, இறந்த மன்னரின் குடும்பம் அவருக்கு ஒரு கோரிக்கையை வைத்தது. புஷைரின் அரசர்கள் வருடந்தோறும் தசரா விழாவை கொண்டாட வேண்டும் என்றனர். மன்னனும் இதை ஒப்புக்கொண்டான். அதனால் இப்பகுதியில் தசரா, ஒரு முக்கிய விழாவாக கொண்டாடப்படுகிறது. சராஹனுக்கு மத்தியில் ஏராளமான சுற்றுலாத்தலங்கள் உள்ளன. பீமகாளி கோவில் வளாகம், பறவைகள் பூங்கா மற்றும் பாபா பள்ளத்தாக்கு போன்றவை குறிப்பிடத் தகுந்தவையாகும். பீமகாளி கோயில் வளாகம் குறைந்தது 800 ஆண்டுகள் பழைய வாய்ந்தது என்று நம்பப்படுகிறது. பக்தர்கள் பெரும் எண்ணிக்கையில் இங்கு வந்து வழிபட்டுச் செல்லுகின்றனர். கோவிலின் கட்டிடக்கலை, இந்திய மற்றும் புத்த கட்டிடக்கலை பாணியை கலந்த ஒரு தனிப்பட்ட கலவையாகும்.

சக்திபீடங்களில் ஒன்றாக விளங்கும் இத்தலம், மிகப்புனிதத்தலமாக வழிபடப்படுகிறது. நீர்த்தேக்க ஏரி மற்றும் ஆல்பைன் புல்வெளிகள் போன்றவற்றால் ஒரு மயக்கும் இயற்கைக்காட்சி கொண்ட பாபா பள்ளத்தாக்கு போன்றவை மேலும் பல பார்வையாளர்களை கவர்கிறது. சராஹனுக்கு வர விரும்பும் பயணிகள் கண்டிப்பாக பறவைகள் பூங்காவிற்கு வந்து, மயில் போன்ற ஒரு வகை கோழியின் இனப்பெருக்க மையங்களையும், இவ்விடத்தை தாயகமாக கொண்ட மோனல் என்ற பறவை இனத்தையும் காணத்தவறக்கூடாது. மோனல், இமாச்சலப் பிரதேசத்தின் தேசிய பறவையாகும்.

பசுமையான தேவதாரு மரங்கள் மற்றும் பனி மூடப்பட்ட பஷல் பீக்குக்கு பெயர்பெற்ற சராஹன், கடல் மட்டத்திலிருந்து 5155 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள ஸ்ரீகண்ட் மகாதேவால் அறியப்படுகிறது. இவ்விடம் அழிக்கும் கடவுளான சிவனுக்காக அர்ப்பணிக்கப்பட்டது. புராணப்படி இங்கு சிவன் தியானம் செய்ததாக கூறப்படுகிறது. மேலும் பெரும் காவியமான மகாபாரதத்தின் படி பாண்டவர்கள் இங்கு வந்து சென்றதாக அறியமுடிகிறது. இவ்விடம், நீண்ட மலையேறும் பாதையை பார்வையாளர்களுக்குத் தருகிறது.

ஜியோரி, பஞ்சாரா ரெட்ரீட், கௌரா, தரன்கதி மற்றும் சங்லா பள்ளத்தாக்கு போன்றவை சராஹனின் மற்ற பிரபலமான இடங்கள். சராஹனிலிருந்து 20 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள ஜியோரியில், ஒரு வெந்நீரூற்று உள்ளது. அதேவேளையில், தேசிய நெடுஞ்சாலை 22 இல் அமைந்துள்ள பஞ்சாரா ரெட்ரீட் அதன் பச்சை ஆப்பிள் தோட்டங்கள் மூலம் அறியப்படுகிறது. சராஹனின் அருகாமையில் அமைந்துள்ள சங்லா பள்ளத்தாக்கு, ஆப்பிள் மற்றும் செர்ரி பழத்தோட்டம் மற்றும் பனி நீரோடைகள் கொண்ட புகழ்பெற்ற பிரபலமான மலை நகரம் ஆகும்.

சராஹனுக்கு செல்ல விரும்பும் பயணிகள், சாலை, ரயில் மற்றும் விமான போக்குவரத்துகள் மூலம் இலக்கை அடையலாம். இந்த இடத்திற்கான பயணத்தை ஏப்ரல் மற்றும் நவம்பர் மாதங்கள் இடையே திட்டமிட வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறது. எனினும் சுற்றுலா பயணிகள் குளிர்காலத்தில் கூட இவ்விடத்தை சுற்றிப்பார்க்க வரலாம்.Post Comment

Post Comment