காணாக்கடி எதனால் ஏற்படுகிறது?


Posted by-Kalki Teamபலருக்கும் வருகிற ஒரு சரும அலர்ஜி Urticaria. இது தமிழில் காணாக்கடி என்ற பெயரில் அழைக்கப்படுகிறது. கடித்தது என்னவென்று அறிய முடியாத ஒரு நச்சுக்கடி என்பதே இதற்கு அர்த்தம்.

தற்போதுள்ள வாழ்க்கை முறையில் நாம் சாப்பிடும் உணவில், நாம் சுவாசிக்கும் காற்றில், நம் சுற்றுப்புறச்சூழலில் ஏற்படும் மாசு காரணமாக இந்த காணாக்கடி இப்பொழுது நிறைய பேரை பாதிக்கிறது.

உடல் முழுவதும் திடீரென்று பட்டை பட்டையாக சிவந்து தடித்து போகும். அரிப்பு அதிகமாகி, கொஞ்ச நேரத்தில் தானாகவே மறைந்துவிடும். இது தொண்டை, கண் இமை போன்ற இடங்களை பாதித்தால், உடல் முழுவதிலும் தடித்துக்கொண்டு, மூச்சு விடுவதிலும் சிரமம் இருக்கும். இப்படி இருக்குமானால், உடனே மருத்துவரின் உதவியை நாடுவது முக்கியம். சிலருக்கு இந்த அலர்ஜி ஏற்படும்போது வாந்தி, மயக்கம், உடல்வலி, தலைவலி, வயிற்று வலி போன்ற அறிகுறிகளும் சேர்ந்தே காணப்படலாம்.

மிகச்சிலருக்கு இது எதனால் ஏற்படுகிறது என்று கண்டுபிடிக்கப்பட்டாலும், பலருக்கு இது எதனால் ஏற்படுகிறது என்பதை கண்டுபிடிப்பதும் சிரமமாக இருக்கிறது.

உண்ணும் உணவு, மாத்திரைகள், தொற்று நோய்கள், குடலில் கீரி பூச்சிகள் இருப்பது, நாம் சுவாசிக்கும் காற்றில் உள்ள பொருட்கள், பூச்சிக்கடிகள், மருந்துகள், கண்களில் அல்லது காதுகளில் விடப்படும் சொட்டு மருந்துகள், தடுப்பூசிகள் போன்றவையும் முக்கியப்பங்கு வகிக்கின்றன.

மீன், பால், வேர்க்கடலை, பீன்ஸ், கேரட், முருங்கைக்காய், இறைச்சி போன்றவையும், உணவுகளில் சேர்க்கப்படும் வண்ணங்களும், மணமூட்டிகளும், இதனை ஏற்படுத்தலாம். பற்களில் உள்ள சொத்தை, தொண்டை, காதுகளில் ஏற்படும் வலி, சீழ் உண்டாதல் போன்றவை இதை ஏற்படுத்தலாம். அது மட்டுமின்றி சுவாசக் குழாயிலும், சிறுநீர் பாதையில் மற்றும் பித்தப்பையில் உள்ள கிருமி தொற்றுகளாலும் கூட இது ஏற்படலாம்.

குடலில் நாக்குப்பூச்சிகள் என்று அழைக்கப்படும் தொற்றுப் புழுக்கள் இருப்பதும் கூட ஒரு காரணம். பூக்களின் மகரந்தத் தூள்கள், விலங்குகளின் முடிகள் மற்றும் வீட்டில் உள்ள தூசுகளாலும் காணாக்கடி உண்டாகலாம்.

கொசுக்கள், மூட்டைப்பூச்சிகள் கடித்தால் கூட ஒவ்வாமை ஏற்படலாம். தேனியோ குளவியோ கொட்டுவதால் வரலாம். தடுப்பூசிகள் போட்டால் சிலருக்கு அலர்ஜியினால் இதுபோன்று தடிப்புகள் ஏற்படலாம் என டாக்டர்கள் கூறுகின்றனர்.


Post Comment

Post Comment