லிங்கா பட விவகாரம்: நீதிமன்றத்தில் ரஜினி இன்று நேரில் ஆஜராகிறார்?


Posted by-Kalki Teamலிங்கா திரைப்படம் தொடர்பான வழக்கு விசாரணைக்காக நடிகர் ரஜினிகாந்த், இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார், தயாரிப்பாளர் ராக்லைன் வெங்கடேஷ் உள்ளிட்டோர் செவ்வாய்க்கிழமை நேரில் ஆஜராக மதுரை மாவட்ட கூடுதல் முன்சீப் நீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவிட்டது. தனது "முல்லைவனம் 999 என்ற படத்தின் கதையைத் திருடி லிங்கா திரைப்படம் தயாரிக்கப்பட்டுள்ளது. எனவே இந்தப் படத்தை வெளியிடத் தடை விதித்து, லிங்கா படக்குழு மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என்று மதுரை சின்னசொக்கிகுளத்தைச் சேர்ந்த இயக்குநர் ரவிரத்தினம் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், படத்தை திரையிடும் முன்பு ரூ.

3 கோடியை ரொக்கமாக உயர்நீதிமன்ற மதுரைக் கிளை வளாகத்தில் உள்ள வங்கியில் செலுத்த வேண்டும். மேலும் ரூ.2 கோடியை ரொக்கமாகவும், ரூ.5 கோடியை வங்கி உத்தரவாதமாகவும் செலுத்த வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தது. இந்த உத்தரவை எதிர்த்து லிங்கா படத் தயாரிப்பாளர் ராக்லைன் வெங்கடேஷ் உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார். அதை விசாரித்த உச்சநீதிமன்றம், உயர்நீதிமன்ற உத்தரவை மாற்றி அமைத்து, ரூ.1 கோடி வங்கி உத்தரவாதம் வழங்கினால் போதுமானது என்று உத்தரவிட்டது. இந்நிலையில் கதை திருட்டு வழக்கு கூடுதல் முன்சீப் நீதிமன்றத்தில் நீண்ட நாள்களாக நிலுவையில் உள்ளது. எனவே அதை வேறு நீதிமன்றத்துக்கு மாற்றி உத்தரவிடக் கோரி சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் லிங்கா படத் தயாரிப்பாளர் ராக்லைன் வெங்கடேஷ் மனு செய்தார். இந்த மனுவை விசாரித்த தனி நீதிபதி, கதை திருட்டு வழக்கை மதுரை மாவட்ட கூடுதல் முன்சீப் நீதிமன்றம் விசாரிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அந்த உத்தரவை மாற்றி அமைக்க முடியாது. எனவே கதை திருட்டு வழக்கை உரிய நீதிமன்றம் ஏப்.30 ஆம் தேதிக்குள் விசாரித்து முடிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார். இந்நிலையில் உயர்நீதிமன்ற உத்தரவை பின்பற்றும் வகையில், செவ்வாய்க்கிழமை (மார்ச் 8), மனுதாரர் ரவிரத்தினம், லிங்கா படத் தயாரிப்பாளர் ராக்லைன் வெங்கடேஷ், இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார், நடிகர் ரஜினிகாந்த் உள்ளிட்டோர் தங்கள் வழக்குரைஞருடன் நேரில் ஆஜராக மதுரை மாவட்ட கூடுதல் முன்சீப் நீதிமன்றம் உத்தரவிட்டது.


Post Comment

Post Comment