ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் கைசிக ஏகாதசி விழா :


Posted by-Kalki Team



ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் இந்தாண்டுக்கான கைசிக ஏகாதசி விழா நேற்று தொடங்கி, இன்று(செவ்வாய்க்கிழமை) அதிகாலை வரை நடைபெற்றது.

108 வைணவ திருத்தலங்களில் முதன்மையானதும், பூலோக வைகுண்டம் என்ற சிறப்புக்குரியதுமான ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் ஆண்டுதோறும் கார்த்திகை மாதம் ஏகாதசி தினத்தன்று கைசிக ஏகாதசி விழா நடைபெறும். அதன்படி இந்தாண்டு கைசிக ஏகாதசி விழா நேற்று தொடங்கி, இன்று(செவ்வாய்க்கிழமை) அதிகாலை வரை நடைபெற்றது.

இதையொட்டி நேற்று முதல் புறப்பாடாக, உற்சவ நம்பெருமாள் மூலஸ்தானத்தில் இருந்து காலை 10 மணிக்கு புறப்பட்டு 10.30 மணிக்கு சந்தன மண்டபத்துக்கு வந்து சேர்ந்தார். அங்கு காலை 11.30 மணி முதல் மதியம் 1.30 மணி வரை நம்பெருமாளுக்கு திருமஞ்சனம் நடைபெற்றது. பின்னர்் சந்தன மண்டபத்தில் இருந்து நம்பெருமாள் மாலை 5.30 மணிக்கு புறப்பட்டு 5.45 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைந்தார்.

2-வது புறப்பாடாக நம்பெருமாள் மூலஸ்தானத்தில் இருந்து இரவு 8.30 மணிக்கு புறப்பட்டு 9 மணிக்கு அர்ச்சுன மண்டபத்திற்கு வந்து சேர்ந்தார். அங்கு நம்பெருமாளுக்கு இரவு 9.30 மணி முதல் இரவு 11.30 மணி வரை 365 வஸ்திரங்களும், 365 தாம்பூலங்களும், அரையர் சேவையுடன் 365 கற்பூர ஆரத்தியும் சமர்ப்பித்தனர்.

இரவு 11.30 மணி முதல் இன்று அதிகாலை 2 மணி வரை நம்பெருமாள் முன் கைசிக புராணம் (பக்திக்கு குலம் தடை இல்லை என்பதை உணர்த்்்்துதல்) எனப்படும் பக்தர் நம்பாடுவான் வரலாற்றை பக்தி சிரத்தையோடு பெருமாள் முன் பட்டர் படித்தார். கைசிக புராணத்தை படித்தாலோ அல்லது கேட்டாலோ நற்பயன்கள் கிடைக்கும் என்பது நம்பிக்கை.

பின்னர் அதிகாலை 5.15 மணிக்கு நம்பெருமாள் அர்ச்சுன மண்டபத்தில் இருந்து புறப்பட்டு 2-ம் பிரகாரத்தில் மேலப்படி வழியாக காலை 5.45 மணிக்கு கற்பூர படியேற்ற சேவை கண்டருளி காலை 6 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைந்தார். நம்பெருமாள் படியேறும்போது பக்தர்கள் பச்சை கற்பூரப்பொடியை நம்பெருமாள் மீது தூவினர். இந்த கற்பூர படியேற்ற சேவையை ஏராளமான பக்தர்கள் கண்டு களித்தனர். கைசிக ஏகாதசியை முன்னிட்டு நேற்று இரவு முழுவதும் விடிய, விடிய பக்தர்கள் நம்பெருமாளை தரிசனம் செய்தனர்.

விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் இணை ஆணையர் ஜெயராமன், அறங்காவலர்கள், அலுவலர்கள் மற்றும் கோவில் ஊழியர்கள் செய்திருந்தனர்.


Post Comment

Post Comment