ஏ.ஆர்.ரகுமானை ஈர்த்த காந்தக்குரல் - சினிமா பாடகராகும் பெண் :


Posted by-Kalki Teamதனது குரலின் மூலம் ஏ.ஆர்.ரஹ்மானை கவர்ந்த தெலுங்கு பெண்ணுக்கு படத்தில் பாட வாய்ப்பு அளிப்பதாக தெலுங்கு இசையமைப்பாளர் சலூரி அறிவித்துள்ளார்.

கமல் நடித்த விஸ்வரூபம் படத்தில் இடம்பெற்ற உனைக் காணாது நான் எனத் தொடங்கும் பாடல் பிரபலமானது. இந்த பாடலை கேரளாவைச் சேர்ந்த ராகேஷ் உன்னி என்ற தொழிலாளி பாடும் வீடியோ சில மாதங்களுக்கு முன் இணையத்தில் வெளியாகி வைரலானது.

விஸ்வரூபம் படத்தின் இசையமைப்பாளரும் அந்தப் பாடலைப் பாடியவருமான ‌ஷங்கர் மகாதேவன் அந்த வீடியோவைப் பகிர்ந்து பாராட்டியிருந்தார். சில நாட்களில் கமல்ஹாசன் ராகேஷ் உன்னியை நேரில் சந்தித்துப் பாராட்டினார்.

இதே போல மற்றொரு சம்பவம் ஆந்திராவில் நிகழ்ந்துள்ளது. ‌ஷங்கர் இயக்கத்தில், ஏ.ஆர்.ரகுமான் இசையில் 1994-ம் வெளியான காதலன் திரைப்படத்தில் இடம்பெற்ற என்னவளே பாடலின் தெலுங்கு வடிவம் ஓ செலியா. இந்தப் பாடலை ஒரு கிராமத்துப் பெண் பாடும் வீடியோ சில தினங்களுக்கு முன் சமூக வலைதளங்களில் வைரலானது.

யு டியூபில் பதிவேற்றப்பட்ட 10 மணி நேரங்களில் 7 லட்சம் பார்வையாளர்களைக் கடந்து சாதனை படைத்தது. இந்த வீடியோவை ஏ.ஆர்.ரகுமான் முகநூல் பக்கத்தில் பகிர்ந்து இவர் யாரென்று தெரியவில்லை. அருமையான குரல் என்று பாராட்டினார்.

அந்தப் பெண்ணின் பெயர் பேபி என்றும், அவர் ஆந்திர மாநிலம் வடிசலேரு கிராமத்தைச் சேர்ந்தவர் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

பேபியின் அற்புதக் குரலால் ஈர்க்கப்பட்ட தெலுங்கு இசையமைப்பாளர் சலூரி கோட்டீஸ்வர ராவ் அவருக்கு தனது இசையில் பாட வாய்ப்பு அளிப்பதாக அறிவித்துள்ளார். ஏ.ஆர்.ரகுமான் தான் அந்த பெண்மணிக்கு வாய்ப்பு கிடைக்க காரணம் என்பதால் அவரது ரசிகர்கள் இந்த செய்தியை பகிர்ந்து ரகுமானை பாராட்டி வருகிறார்கள்.


Post Comment

Post Comment