பதினொரு வருடங்களுக்கு பிறகு மீண்டும் அதே மேஜிக்.... காற்றின் மொழி விமர்சனம்!


Posted by-Kalki Teamதனக்கான சந்தோஷத்தை தேடும் ஒரு பெண்ணின் தவிப்பும், ஏக்கமும், வெற்றியுமே காற்றின் மொழி திரைப்படம்.

மிடில் கிளாஸ் தம்பதியான பாலு (விதார்த்)- விஜயலட்சுமிக்கு (ஜோதிகா) ஒரே மகன் சித்து (மாஸ்டர் தேஜாஸ்). கணவர் ஒரு எக்ஸ்போர்ட் கம்பெனியில் சூப்பர்வைசராக வேலை பார்க்க, வீட்டையும் குடும்பத்தையும் பார்த்துக்கொள்கிறார் விஜி. ஆனால் அவரது அக்காக்கள் இருவரும் நன்றாக படித்து வங்கி பணியில் இருக்கிறார்கள். ஆனால் ப்ளஸ் 2 பெயிலான விஜிக்கு தெரிந்ததெல்லாம் சமையல் மட்டுமே. இதனாலேயே பல அவமானங்களை சந்திக்கும் விஜி, எப்படியாவது வேலைக்கு போய் சாதிக்க வேண்டும் என துடியாய் துடிக்கிறார். அவரே எதிர்பாராதவிதமாக எஃப்.எம்மில் ஆர்.ஜே வேலை கிடைக்கிறது. ஆனால் இந்த வேலையே அவரது குடும்பத்தின் சந்தோஷத்திற்கு வேட்டு வைக்கிறது. ஆர்.ஜே. வேலையை விஜி தொடர்ந்தாரா இல்லை விலகினாரா என்பதே படம்.

பதினொரு ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் இணைந்திருக்கிறது ராதாமோகன் - ஜோதிகா கூட்டணி. மொழியில் இருந்த அதே மேஜிக் இதிலும் இருக்கிறது. வித்யா பாலன் நடித்து இந்தியில் வெளியான துமாரி சுலு படத்தின் ரீமேக் தான் என்றாலும், ஒரிஜினலைவிட மிக அற்புதமாக படத்தை தந்திருக்கிறார் ராதாமோகன்.

முதல்பாதியும் சரி, இரண்டாம் பாதியும் சரி, படம் எப்படி நகர்கிறது என்பதே தெரியவில்லை. விதவிதமான மனிதர்கள், எஃப்.எம். ஸ்டேஷன் என சுவாரஸ்ய திரைக்கதையில் பார்வையாளர்களை கட்டி இழுத்து செல்கிறார் இயக்குனர். ஒரு ஆர்.ஜேவாக தனது காலர்களை ஜோதிகா கையாளும் விதம் படு சுவாரஸ்யம். ரயில் ஓட்டுனர், உள்ளாடை விற்பனையாளர், மனைவியை இழந்த கணவர் என ஒவ்வொரு காலரும் ஒரு புதிய உணர்வையும், கோணத்தையும் ஏற்படுத்துகிறார்கள்.

சினிமாவில் ரீஎண்ட்ரியாகி கலக்கிக்கொண்டிருக்கும் ஜோதிகாவுக்கு உண்மையிலேயே இந்த படம் ஒரு மைல்க்கல். அத்தனை பெண்களின் இதயங்களையும் கொள்ளையடித்துவிடுகிறார். சின்ன சின்ன விஷயங்களைக்கூட மிக நுட்பமாக கையாண்டு ஸ்கோர் செய்கிறார். ஆர்.ஜேவாக ஹஸ்கி வாய்சில் அவர் சொல்லும் அந்த ஹல்ல்லோவ்... அத்தனை அழகு. ஏடாகூடமாக பேசும் காலர்களை அசால்டாக கையாண்டு, ஒரு மனநல ஆலோசகரை போல கவுன்சிலிங் தரும் ஜோவின் நடிப்பு செம ரெப்ரெஷிங் மொமன்ட்ஸ். பல ஆண்டுகள் கழித்து பழைய ஜோவை அதே துள்ளளுடன் மீண்டும் திரையில் பார்க்கும் அனுபவம்.... ப்பா.... "நீங்க சுட்டா பூரி புஸ்ஸுன்னு தான் வரும் ஜோ".

ஹீரோயினை சுற்றியே நடக்கும் கதையில் நாயகனாக விதார்த். பெரிய வேலை இருக்காது என்று தெரிந்தும் துணிந்து இந்த கதாபாத்திரத்தை ஒப்புக்கொண்டு, கிடைத்த கேப்பில் செமையாக ஸ்கேர் செய்திருக்கிறார். ஜோதிகாவிடம் போனில் பேசும் அந்த காட்சியில் ஒரு கணவனின் வலியை யதார்த்தமாக உணர்த்திவிடுகிறார்.

வழக்கம் போல் இந்த படத்திலும் ராதாமோகன் ஆர்ட்டிஸ்டுகளான குமரவேல், எம்.எஸ்.பாஸ்கார், மனோபாலா, ராம்மோகன் என எல்லோருமே இருக்கிறார்கள். வழக்கம் போல் தனது டைமிங் வசனங்களால் குதூகலப்படுத்துகிறார் குமரவேல். ஆங்கிரி பேர்ட் எம்.எஸ்.பாஸ்கருக்கு நதி எங்கே போகிறது பாடல் சீன் ஒன்று போது ஸ்கோர் செய்ய. இந்த படத்திலும் ஆச்சர்யமூட்டுகிறார்.

இவர்களை தாண்டி ராதாமோகன் டீமில் புதிதாக இணைந்திருக்கும் லட்சுமி மஞ்சு தான் படத்தின் க்யூட் சர்ப்ரைஸ். ஒரு எஃப்.எம். ஸ்டேஷனை நிர்வகிக்கும் அதிகாரியாக கம்பீரமாக நடித்து கலக்கி இருக்கிறார்.

ஒரு சீனில் வந்தாலும் கலகலப்பு ஏற்படுத்துகிறார் சிம்பு. யோகிபாபுக்கு படத்தில் இரண்டு சீன் தான். மனுஷன் ரொம்ப பிஸிங்கிறதால அவர் வீட்டு மொட்டை மாடியிலேயே ஷூட் பண்ணிருப்பாங்க போல. தீபிகா படுகோனே, கீர்த்தி சுரேஷ்ன்னு இஷ்டத்துக்கு அளந்துவிடுகிறார். கொஞ்ச நேரமே வந்தாலும், கிச்சிகிச்சு மூட்டி சிரிக்க வைக்கிறார் மயில்சாமி.

படத்தின் மிகப்பெரிய ப்ளஸ் பொன்.பார்த்திபனின் வசனங்கள். அலுப்படைய செய்யாமல் படத்தை அவ்வளவு யதார்த்தமாக கொண்டு செல்கின்றன. இதற்காகவே அவருக்கு ஒரு ஸ்பெஷல் பாராட்டுகள்.

எம்.எச்.காசிப்பின் இசையில் கிளம்பிட்டாலே விஜயலட்சுமி பாடலும், டர்ட்டி பொண்டாட்டி பாடலும் செம சூப்பர். போ உறவே பாடலில் நெஞ்சை பிழிகிறார். பின்னணி இசையில் பிரமாதப்படுத்தியிருக்கிறார். நல்ல எதிர்காலம் காத்திருக்கிறது காசிப்.

மகேஷ் முத்துசாமியின் ஒளிப்பதிவில் படத்தில் வரும் அத்தனை பேருமே அழகாக தெரிகிறார்கள். ஒரு எஃப்.எம். ஸ்டேஷனை அப்படியே கண்முன் கொண்டு வந்திருக்கிறார் கலை இயக்குனர் கே.கதிர். படத்தை போரடிக்காமல் கொண்டு சென்றிருக்கிறார் எடிட்டர் பிரவீன் கே.எல்.

படம் பார்த்துவிட்டு தியேட்டரைவிட்டு வெளியே வரும் போது, மலை பிரதேசக்கு சுற்றுலா சென்று திரும்பிய உணர்வு ஏற்படுகிறது. பாசிட்டிவ் எனர்ஜியை தந்தமைக்காகவே படக்குழுவுக்கு ஸ்பெஷல் பாராட்டுகள்.Post Comment

Post Comment