ஆர்ப்பரித்து கொட்டும் ஆயிரம் அருவிகள் எங்கே தெரியுமா?


Posted by-Kalki Teamமஹாராஷ்டிரா மாநிலத்தில் புனே மாவட்டத்தில் உள்ள மால்ஷேஜ் காட் அழைக்கப்படும் இந்த மலைப்பாதைப் பிரதேசம் ஒரு பிரபலமான சுற்றுலா ஸ்தலமாக பெயர் பெற்றுள்ளது. மயக்க வைக்கும் மலைக்காட்சிகளுடன் கடல் மட்டத்திலிருந்து தலை சுற்ற வைக்கும் 700 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள இந்த மால்ஷேஜ் காட் மலைஸ்தலம் ஆரோக்கியமான இனிமையான பருவநிலையை கொண்டுள்ளது.

இந்த சுற்றுலாத்தலத்தில் எண்ணற்ற ஏரிகளும், பாறைகளுடன் காட்சியளிக்கும் மலைகளும் ஏராளம் நிரம்பியுள்ளன. இயற்கை ரசிகர்களுக்கும் மலையேற்ற விரும்பிகளுக்கும் மிகவும் பிடித்தமான ஸ்தலமாக இது புகழ்பெற்றுள்ளது.

வனம்போன்ற நாட்டுப்புற அழகுடன் காட்சியளிக்கும் இந்த மால்ஷேஜ் காட் பிரதேசத்தில் பல ஆறுகளும் ஓடுவதால் இது மற்ற மலைப் பிரதேசங்களிலிருந்து முற்றிலும் வேறுபட்டு விசேஷமாக திகழ்கிறது.

இங்குள்ள பல கோட்டைகள் வரலாற்றுக்காலத்தை தரிசிக்க உதவும் ஜன்னல்களாக காட்சியளிக்கின்றன. மழைக்காலத்தில் நிரம்பி வழியும் நீர்வீழ்ச்சிகளும், சரணாலயத்தில் காணப்படும் பல வகைத்தாவரங்களும் உயிரினங்களும் இப்பிரதேசத்தின் குறிப்பிடத்தக்க அம்சங்களாகும்.

விசேஷமான தகவல்கள்

மால்ஷேஜ் காட் ஸ்தலம் மழைக்காலத்தில் ஒரு அற்புதமான சுற்றுலாத்தலமாக காட்சியளிக்கின்றது. மற்ற காலத்தில் சாதாரணமாக காட்சியளிக்கும் நடைப்பாதைகள் இக்காலத்தில் சொர்க்கம் போன்ற சூழலுடன் மாறுகின்றன.

மேகங்களின் வழியே இப்பாதைகளில் நடக்கும்போது நாம் பெறும் அனுபவத்தை வார்த்தைகளால் விவரிக்க முடியாது. அடர்த்தியான மேகங்களின் ஊடே நாம் நடக்கும்போது ஏதோ மேகத்தில் மிதப்பது போன்ற ஒரு அற்புத உணர்வு நமக்கு கிட்டுகிறது.

பறவை ரசிகர்கள் மற்றும் இயற்கை ஆர்வலர்கள் அரிதான புலம்பெயர் பறவைகளை இங்கு பிம்பல்காவ்ன் ஜோகா அணைப்பகுதியில் பார்க்கலாம். இந்த அணையின் பின்னணியில் பளபளக்கும் நீர்த்தேக்கமும் வளமான காட்டுப்பகுதியும் ரம்மியமாக காட்சியளிக்கின்றன. கவர்ச்சியான பிளாமிங்கோ பறவைகளை இங்கு பார்த்து மகிழலாம்.

கட்டிடக்கலை ஆர்வலர்கள் இங்குள்ள அஜோபா மலைக்கோட்டை, ஜீவ்தான் கோட்டை மற்றும் ஹரிஷ்சந்திரகாட் கோட்டைகளை ரசித்து பார்க்கலாம். சிவாஜி பிறந்த ஸ்தலமான ஷிவனேரி கோட்டையும் இங்கு அருகிலேயே அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

இவை தவிர இந்த மால்ஷேஜ் ஸ்தலத்தில் மலையேற்றம், நடைப்பயணம் போன்ற பொழுதுபோக்கு அம்சங்களுக்கு ஏற்ற சூழல் அமைந்திருப்பதும் விசேஷமான அம்சமாகும்.

பல்விதமான சுற்றுலா செயல்பாடுகள் மற்றும் பொழுதுபோக்கு அம்சங்களை தன்னுள் கொண்டிருக்கும் இந்த மால்ஷேஜ் காட் வருடமுழுவதும் ஏராளமான சுற்றுலாப்பயணிகளை ஈர்க்கின்றது. அது ஏன் என்பதை ஒரு முறை நீங்கள் இந்த ஸ்தலத்துக்கு விஜயம் செய்தால் உடனே புரிந்துகொள்வீர்கள்.Post Comment

Post Comment