சொந்த அனுபவத்தில் சென்னை வெள்ளத்தை படமாக்கிறார் லட்சுமி ராமகிருஷ்ணன்!


Posted by-Kalki Teamசென்னையில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளை தனது அடுத்த படத்தின் கதைக்களமாக்கியுள்ளார் நடிகையும், இயக்குநருமான லட்சுமி ராமகிருஷ்ணன்.

தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மூலம் பிரபலமாகி, சினிமாவில் நல்ல குணச்சித்திர நடிகையாக வலம் வருபவர் நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன்.

நடிப்பு மட்டுமின்றி ஆரோகணம், நெருங்கி வா முத்தமிடாதே உள்ளிட்ட படங்களை இயக்கி, திறமையான இயக்குநர் என்ற இடத்தையும் தமிழ் சினிமாவில் பெற்றுள்ளார் இவர்.

தற்போது இவரது இயக்கத்தில் அம்மணி என்ற படம் தயாராகி வருகிறது. இப்படத்தில் மிகவும் வயதான பாட்டி ஒருவர் தான் நாயகி என்பது சிறப்பு.

இப்படத்தைத் தொடர்ந்து தனது புதிய பட வேலைகளைத் துவக்கி விட்டார் லட்சுமி ராமகிருஷ்ணன்.

இப்படத்தின் கதைக்களம் சென்னை வெள்ள பாதிப்பு பற்றியதாம்.

வெறும் வெள்ளத்தை மட்டும் காட்டாமல், அந்த சமயத்தில் பாதிக்கப்பட்ட மக்களுடைய மனநிலை எப்படி இருந்தது, அந்த நெருக்கடியில் இருந்து எப்படி அவர்கள் மீண்டு வருகின்றனர் என்பதைப் பற்றி அப்படம் பேச இருக்கிறதாம்.

இப்படத்திற்கான முதற்கட்ட பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. ஜூலை மாதம் முதல் படப்பிடிப்பு தொடங்க லட்சுமி ராமகிருஷ்ணன் திட்டமிட்டிருப்பதாகத் தெரிகிறது.

இந்தப்படம் மனிதநேய பார்வையில் இருக்கும் எனக் கூறும் லட்சுமி, ஒரு நாயகனை முன்னிலைப்படுத்தி தயார் பண்ண இருக்கிறாராம். இரு காதலர்கள், ஓர் ஓட்டுநர், இரு வயதானவர்கள், ஒரு ஆர்ஜே (பாலாஜி அல்ல) ஆகியோர் தான் படத்தின் முக்கிய கதாபாத்திரங்கள்.

அதோடு, பேரழிவை மையப்படுத்தியோ, ஒருவன் எப்படி 100 பேரைக் காப்பாற்றினான் என்றோ இல்லாமல், மனிதர்கள் எப்படி பேரழிவின் பின் ஒன்றிணைந்து செயல்பட்டார்கள் என்பதைப் பற்றி தனது படம் பேசும் என்கிறார் லட்சுமி ராமகிருஷ்ணன்.

இந்த வெள்ளத்தின் போது லட்சுமி ராமகிருஷ்ணனும் தனது குடும்பத்தோடு பாதிக்கப்பட்டார். அப்போது ஏற்பட்ட அனுபவம் தான் இந்தக் கதையை எழுத அவரைத் தூண்டியதாம்.

அதிகமாக கிராபிக்ஸ் காட்சிகள் துணையுடன் இப்படம் தத்ரூபமாக உருவாக இருக்கிறதாம். இது தொடர்பாக சில கிராபிக்ஸ் வல்லுநர்களிடமும் லட்சுமி ராமகிருஷ்ணன் பேசியுள்ளாராம்.

இப்படத்தில் நாயகனாக அசோக் செல்வனும், நாயகியாக ப்ரியா ஆனந்தும் நடிப்பார்கள் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. நாசரிடமும் முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் நடிக்க பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது.

பருவமழை சமயத்தில் படத்தின் முக்கிய காட்சிகளை படமாக்க லட்சுமி ராமகிருஷ்ணன் திட்டமிட்டுள்ளார். அப்படி செய்தால் காட்சிகள் உண்மைத்தன்மை நிரம்பியதாக இருக்கும் என்பது அவரது நம்பிக்கை.

ஏற்கனவே, இயக்குநர் வசந்தபாலனின் புதிய படத்தின் கதைக்களமும் சென்னை வெள்ளம் பற்றியது என சமீபத்தில் தகவல்கள் வெளியானது. அப்படத்திற்கு செம்பரம்பாக்கம் எனப் பெயர் வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.


Post Comment

Post Comment