கண்பார்வையற்ற கொலைகாரனாக உருமாறும் விக்ரம்... ஹாலிவுட் ரீமேக்கில் நடிக்கிறார்!


Posted by-Kalki Teamவிக்ரமின் அடுத்த படம் ஹாலிவுட் ரீமேக் என சொல்லப்படுகிறது.

நானே சொந்தமாக யோசித்து படமெடுக்கிறேன் என்று படுத்தி எடுக்கும் இயக்குனர்களுக்கு மத்தியில், ஹிட்டான நல்ல கதையை ரீமேக் செய்து திருப்திபடுத்தும் இயக்குனர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.

அப்படிப்பட்ட இயக்குனராக மாற முயற்சிப்பவர், தூங்காவனம் திரைப்படத்தை இயக்கிய ராஜேஷ் செல்வா. இவர் அடுத்தாத விக்ரமை வைத்து ஒரு படம் இயக்க உள்ளார். தூங்காவனம் திரைப்படமும் "ஸ்லீப்ல்ஸ் நைட்" என்ற ஃப்ரெஞ்ச் படத்தின் ரீமேக் தான்.

"நான் தாய்க்கு பிறந்தவன் இல்ல பேய்க்குப் பிறந்தவன்" என உலகமகா பஞ்ச் டயலாக்கோடு விக்ரம் நடித்த சாமி ஸ்கொயர் திரைப்படம் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. அடுத்ததாக ராஜேஷ் செல்வா இயக்கத்தில் கமல்ஹாசன் தயாரிப்பில் விக்ரம் நடிக்க உள்ள படம் 2016ஆம் ஆண்டு வெளியான "டோண்ட் ப்ரீத்" திரைப்படத்தின் தமிழ் ரீமேக் என தகவல் வெளியாகி இருக்கிறது.

ஃபெடி அல்வரேஸ் இயக்கத்தில் ஸ்டீபன் லாங், ஜேன் லெவி, டைலன் மின்னட் மற்றும் சிலர் நடித்த படம் டோண்ட் பிரீத். ஏன் மற்றும் சிலர் எனக் குறிப்பிடுகிறேன் என்றால் படத்தில் மொத்தமே 6 பேர் தான் இருப்பார்கள். கண்பார்வை இல்லாத ஓய்வு பெற்ற ராணுவர் வீரர் ஒருவர் வீட்டில் தனியாக வசிக்கிறார். அந்த வீட்டில் கொள்ளையடிக்க ஒரு இளைஞர் குழு திட்டமிடுகிறது.

ஆனால், அந்த பார்வையற்ற மனிதர் திருடர்களை போட்டுத் தள்ளிவிடுவார். கண்பார்வையோடு திடகாத்திரமாக இருக்கும் இளைஞர்களை பார்வையற்ற வயதானவர் எப்படி சாகடிக்கிறார் என்பது நல்ல த்ரில்லிங் அனுபவமாக இருக்கும். ஒவ்வொரு நிமிடமும் திகிலூட்டும் இந்த படத்தில் பார்வையற்றவராக ஸ்டீபன் லாங் நடித்திருந்தார். அந்த படத்தில் மசாலா எதுவும் தடவாமல் கதையை மட்டும் எடுத்திருந்தனர்.

தமிழில் ரீமேக் ஆகும்போது சில விஷயங்கள் சேர்க்கப்படலாம். குறிப்பாக த்ரில்லர் படங்களில் காமெடியை புகுத்துவது ட்ரெண்டாகி வருகிறது. அப்படத்தில் த்ரில்லர் காட்சிகளில் அர்த்தமுள்ள நகைச்சுவை காட்சிகளை வைக்க நிறைய வாய்ப்புகள் உண்டு. அதை ராஜேஷ் செல்வா பயன்படுத்திக்கொள்ளலாம். அல்லது அப்படியே தமிழில் ரீமேக் செய்தாலும் மிகச்சிறந்த த்ரில்லர் படமாக அமையும். இப்படத்தில் விக்ரமுடன் ஸ்ருதிஹாசன் நடிக்க உள்ளதாக பேச்சு அடிபடுகிறது.

நடிகர் விக்ரம் விஜய் இயக்கத்தில் தாண்டவம் படத்தில் இப்படியான ஒரு கதாபாத்திரத்தில் ஏற்கனவே நடித்திருந்தார். அதே போல காசி படத்தில் பார்வையற்ற இளைஞனாக அவர் ஏற்கனவே நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.Post Comment

Post Comment