பிள்ளைகளுக்கான 5 நிமிட பயிற்சியும்... அற்புத மாற்றங்களும்...


Posted by-Kalki Teamபிள்ளைகள் சிறப்பான திறன் மேம்பாட்டை வளர்க்க தினசரி பயிற்சிக்கு ஒவ்வொரு நாளும் சில நிமிடங்கள் ஒதுக்கினாலே போதும். தன்னம்பிக்கை வளர்த்து தங்களை உயர்த்தும்.

பள்ளிப் பருவத்தில் இருந்தே ஒரு ஒழுங்கு முறையுடன் செயல்படுபவர்களுக்கு வெற்றிகள் குவியும். அவர்கள் சிறந்த மாணவராகவும், எதிர்கால தலைவராகவும் உச்சம் தொடுவது நிச்சயம். அப்படி சிறப்பான திறன் மேம்பாட்டை வளர்க்கும், தினசரி பயிற்சிக்கு ஒவ்வொரு நாளும் சில நிமிடங்கள் ஒதுக்கினாலே போதும். தன்னம்பிக்கை வளர்த்து தங்களை உயர்த்தும் அந்த பயிற்சிகளை அறிவோமா...

சுவாசப் பயிற்சி: நமது சுவாசம் உயிர்வாழ மட்டுமல்ல உற்சாகத்திற்கும் அவசியமாகும். தூய்மையான காற்றும், அதிகமான ஆக்சிஜனும், மூளையை சுறுசுறுப்பாக்கும் மூச்சுப் பயிற்சி மூலம் காசு கொடுக்காமலே இந்த உற்சாக டானிக்கை உடலில் ஏற்றிக் கொள்ளலாம். தினசரி காலையில் எழுந்ததும் 5 நிமிடங்களுக்கு மூச்சுப் பயிற்சி செய்வதை வழக்கமாக்கினால் முன்னேற்றம் தேடி வரும் என்பது முன்னோர் கூறிய அமுதவாக்காகும்.

பிரச்சினையான ஒரு சூழலில், சில வினாடிகள் அமைதியாக மூச்சுப் பயிற்சி மேற்கொண்டால் மனம் தெளிவடைவதை உடனே உணரலாம். மூச்சுப் பயிற்சி செய்வதற்கு தேர்ந்த வழிமுறைகள் இருக்கின்றன. இருந்தாலும் சாதாரணமாக மூச்சை இழுத்துவிடும் முறையிலேயே பயிற்சி செய்யலாம். நீளமாக மூச்சை இழுத்து நிதானமாக வெளியிடுவதுதான் மூச்சுப் பயிற்சியின் முக்கிய அம்சம். முடிந்தால் ஒரு நாசித் துவாரத்தை மூடிக் கொண்டு மூச்சை நீளமாக இழுத்து நிதானமாக வெளியிட்டு பழகுங்கள். அதேபோல சில முறை மறு நாசித் துவாரத்தின் வழியே பயிற்சி செய்யலாம். அமைதியான சூழலில், காற்றோட்டமான இடத்தில் இதைச் செய்தால் பலன் பெருகும். குறைந்தபட்சம் 5 நிமிடம் முதல் அதிகபட்சம் 20 நிமிடம் செய்வதால் சிறந்த முன்னேற்றம் கிடைப்பதை உடலும், மனமும் உணரத் தொடங்கும்.

பலத்தை அதிகரியுங்கள் : உடலும், மனமும் பலமாக இருந்தால் நினைத்ததை சாதிக்கலாம். கடும் பயிற்சியால் உடலை பலப்படுத்துவதைவிட, திட சிந்தனையால் மனதை பலப்படுத்தி காரியங்களை கைகூட வைக்க முடியும். நேர்மறையான எண்ணங்களை வளர்த்து, என்னால் முடியும் என்ற தன்னம்பிக்கையால் மனம் உறுதி பெறும். எண்ணியன எல்லாம் ஈடேறத் தொடங்கும். முடிந்தால் உடல் வலுவையும் அதிகரித்து பலவானாகவும் திகழுங்கள்.

தினசரி மதிப்பீடு: எந்த சூழ்நிலையிலும் நம்பிக்கையை கைவிடாதவர்கள், மற்றவர்களிடம் இருந்து வித்தியாசமாக சிந்தித்து செயல்பட்டவர்களை வெற்றி என்றும் தழுவியிருக்கிறது. நீங்கள் நம்பிக்கையுடன் இருங்கள், மற்றவர்களுடன் இணக்கமாக செயல்படுங்கள். மற்றவர்களைவிட்டு மாறுபட்டு செயல்படுங்கள். ஒவ்வொரு நாளும் உங்கள் பணிகளை திறம்பட செய்தால் வெற்றி உங்கள் வசமாவதை உணர்வீர்கள். தினசரி உங்களுக்கு நீங்களாவே சொல்லுங்கள், “நான் உயர்கிறேன், வெற்றி பெறுகிறேன்” என்று. நிச்சயம் ஓர் நாள் வெற்றி சிகரத்தின் மீது நிற்பீர்கள்!


Post Comment

Post Comment