பாற்கடலை கடைந்தபோது வெளிவந்தவை :


Posted by-Kalki Teamஅமிர்தம் பெறுவதற்காக தேவர்களும், அசுரர்களும் இணைந்து, மந்தார மலையை மத்தாக்கி கடையக் கடைய அபூர்வ சக்திகள் கொண்ட பல பொருள்கள் வெளிவந்தன.

அமிர்தம் பெறுவதற்காக தேவர்களும், அசுரர்களும் இணைந்து, மந்தார மலையை மத்தாக்கி, வாசுகி என்ற பாம்பை கயிறாகக் கொண்டு திருப்பாற்கடலைக் கடைந்தனர். தேவர்களும், அசுரர்களும் இரு பக்கமும் பிடித்து இழுத்ததில் மலையில் உடல் அழுந்தி ஏற்பட்ட வலியால், வாசுகி பெரும் மூச்சு விட்டது. அது விஷமாக மாறி கடலில் கலந்து ஆலகால விஷமாக வெளிப்பட்டது. ‘அனைத்து பிரபஞ்சங்களையும் அழிக்கும் வல்லமை கொண்ட அந்த விஷத்தை அழிப்பது எப்படி?’ என தெரியாமல் அனைவரும் அஞ்சி ஓடினர்.

உலகத்தை காக்கும் சர்வேஸ்வரரான சிவபெருமான், அந்த விஷத்தை எடுத்து வாயில் போட்டுக் கொண்டார். அந்த விஷம் ஈசனை எதுவும் செய்துவிடக்கூடாது என்பதற்காக, அவரது தொண்டை பகுதியை அழுத்திப் பிடித்து, உடலுக்கும் விஷம் இறங்காமல் தடுத்தாள் பார்வதி தேவி. விஷமானது ஈசனின் தொண்டையிலேயே நின்று விட்டது. இதனால் அவரது கழுத்துப்பகுதி நீலநிறமாக மாறியது. இதன் காரணமாகவே அவர் ‘நீலகண்டன்’ என்ற பெயரைப் பெற்றார்.

முதலாவதாக வெளிவந்த ஆலகால விஷத்தை சிவபெருமான் எடுத்து அருந்திய பின், பயம் தெளிந்த தேவர்களும், அசுரர்களும் மீண்டும் மலையை கடைய முற்பட்டனர். மலையை கடையக் கடைய அபூர்வ சக்திகள் கொண்ட பல பொருள்கள் வெளிவந்தன.

திருப்பாற்கடலை கடையும்போது வெளிவந்தவைகள்:

* ஆலகால விஷம்

* காமதேனு

* உச்சை சிரவஸ் என்னும் வெள்ளைக்குதிரை

* ஐராவதம் என்னும் வெள்ளை யானை

* கற்பக விருட்சம்

* அப்சரஸ்திரிகள்

* அகலிகை என்ற அழகான பதுமை

* திருமகள் என்னும் லட்சுமி

* அமுத கலசத்துடன் வெளிவந்த தன்வந்திரி


Post Comment

Post Comment