சிதம்பரம் நடராஜர் கோவிலும் - ஆனி திருமஞ்சனமும் :


Posted by-Kalki Teamஆனி திருமஞ்சன தினத்தன்று சாமியை தரிசனம் செய்தால், மக்களின் வேண்டுதல்கள் அனைத்தும் மிக விரைவில் நிறைவேறும். மக்கள் நல்ல பயனை அடைவார்கள்.

பூலோக கைலாயமாக விளங்கும் சிதம்பரத்தில் நடராஜர் கோவில் உள்ளது.இங்கு ஆண்டுக்கு 2 முறை உற்சவங்கள் நடைபெறுகிறது. ஒன்று ஆனி திருமஞ்சனம், 2-வதாக மார்கழி மாத திருவாதிரையில் ஆருத்ரா தரிசனம். இந்த ஆண்டுக்கான ஆனி திருமஞ்சன மகாஉற்சவம் இந்த மாதம் 12-ந் தேதி கொடி ஏற்றத்துடன் தொடங்கியது.

இதைத்தொடர்ந்து தினமும் 2 வேளைகளிலும் வாகனங்களில் 4 வீதிகளில் சாமி உலா வரும் நிகழ்ச்சி நடந்தது. நாளை (20-ந் தேதி) தேரோட்டம் நடக்கிறது. மூலவரும் உற்சவருமான ஆனந்த நடராஜரும், சிவகாமி அம்மனும் திருத்தேரில் எழுந்தருளி அருள்பாலிக்கின்றனர். இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசிக்கிறார்கள்.

21-ந் தேதி இன்று ஆனிதிருமஞ்சன நிகழ்ச்சி நடக்கிறது. அதிகாலை 2 மணியில் இருந்து காலை 6 மணி வரை அபிஷேகம் நடக்கிறது. இந்த அபிஷேகத்தை காண்பது மனிதர்களின் பெரும்பாக்கியம்.

ஆனிதிருமஞ்சனத்தின் பயன்கள்

ஆனி திருமஞ்சன தினத்தன்று சாமியை தரிசனம் செய்தால், மக்களின் வேண்டுதல்கள் அனைத்தும் மிக விரைவில் நிறைவேறும். மக்கள் நல்ல பயனை அடைவார்கள். வாழ்வில் முன்னேற்றம் ஏற்படும். ஆண்-பெண் இருபாலரின் திருமணம் போன்ற வைபவங்கள் நடக்கும்.

இந்த ஆனியை தொடர்ந்து ஆவணி, ஐப்பசி, கார்த்திகை, மார்கழி, தை என மாதங்கள் வளர்ந்து வரும். அந்த காலங்களில் பக்தர்களின் வேண்டுதல்கள் நிறைவேறும். அனைத்து பக்தர்களும் அவரவர்களின் ஊர்களுக்கு அருகே உள்ள சிவன் கோவிலுக்கு சென்று அங்கு நடைபெற கூடிய ஆனி திருமஞ்சன மகாஅபிஷேகத்தில் தங்களால் முடிந்த அபிஷேக பொருட்களை கொடுத்து அபிஷேகம் செய்ய வேண்டும்.

அவ்வாறு செய்தால், பல்வேறு நற்பயன்கள் கிடைக்கும். அபிஷேகம் செய்யப்படும் ஒவ்வொரு பொருட்களும் அதற்கு கிடைக்கும் பலன்களும் வருமாறு:-

அபிஷேக பொருட்களின் பயன்கள்

பால்:- சந்ததி உண்டாகும்.

தயிர்:- சந்ததி வளம் பெறும்.

தேன்:- குரல் வளம் கிடைக்கும்.

பஞ்சாமிர்தம்:- எதிரிகள் அழிக்கப்படுவார்கள்.

நாட்டுச்சர்க்கரை:- எமபயம் நீங்கும்.

சந்தனம்:- வாழ்வு சிறக்கும்.

விபூதி:- எண்ணங்கள் நிறைவேறும்.

பழச்சாறு:- குடும்பம் வளர்ச்சியை பெறும்.

கங்கா தீர்த்தம்:- ஞானம் உண்டாகும்.

எலுமிச்சை சாறு:- நினைத்தது எல்லாம் கிடைக்கும்.

பக்தர்கள் தங்களுடைய வேண்டுதலுக்கேற்ப இதுபோன்ற அபிஷேக பொருட்களை கொடுத்து பலன் பெறலாம். இதுமட்டு மின்றி பட்டு உள்ளிட்ட வஸ்திரங்கள், வாசனை திரவியங்கள் உள்ளிட்ட பொருட்களையும் பக்தர்கள் வழங்கலாம். இதன் மூலம் பக்தர்களின் வாழ்வில் மேன்மை உண்டாகும்.

மலர் மாலைகள், பூச்சரங்கள், வாசனைமிக்க பூக்களை வைத்து இறைவனை அர்ச்சித்தால் நமக்கு நல்ல பயன்கள் கிடைக்கும். இறைவனால் அளிக்கப்பட்ட பொருட்களை இறைவனுக்கே நாம் அர்ப்பணித் தால் நமக்கு பல மடங்கு பலன் கிடைக்கும்.

எல்லா வற்றிற்கும் மேலாக இறை வனுக்கு படைக்கப்பட்ட பிரசாதங்களை ஆனி திருமஞ்சனத்தன்று பெறுவது மிகபாக்கியமாக கருதப்படுகிறது.

வழிபாடு

ஆனி திருமஞ்சன வழிபாடு சிதம்பரம் நடராஜர் கோவில் மற்றும் தமிழகத்தில் உள்ள சிவாலயங்களில் மட்டுமல்லாமல் உலகில் உள்ள அனைத்து நடராஜர் சன்னதிகளிலும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

சிங்கப்பூர், மலேசியா, ஆஸ்திரேலியா மற்றும் பல்வேறு வெளிநாடுகளில் வசிக்கும் தமிழர்கள் ஆனி திருமஞ்சன விழாவை சிறப்பாக கொண்டாடுகிறார்கள்.

விஞ்ஞானிகள் வியப்பு

ஜெனீவாவுக்கும், சுவிட்சர்லாந்துக்கும் நடுவில் இருக்கக்கூடிய அணுஆராய்ச்சி கூடத்தில் சிதம்பரம் நடராஜரின் முழுஉருவச்சிலையை நிறுவி இருக்கிறார்கள். நடராஜர் வழிபாட்டிற்கு நம்முன்னோர்கள் எவ்வளவு முக்கியத்துவம் கொடுத்துள்ளார்கள் என்பதற்கு இதுவே சான்று.

அங்கு வைக்கப் பட்டுள்ள சிதம்பரம் நடராஜரின் முழுஉருவ சிலையானது உலக விஞ்ஞானிகளே வியக்கும் வகையில் தத்ரூபமாக அமைக் கப்பட்டுள்ளது.

பஞ்சபூதங்களையும் தன்னுள் அடக்கி ஆள்பவராக நடராஜரின் சிலை அமைப்பு காணப்படுகிறது. அண்டத்தில் உள்ளது பிண்டத்தில் உள்ளது. பிண்டத்தில் உள்ளது அண்டத்தில் உள்ளது என்று மேற்கோள் காட்டும் விதமாக மனித உடலின் இயக்கங்கள் பஞ்சப்பூதத்தை ஒன்றி உள்ளது என்ற திருமூலரின் சொல்லுக்கிணங்க மனிதனுடைய இயக்கமும், பிரபஞ்சத்தின் இயக்கமும் பஞ்சபூதத்தின் ஆட்சியின் கீழ் நடைபெறுகிறது என்பதை சிதம்பரம் நடராஜர் சிலை அமைப்பு விளக்குகிறது.

நடராஜரின் திருவுருவ சிலையில் வலது மேல் கையில் உடுக்கையும் (படைத்தல்), இடது மேல் கையில் அக்னியும் (அழித்தல்), வலது கை அபயஹஸ்தம் (காத்தல்), வலது ஊன்றிய பாதம் (ஆணவங்களை நீக்குதல்), தூக்கிய திருவடி (அருள் பொழியும் தன்மை)ஆகியவற்றை கொண்டு விளங்குகிறது. இடது கீழ் கையானது தூக்கிய திருவடியை காட்டும் வண்ணம் அமைந்துள்ளது.


Post Comment

Post Comment