குழந்தை வரம் தருவான் மல்லேஸ்வரம் ஸ்ரீவேணுகோபாலன்!


Posted by-Kalki Teamகர்நாடக மாநிலத்தின் குருவாயூர் என்று போற்றப்படுகிறது, மல்லேஸ்வரம் ஸ்ரீவேணுகோபால ஸ்வாமி ஆலயம். பெங்களூரு நகரில், மல்லேஸ்வரம் எனும் இடத்தில் அற்புதமாக அமைந்துள்ளது இந்தத் திருக்கோயில். தலம், தீர்த்தம், மூர்த்தம் எனப் பல சிறப்புகளைக் கொண்ட இந்தக் கோயிலில், ஸ்ரீருக்மிணியுடன்

ஸ்ரீவேணுகோபால ஸ்வாமி அழகு ததும்பக் காட்சி தருகிறார். இங்கே உள்ள ஸ்ரீகிருஷ்ண புஷ்கரணி தீர்த்தமும் பாரிஜாத ஸ்தல விருட்சமும் ரொம்பவே விசேஷம்! மைசூர் மகாராஜா, ஸ்ரீவேணுகோபாலன் மீது கொண்ட பக்தியால், இந்தக் கோயிலைக் கட்டுவித்தார் என்கிறது ஸ்தல வரலாறு.

இங்கே உள்ள மூலவர், ராஜா தன் அரண்மனையிலேயே வைத்து வழிபட்ட மூர்த்தம் என்றும், பிறகு இங்கு பிரதிஷ்டை செய்து மன்னர் வழிபடத் துவங்கினார் என்றும் சொல்கிறார்கள். அதைத் தொடர்ந்து, மூலவருடன் ஸ்ரீருக்மிணி தாயாருக்கும் ஸ்ரீநம்பி நாராயணருக்கும் மூர்த்தங்கள் வடிவமைக்கப்பட்டு, சந்நிதியில் பிரதிஷ்டை செய்யப்பட்டன!

கர்நாடகத்தில் உள்ள மேல்கோட்டை தலத்தில் அமைந்ததுபோல், இங்கே உள்ள ஸ்ரீநம்பி நாராயணரின் திருவுருவ விக்கிரகமும் அபார அழகு! இங்கே ஸ்ரீராமர், ஆழ்வார்கள், ஸ்ரீசக்கரத்தாழ்வார் ஆகியோரும் சந்நிதி கொண்டு அருள்கின்றனர்.

இங்கே பத்து நாள் விழாவாக அமர்க்களப்படுகிறது கிருஷ்ண ஜயந்தி விழா. ஸ்ரீவேணுகோபாலனுக்குத் திருமஞ்சனம், தங்கக்கவசம் சார்த்துதல், நாலாயிரத் திவ்விய பிரபந்தம் வாசித்தல், உறியடித் திருவிழா என ஒவ்வொரு நாளும் களை கட்டுகிறது திருவிழா.

தினமும் மதியவேளையில் அன்னதானம் நடைபெறும். குழந்தை பாக்கியம் முதலான சகல சந்தோஷங்களையும் பக்தர்களுக்கு வாரி வழங்கி அருளும் தலம் என்பதால், இதனை கர்நாடகத்தின் குருவாயூர் எனப் போற்றுகின்றனர், பக்தர்கள்.Post Comment

Post Comment