வரம் தரும் பெருமாள் கோவில் கும்பாபிஷேகம் :


Posted by-Kalki Teamநெல்லை தச்சநல்லூர் வரம்தரும் பெருமாள் கோவில் கும்பாபிஷேகம் 126 ஆண்டுகளுக்கு பிறகு நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

நெல்லை தச்சநல்லூரில் வரம்தரும் பெருமாள் கோவில் உள்ளது. இந்த கோவில் 700 ஆண்டுகளுக்கு முந்தைய பழமையானது. இந்த கோவிலில் 126 ஆண்டுகளுக்கு முன்பு கும்பாபிஷேகம் நடந்தது. இந்த நிலையில், இந்த கோவிலுக்கு கும்பாபிஷேகம் நடத்த இந்த சமய அறநிலையத்துறை சார்பில் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.

இதை முன்னிட்டு, கோவிலில் கடந்த 6-7-2017 அன்று பாலாயம் செய்யப்பட்டது. கோவில் உள்பிரகாரம், மேல்தளம், தரைதளம் மற்றும் மூலவர் சன்னதி, கோபுர விமானம் ஆகியவற்றில் திருப்பணிகள் நடந்தன.

கடந்த 30-ந் தேதி காலை 9 மணிக்கு அனுக்ஞை பூஜையூடன் கும்பாபிஷேக விழா தொடங்கியது. தொடர்ந்து வாஸ்து சாந்தி, காரிய சித்தி, சுதர்சன ஹோமம், லட்சுமி பூஜை, தன பூஜை, தானிய பூஜை, கோ பூஜை ஆகியவை நடந்தன.

அன்று மாலை 5 மணிக்கு தாமிரபரணியில் இருந்து புனிதநீர் கொண்டு வரப்பட்டு யாகசாலையில் வைக்கப்பட்டது. இரவு 7 மணிக்கு யாகசாலை பூஜை தொடங்கியது. நேற்று முன்தினம் காலையிலும், மாலையிலும் யாகசாலை பூஜை நடந்தது. தொடர்ந்து சிறப்பு பூர்ணாகுதி, தீபாராதனையும் நடந்தது.

நேற்று காலையில் சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. காலை 5 மணிக்கு யாகசாலை, சிறப்பு பூர்ணாகுதி, தீபாராதனையும் நடந்தது. காலை 7 மணி அளவில் கோபுர கலசங்கள், விமான கலசங்கள், பரிவார மூர்த்திகளுக்கு புனிதநீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடந்தது.

இந்த நிகழ்ச்சியில் கோவில் செயல் அலுவலர் தேவி, ஆய்வாளர் முருகானந்தம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

மதியம் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. மாலையில் பெருமாள், ஸ்ரீதேவிக்கு திருக்கல்யாண நிகழ்ச்சி நடந்தது. இரவு 8 மணிக்கு கருடசேவை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியிலும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.


Post Comment

Post Comment