மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழா தொடக்கம் :


Posted by-Kalki Teamமதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் திரளாக பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

அலங்கரிக்கப்பட்ட கொடி மரத்திற்கு சிறப்பு தீபாராதனை நடந்தபோது எடுத்தபடம்.

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்த திருவிழா வருகிற 29-ந்தேதி வரை நடக்கிறது. காப்பு கட்டிய ரமேஷ் என்ற செல்லப்பா பட்டர் 62 அடி உயர கொடிக்கம்பத்தில் ரிஷபம் வரைந்த கொடிப்பட்டத்தை ஏற்றினார். பின்பு கொடிமரத்திற்கு பால், பன்னீர், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட பொருட்களால் அபிஷேகம் செய்து புனிதநீர் ஊற்றப்பட்டது.

அப்போது மீனாட்சி அம்மனும், சுந்தரேசுவரரும் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தனர். கொடியேற்றம் நடந்த பிறகு மேலே இருந்து மலர்கள் தூவப்பட்டன. பின்னர் இரவில் கற்பக விருட்சம் மற்றும் சிம்ம வாகனங்களில் சுந்தரேசுவரரும், மீனாட்சி அம்மனும் எழுந்தருளி மாசி வீதிகளில் வலம் வந்தனர்.

கொடியேற்ற நிகழ்ச்சியில் மீனாட்சி அம்மன் கோவில் தக்கார் கருமுத்து கண்ணன், மாநகர போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால், கோவில் இணை கமிஷனர் நடராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

திருவிழாவில் இன்று(வியாழக்கிழமை) காலை தங்கச்சப்பரத்தில் அம்மனும், சுந்தரேசுவரரும், இரவு பூத வாகனத்தில் சுந்தரேசுவரரும், அன்ன வாகனத்தில் மீனாட்சி அம்மனும் எழுந்தருளி, மாசி வீதிகளில் வலம் வருகிறார்கள்.

கொடியேற்றம் முடிந்தபின் கோவில் தக்கார் கருமுத்து கண்ணன் நிருபர்களிடம் கூறியதாவது:-

சித்திரை திருவிழாவின் முக்கிய விழாவான திருக்கல்யாணம் வருகிற 27-ந்தேதி(வெள்ளிக்கிழமை) நடக்கிறது. இதற்காக திருக்கல்யாண மேடை வெளிநாட்டு, உள்நாட்டு மலர்களால் அலங்கரிக்கப்பட உள்ளது. திருக்கல்யாண மண்டபத்தில் குளுகுளு வசதியும் செய்யப்பபட உள்ளது. 14 ஆயிரம் பக்தர்கள் திருக்கல்யாணத்தை காணும் வகையில் பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. இதில் 6 ஆயிரம் பேர் இலவசமாகவும், மீதி உள்ளவர்கள் கட்டணம் செலுத்தியும் திருக்கல்யாணத்தை காணலாம். இதற்கான ஆன்லைன் டிக்கெட் பதிவு தொடங்கப்பட்டு விட்டது.

திருக்கல்யாணம் முடிந்த பின்னர் சாமி பழைய திருக்கல்யாண மண்டபத்திற்கு கொண்டு செல்லப்பட்டு, அங்கு காலை 10 மணி முதல் 5 மணி வரை பக்தர்கள் சாமி தரிசனம் செய்யலாம். கடந்த ஆண்டு போன்றே இந்த ஆண்டும் அதே வழிகளில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள். திருக்கல்யாணம் முடிந்த பின்னர் மொய்ப் பணம் சித்திரை, ஆடி வீதிகளில் கோவில் ஊழியர்களால் மட்டுமே வசூலிக்கப்படும். வேறு எந்த பகுதியில் மொய்ப்பணம் வசூலிக்கப்படமாட்டாது. அப்படி வசூலிப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

தீ விபத்தில் சேதம் அடைந்த வீரவசந்தராயர் மண்டபத்தில் சேதம் அடைந்த தூண்கள் மற்றும் பகுதிகள் 90 சதவீதம் அகற்றப்பட்டு விட்டது. மேலும் ஐ.ஐ.டி. துறையினரின் அறிக்கை வந்த பின்னர் சீரமைப்பு பணிகள் தொடரும். கற்களின் மாதிரிகளையும் அவர்கள் ஆய்வு செய்து வருகிறார்கள். இதுதவிர அடுத்த ஆய்வு கூட்டம் முடிந்த பின்னர் வீரவசந்தராயர் மண்டப பகுதியில் உள்ள ஆயிரங்கால் மண்டபம் பக்தர்களின் வசதிக்காக திறக்கப்படும். இதற்காக வடக்கு ஆடி வீதியில் புதிதாக வழி ஒன்றை ஏற்படுத்த உள்ளோம்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.


Post Comment

Post Comment