#பேபி கார்ன் வெஜிடேபிள் நூடுல்ஸ் ;


Posted by-Kalki Team



மாலையில் குழந்தைகளுக்கு பிடித்தவாறு ஏதேனும் சமைத்துக் கொடுக்க நினைத்தால், பேபி கார்ன் வெஜிடேபிள் நூடுல்ஸ் செய்து கொடுங்கள்.

இது நிச்சயம் குழந்தைகளுக்கு ஓர் ஆரோக்கியமான ரெசிபியாக இருக்கும்.

மேலும் இது அவர்கள் விரும்பி சாப்பிடும் வகையிலும் இருக்கும். சரி, இப்போது பேபி கார்ன் வெஜிடேபிள் நூடுல்ஸை எப்படி செய்வதென்று பார்ப்போம். அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

#தேவையான பொருட்கள்:

நூடுல்ஸ் - 1 பாக்கெட்

பேபி கார்ன் - 1/2 கப் (ஓரளவு நீளமாக வெட்டியது)

கேரட் மற்றும் முட்டைக்கோஸ் - 1 கப்

குடைமிளகாய் - 1/4 கப்

பூண்டு - 2 டீஸ்பூன் (பொடியாக நறுக்கியது)

வெள்ளை வினிகர் - 1/2 டீஸ்பூன்

சோயா சாஸ் - 1/2 டீஸ்பூன்

ஸ்பிரிங் ஆனியன் - சிறிது

மிளகுத் தூள் - 1 டீஸ்பூன்

ஆலிவ் ஆயில் - 1 டேபிள் ஸ்பூன்

சர்க்கரை - 1/2 டீஸ்பூன்

உப்பு - தேவையான அளவு

#செய்முறை:

முதலில் ஒரு பாத்திரத்தில் நூடுல்ஸ் மூழ்கும் வரை தண்ணீர் ஊற்றி, 1/2 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி கொதிக்க விட வேண்டும். தண்ணீர் நன்கு கொதிக்க ஆரம்பிக்கும் போது, அதில் நூடுல்ஸைப் போட்டு வேக வைக்க வேண்டும். நூடுல்ஸ் வெந்ததும், அதனை இறக்கி, நீரை வடிகட்டி, குளிர்ந்த நீரில் ஒருமுறை அலசி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும். பின்பு ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி, நன்கு கொதித்ததும், அதில் பேபி கார்ன் சேர்த்து 2 நிமிடம் மூடி வைத்து வேக வைத்து இறக்கி, நீரை வடித்து தனியாக வைத்துக் கொள்ளவும். பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், பூண்டு மற்றும் ஸ்பிரிங் ஆனியன் சேர்த்து 1 நிமிடம் வதக்கி, பின் கேரட், முட்டைக்கோஸ் சேர்த்து தீயை அதிகரித்து நன்கு பச்சை வாசனை போக வதக்கவும், பின் அதில் குடைமிளகாய் சேர்த்து சிறிது நேரம் வதக்கி, அத்துடன் பேபி கார்ன் சேர்த்து நன்கு வதக்கவும். அடுத்து அதில் வினிகர் மற்றும் சோயா சாஸ் சேர்த்து கிளறி, மிளகுத் தூள், தேவையான அளவு உப்பு மற்றும் சர்க்கரை சேர்த்து 2 நிமிடம் நன்கு கிளறி விட வேண்டும். பிறகு அதில் வேக வைத்துள்ள நூடுல்ஸை சேர்த்து மீதமுள்ள எண்ணெய் சேர்த்து காய்கறிகளுடன் நூடுல்ஸ் சேருமாறு நன்கு பிரட்டி விட்டு இறக்கினால்

பேபி கார்ன் வெஜிடேபிள் நூடுல்ஸ் ரெடி!!!



Post Comment

Post Comment