யோகாசனத்துக்கு உடலைத் தயார் செய்வது எப்படி?


Posted by-Kalki Teamயோகாவை யார் செய்யலாம், எந்த நேரத்தில், எவ்வளவு நேரம் செய்யலாம், எந்த வயதினர் செய்யலாம், யோகாசனத்துக்கு உடலைத் தயார் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

உடலை இறுக்கமாக வைத்துக்கொள்ளாமல், இலகுவாக வைத்துக்கொள்ள வேண்டும். உடலை இறுக்கிப் பிடிக்காத, தளர்வான பருத்தி ஆடை அணிவது நலம். மேலும், யோகா செய்யும்போது, நம் உடலை உறுத்துகிற பெல்ட், கைக்கடிகாரம் போன்றவற்றையும் தவிர்ப்பது நல்லது. முக்கியமாக, ஆசனங்கள் செய்யும்போது நமக்கும் தரைக்கும் இடையே ஒரு விரிப்போ, பாயோ இருப்பது அவசியம். யோகப் பயிற்சிகள் செய்யும்போது நம்மில் இருந்து வெளிப்படும் நேர்மறை அலைகளை நமக்குள்ளேயே தக்கவைத்துக் கொள்ளவே இந்த ஏற்பாடு. இதைத் தவிர யோகா செய்ய வேறு எந்த உபகரணங்களும் தேவையில்லை. ஏனெனில் நம் உடலே ஒரு சிறந்த உபகரணம்!

சிலருக்கு காலையில் எழுந்ததும் காபி குடித்தால்தான் அந்த நாள் விடியும். அவர்கள் யோகா செய்வதற்கு முன்பு காபி குடிக்கலாமா, அல்லது பயிற்சி முடித்தபிறகுதான் குடிக்கவேண்டுமா, அல்லது பயிற்சிக்கு நடுவே சிறிய இடைவெளி எடுத்துக்கொண்டு காபி குடிக்கலாமா? இப்படி ஒரு சந்தேகமும் பலருக்கு எழலாம்.

காலை எழுந்தவுடன் வழக்கம்போல பல் துலக்கி, காலைக் கடன்களை முடிக்க பத்து நிமிடம் நம் வயிற்றுக்கு நேரம் கொடுத்தால், வயிற்றில் இருக்கும் கழிவு கள் தானே வெளியேறி, யோகா செய்வதற்கு உடல் தயாராகிவிடும். காலையில் பல் துலக்கிவிட்டு,வெறும் வயிற்றில் ஒரு டம்ளர் வெந்நீர் குடிப்பது, மலச்சிக்கல் இருப்பவர்களுக்கு மிகப் பெரிய அளவில் உதவும். ஒவ்வொருவர் உடல், வயிறு ஒவ்வொரு விதமாக இருக்கும். எனவே, எல்லோருக்கும் பொதுவாக ஏற்றுக்கொள்ளக்கூடிய வெந்நீரே காலையில் சிறந்தது. இவ்வாறு கடைபிடித்தும் மலச்சிக்கலுக்கு தீர்வு கிடைக்காதவர்களுக்கு ஏற்ற ஆசனங்களை, பின்வரும் அத்தியாயங்களில் தெரிந்து கொள்ளலாம்.

காலைக்கடன் கழித்தவுடன், நல்ல காற்றோட்டமான இடத்தில் அமர்ந்து யோகப்பயிற்சியைத் தொடங்கலாம். நல்ல வெளிச்சமான ஜன்னலோரம், வீட்டின் பால்கனி, அல்லது மொட்டை மாடி என நமக்கு வசதியான இடத்தில், கை, கால்களை சிரமமின்றி உயர்த்தி, நீட்டி, திருப்பி, பயிற்சி செய்ய ஏற்ற இடத்தை தேர்வு செய்துகொள்ளலாம்.

தேர்வு செய்த இடத்தில் ஒரு விரிப்பை போட்டு படுத்துக்கொண்டு, ஆரம்பத்தில் சவாசனம் அல்லது சாந்தி ஆசனத்தில் ஆரம்பிக்கலாம். கை, கால்களை நீட்டிய நிலையில் தரைவிரிப்பில் மல்லாந்து படுக்க வேண்டும். ஒன்று அல்லது ஒன்றரை அடி இடைவெளி விட்டு கால்களை அகன்ற நிலையில் வைத்துக் கொள்ளவும்.

கைகளை உடம்பைவிட்டு சற்று தள்ளி வைத்துக் கொள்ளவும். உள்ளங்கைகள் வானத்தை நோக்கி, அதாவது கூரையைப் பார்த்தவாறு இருக்கட்டும். தலையை நேராக வைத்துக் கொள்ளவும். தலையில் கிளிப், பேண்ட் போன்றவை இல்லாமல், முடியை தளர்வாக விடவும்.

உடம்பிலும் எந்தவித உறுத்தலும் இல்லாமல் நேராக படுத்துக்கொண்டு, 9 - 15 முறை பொறுமையாக மூச்சை இழுத்து விட வேண்டும். இதன்மூலம் நம் உடலையும் மனதையும் யோகப் பயிற்சிக்கு தயார் செய்கிறோம்.


Post Comment

Post Comment