சாவித்திரி வேடத்தில் நடிக்கும் கீர்த்தி சுரேஷ் தோற்றம் வெளியானது :


Posted by-Kalki Teamநடிகையர் திலகம் படத்தில் சாவித்திரி வேடத்தில் நடிக்கும் கீர்த்தி சுரேஷ் தோற்றம் சமூக வலைதளங்களில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

தமிழ், தெலுங்கு பட உலகில் 1950 மற்றும் 60-களில், 300-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து முன்னணி கதாநாயகியாக இருந்த சாவித்திரி இறுதிகாலத்தில் சொந்தமாக படம் தயாரித்து நஷ்டமடைந்து சொத்துக்களையெல்லாம் இழந்து 46-வது வயதில் வறுமையில் இறந்தார். அவரது வாழ்க்கை தமிழில் நடிகையர் திலகம் என்ற பெயரிலும், தெலுங்கில் மகாநதி என்ற பெயரிலும் சினிமா படமாகிறது.

சாவித்திரி வேடத்தில் கீர்த்தி சுரேஷும், ஜெமினி கணேசனாக துல்கர்சல்மானும் நடிக்கின்றனர். சமந்தா பத்திரிகை நிருபராக வருகிறார். சாவித்திரியை பிரபல நடிகையாக உயர்த்திய பல வெற்றி படங்களுக்கு கதாசிரியராக பணியாற்றிய அலூரி சக்ரபாணி கதாபாத்திரத்தில் பிரகாஷ்ராஜ் நடிக்கிறார்.

மறைந்த பழம்பெரும் நடிகை பானுமதி வேடத்தில் அனுஷ்காவும், நாகேஷ்வரராவ் கதாபாத்திரத்தில் நாகசைதன்யாவும், எஸ்.வி.ரங்காராவ் வேடத்தில் மோகன்பாபுவும் நடிக்கின்றனர். நாக் அஸ்வின் டைரக்டு செய்கிறார். இதன் படப்பிடிப்பு இறுதி கட்டத்தில் உள்ளது. சாவித்திரி வாழ்க்கையை படமாக்குவதற்கு பழம்பெரும் நடிகை ஜமுனா இரு வாரங்களுக்கு முன்பு எதிர்ப்பு தெரிவித்து இருந்தார்.

சாவித்திரியாக யாராலும் நடிக்க முடியாது என்றும், அவரது வேடத்தில் நடிக்க கீர்த்தி சுரேஷ் பொருத்தமானவர் இல்லை என்றும் விமர்சித்தார். இதனை கீர்த்தி சுரேஷ் மறுத்தார். சாவித்திரியின் பழக்க வழக்கங்கள் எனக்கும் இருக்கிறது. அவரது வாழ்க்கை வரலாற்றை நன்றாக படித்து தெரிந்துகொண்டுதான் நடிக்கிறேன் என்றார்.

சாவித்திரியாக நடிக்கும் கீர்த்தி சுரேஷின் தோற்றம் இதுவரை வெளியாகாமல் இருந்தது. மேக்கப், உடைகளும் ரகசியமாகவே இருந்தன. படக்குழுவினருக்கும் கீர்த்தி சுரேஷை செல்போனில் படம் பிடிக்க தடை விதிக்கப்பட்டு இருந்தது. இந்தநிலையில் கீர்த்தி சுரேஷின் சாவித்திரி தோற்றமும், ஜெமினிகணேசனாக நடிக்கும் துல்கர்சல்மான் தோற்றமும் இணையதளங்களில் வெளியாகி உள்ளது.

கீர்த்தி சுரேஷ் தோற்றம் சிறப்பாக இருப்பதாக சமூக வலைத்தளங்களில் அவரது ரசிகர்கள் கருத்துகள் பதிவிட்டு வருகிறார்கள்.


Post Comment

Post Comment