முக்தி அளிக்கும் முள்ளூர் பதஞ்சலீஸ்வரர் :


Posted by-Kalki Teamகடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவிலில் அருகே உள்ள கானாட்டாம்புலியூர் என்னும் குக்கிராமத்தில் அமைந்துள்ளது பழமையான பதஞ்சலீஸ்வரர் ஆலயம்.

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவிலில் இருந்து 10 கிலோமீட்டர் தொலைவிலும், தேவார திருத்தலங்களான திருநாரையூரில் இருந்து தெற்கில் 5 கிலோமீட்டர் தூரத்திலும், ஓமாம்புலியூரில் இருந்து கிழக்கில் 3 கிலோமீட்டர் தொலைவிலும் அமைந்துள்ளது கானாட்டாம்புலியூர் என்னும் குக்கிராமம். இந்த ஊரின் புராண காலத்து பெயர் கானாட்டுமுள்ளூர் என்பதாகும்.

இங்கு பழமையான பதஞ்சலீஸ்வரர் ஆலயம் உள்ளது. தேவாரத் திருத்தலங்களில் ஒன்றான இது, காவிரி வடகரை தலங்களில் 32–வது திருத்தலமாகும். சுந்தரமூர்த்தி சுவாமிகளால் பாடப்பெற்ற ஒரு பதிகம் இந்த ஆலயத்திற்கு பெருமை சேர்க்கின்றது. பதஞ்சலி முனிவரால் வணங்கப்பெற்ற இவ்வாலய இறைவன் அவருக்கு முக்தியை அளித்ததால், அவர் பெயரிலேயே பதஞ்சலிக்கு அருளிய பரமனாக விளங்குகின்றார்.

தலவரலாறு :

தண்டகாரண்யத்து முனிவர்கள் மதுகாவனம் என்னும் பெயர்கொண்ட இத்தலத்திற்கு வந்து, நந்திதேவரின் ஆணைப்படி ஈசனை நினைத்து தவம் செய்து வந்தனர். இறைவன் அவர்களுக்கு அருள்செய்ய திருவுளங்கொண்டு ஒரு காலடிகூட வைக்க இடமின்றி ஊரெங்கும் லிங்க வடிவங்களை தோன்றச்செய்தார். முனிவர்கள் ஒவ்வொரு லிங்கத்தையும் வழிபட்டு வேண்டிய பேறு களைப் பெற்றனர். ஊரெங்கும் மண்(மிர்த்) இல்லாமல் லிங்க வடிவமாக இருந்தபடியால் ‘அஷ்டமிர்த்திகா ஷேத்திரம்’ என்ற பெயரும் இத்தலத்திற்கு ஏற்பட்டது.

கொள்ளிடக்கரையோரம் பயணித்த சுந்தரமூர்த்தி சுவாமிகள், ஊர் முழுவதும் மண்ணெல்லாம் லிங்க வடிவமாய் காட்சியளிப்பதைக் கண்டார். எனவே ஆற்றின் கரையோரத்திலேயே நின்று இவ்வூர் இறைவனை வணங்கி, பதிகம் பாடினார்.

‘விடையவரக் கொடியேந்தும் விண்ணவர்தங் கோனை

வெள்ளத்து மாலவனும் வேதமுத லானும்

அடியிணையுந் திருமுடியுங் காணவரி தாய

சங்கரனைத் தத்துவனைத் தையல்மட வார்கள்

உடையவிழக் குழலவிழக் கோதை குடைந் தாட

குங்குமங்க ளுந்திவரு கொள்ளிடத்தின் கரைமேல்

கடைகள்விடு வாரகுவளை களைவாருங் கழனிக்

கானாட்டு முள்ளூரிற் கண்டு தொழுதேனே’ என்பது அந்தப் பாடல்.

சிவபெருமானின் ஆனந்த தாண்டவத்தை காணும் பொருட்டு, பரந்தாமனின் அருளால் பதஞ்சலி முனிவராக அவரித்தார் ஆதிசேஷன். பின்னர் பூலோகத்தில் வியாக்ரபாதர் என்ற முனிவருடன் இணைந்து சிதம்பரம் சென்றார். அங்கு அனுதினமும் இறைவனை வேண்டி, ஆனந்த தாண்டவத்தை காண்பித்தருளும்படி வேண்டினார். அவரது ஆழ்ந்த பக்தியைக் கண்ட சிவன், அவருடைய விருப்பத்தை நிறைவேற்றும் விதமாக ஆனந்த நடனத்தை ஆடியருளினார். பரவசம் தரும் அந்த நடனத்தை மீண்டும் மீண்டும் காணும் விருப்பத்தை பதஞ்சலி முனிவர் வெளியிட, ‘அவ்வப்போது பல தலங்களில் இருந்து யாம் அருளுவோம். அங்குவந்த பார்’ என்று கூறி மறைந்தார்.

இறைவன் அழைப்பை ஏற்று பதஞ்சலி முனிவர் பல ஆலயங் களுக்கு சென்று தரிசனம் செய்தார். இந்த நிலையில் அவரை தொழுநோய் ஆட்கொண்டது. இந்த நோயால் அவதிப்பட்டு வந்த பதஞ்சலி முனிவரிடம், நந்திதேவர் கானாட்டுமுள்ளூர் திருத்தலத்தின் பெருமையைக்கூறி, அங்குச் சென்று இறைவனை தரிசிக்குமாறு தெரிவித்தார். அதன்படி இந்தத் தலத்தற்கு வந்த பதஞ்சலி முனிவர் எல்லாம் வல்ல பரம்பொருளை வணங்கி, ஆனந்த நடன காட்சியை கண்டு அகமகிழ்ந்தார். அதன்பின்னர் இவ்வூரிலேயே தங்கி நோய் நீங்கப் பெற்று முக்தியும் அடைந்தார்.

பதஞ்சலி முனிவரால் நெடுங்காலம் வழிபடப்பட்ட லிங்கம், அவருடைய பெயரிலேயே பதஞ்சலீஸ்வரர் என்று அழைக்கப்பட்டது. காணும் இடமெல்லாம் முட்களைப்போல சிவலிங்கங்கள் தெரிந்ததால், ‘காணாட்டுமுள்ளூர்’ என்றும் பெயர் பெற்றது. புலிக்கால் முனிவர் வியாக்கிரபாதரும் இத்தல இறைவனை வணங்கி வழிபட்டுள்ளார். எனவே இத்தலம் ‘காணாட்டாம்புலியூர்’ என்று மருவியுள்ளது. திருப்பாதிரிப்புலியூர்(கடலூர்), பெரும்பற்றபுலியூர்(சிதம்பரம்), ஓமாம்புலியூர், எருக்கத்தாம்புலியூர் (ராசேந்திரபட்டிணம்) என்னும் புலியூர் வரிசையில் இது ஐந்தாவது புலியூராக விளங்குகின்றது.

முற்கால சோழர்களில் ஒருவனான விக்கிரமசோழனால் கட்டப்பட்ட இந்தக் கோவில் இரண்டாயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்ததாகும். இறைவன் பதஞ்சலீஸ் வரர், இறைவி கோள்வளைக்கை அம்பிகை (ஒன்பது கோள்களையும் வளையல்களாக கைகளில் அணியப் பெற்றவள்), அன்னை அம்புஜாட்சி என்ற பெயரிலும் அழைக்கப்படுகிறாள். உற்சவர் சோமாஸ்கந்தர்–கானார்குழலி. தல தீர்த்தம் சூரிய புஷ்கரணி ஆகும். தலவிருட்சமாக வெள்ளெருக்கு உள்ளது.

சூரியபுஷ்கரணிக்கு எதிரில் கிழக்கு நோக்கி ஆலயம் அமைந்துள்ளது. கம்பீரமாய் நிமிர்ந்து நிற்கும் மூன்றுநிலை ராஜகோபுரத்தை ஒட்டியவாறு ஞானவிநாயகரின் சன்னிதி இருக்கிறது. கோவிலில் நுழைந்தவுடன் பதஞ்சலி முனிவரை தனி சன்னிதியில் தரிசிக்கலாம். பிரதட்சணமாக வலம் வந்து முன் மண்டபத்திலுள்ள நந்திதேவரையும், பலிபீடத்தையும் தரிசித்து இரண்டாவது வாசலில் நுழைந்தால், இரண்டாவது திருச்சுற்றை அடையலாம். உள் திருச்சுற்று நாற்புறமும் மண்டபத்தைக் கொண்டதாக அமைக்கப்பட்டுள்ளது.

மண்டபத்தின் இடதுபுறத்தில் விநாயகர், சோமாஸ்கந்தர் முதலான பஞ்சமூர்த்திகளின் உற்சவ திருமேனிகள் மற்றும் நால்வர் சன்னிதிகள் உள்ளன. திருச்சுற்றின் மேற்கு பகுதியில் நிருத்த விநாயகர், வள்ளி–தெய்வானை சமேத சுப்பிரமணியர், விசாலாட்சி சமேத விஸ்வநாதர், கஜலட்சுமி சன்னிதிகளும், தெற்கில் பள்ளியறையும் இருக்கிறது. கருவறையின் கோஷ்டத்தில் தென்பகுதியில் கோஷ்ட விநாயகர், மேதா தட்சிணாமூர்த்தி, மேற்கு பகுதியில் கருடாழ்வார் ஆஞ்சநேயர் ஆகிய பரிவாரமூர்த்திகளுடன் பெருமாள், வடக்குப்பகுதியில் பிரம்மா, துர்க்கை ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். சிவாலயத்தில் விஷ்ணுவின் திருமேனி பிரதிஷ்டை செய்யப்பட்டிருப்பதை, வெகுசில சிவாலயங்களில் மட்டுமே காணமுடியும். குறிப்பாக முற்கால சோழர்கள் கட்டிய கோவில்களில் மட்டுமே இத்தகைய மரபு கடைபிடிக்கப்பட்டு வந்துள்ளது. மேலும் இங்குள்ள தட்சிணாமூர்த்தி கல்லால மரமின்றி காட்சிஅளிக்கின்றார்.

இரண்டாம் பிரகாரத்தை வலம்வந்து மகாமண்டபத்திற்குள் நுழைந்தால் நாகர், பைரவர், சூரியசந்திரர்கள், நடராஜர் ஆகியோரை தரிசித்த பின்னர், மூலவரான பதஞ்சலீஸ்வரரை தரிசிக்கலாம். காசிவிசுவநாதருக்கு இணையான சிவலிங்கத் திருவுருவமும், வாசலில் பதஞ்சலி முனிவர் நின்றகோலத்தில் வழிபாடு செய்யும் திருவுருவமும் இடம்பெற்றுள்ளது. இரண்டாவது பிரகாரத்திலுள்ள மண்டபத்தில் அம்பிகை தென்முகம் நோக்கி, போகசக்தியாக அருள்பாலிக்கிறார். அம்பிகை சன்னிதியின் கோட்டத்தில் துர்க்கையும் முன்பகுதி மண்டபத்தில் பழனி ஆண்டவர், சனீஸ்வரர் இடம் பெற்றுள்ளனர்.

சூரிய புஷ்கரணி தீர்த்தம் :

இரண்டு ஏக்கர் முப்பத்தேழு சென்ட் பரப்பளவு கொண்ட சூரிய புஷ்கரணி தீர்த்தம், சூரியன் நீராடிய பெருமைக்குரியது. சூரியன் உதயமாகும் தருணத்தில், மந்தேசுரன் என்ற அரக்கன் சூரியனுக்கு அனுதினமும் தொல்லை அளித்து வந்தான். இதனால் அரக்கனிடம் இருந்து தன்னை காத்துக்கொள்ள, உதயமாகும் நேரத்தில் சிவனும் விஷ்ணுவும் தன் மண்டலத்தில் இருக்கச் செய்யுமாறு பிரம்மனிடம் சூரியன் வரம் கோரினான்.

பிரம்மனோ, ‘அப்படியொரு வரத்தை தன்னால் தர இயலாது. நீ மிருத்திகாவனம் சென்று பதஞ்சலீஸ்வரரை வணங்கி, நான்கு வேதத்தின் சொரூபமாக அவ்வாலயத்தின் எதிரில் உள்ள ஆலமரத்தின் கீழ் அமர்ந்து ஈசனையும், விஷ்ணுவையும் நினைத்து தவம் செய். அப்படிச் செய்தால் நினைத்தது நிறைவேறும்’ என்று கூறி அனுப்பிவைத்தார். அதன்படி இங்குவந்த சூரியன் இத்தீர்த்தத்தில் நீராடி சிவனையும் விஷ்ணுவையும் வணங்கி தவம் செய்தான். அவனது தவவலிமையைக் கண்ட சிவனும் விஷ்ணுவும், தம்பதிசமேதராய் காட்சியளித்து சூரியன் வேண்டிய வரத்தை அருளினர்.

இதை நினைவுப்படுத்தும் விதமாக கார்த்திகை மாதத்து ஞாயிற்றுக்கிழமை அன்று சுவாமி தீர்த்தக் கரையில் எழுந்தருள்வது இன்றளவும் நடைமுறையாக இருந்து வருகின்றது. சூரியபுஷ்கரணியை தவிர கிழக்கில் காமதீர்த்தம், தெற்கில் விஷ்ணு தீர்த்தம, மேற்கில் பார்வதி தீர்த்தம், இதற்கு மேற்கில் இந்திர தீர்த்தம், வடக்கில் விநாயகர் தன் துதிக்கையால் அமைத்த கணாதீப தீர்த்தம் என ஆறு தீர்த்தங்கள் இத்தலத்தில் அமைந்துள்ளன.

காலை 8 மணி முதல் 11 மணி வரையிலும், மாலை 5.30 மணி முதல் இரவு 7.30 மணி வரையிலும் கோவில் நடை திறந்திருக்கும். கார்த்திகை நட்சத்திரக்காரர்கள் வணங்கவேண்டிய சிறப்பு மிக்க திருத்தலம் இதுவாகும். இவ்வாலயத்திற்குச் செல்ல காட்டுமன்னார்கோவிலில் இருந்து நேரடி பேருந்து வசதியும், இதர வாகன வசதிகளும் உள்ளன. சிதம்பரம் ரெயில் நிலையத்தில் இருந்து அருகாமையில் இந்த ஆலயம் உள்ளது.


Post Comment

Post Comment