நீலகிரி மலை ரயிலில் பயணித்தவர்களுக்கே தெரிந்திராத விசித்திரங்கள் இவைதான்!


Posted by-Kalki Teamரயில் பயணங்கள் தரும் ஆனந்ததிற்கு எல்லை என்ற ஒன்றை எவராலும் வரையறை செய்ய இயலாது. அலுப்போ, இடையூறோ இல்லாததால் நண்பர்களுடன் பயணிக்கையில் சிரித்து மகிழவும், தனியாக பயணிக்கையில் தனிமையை ரசித்திடவும் ரயில் பயணங்கள் தான் சிறந்தவை என்று பெரும்பாலும் சுற்றுலாப் பிரியர்களின் கருத்து.

நீண்ட தூர பயணங்களின் போது ரயிலில் பலவிதமான மனிதர்களை சந்திக்கலாம். அப்படி சந்திப்புகளின் போது இருவரின் மனங்களும் ஏதோ ஒரு புள்ளியில் ஒத்துப்போகும். இருவருக்கும் இடையில் பல விசயங்கள் விவாதிக்கப்படும்.

இது தங்களுக்குள்ளேயே தங்களை மேம்படுத்திக்கொள்ள உதவும். இதுவரை பார்த்திராத பரந்துவிரிந்த இந்திய தேசத்தின் பகுதிகளையெல்லாம் கண்டு மகிழலாம். இதனாலேயே சுற்றுலாப் பிரியர்கள் வாரம் ஒரு சுற்றுலாவுக்கு சென்று விடுகின்றனர். உங்களுக்கு ரயிலில் பயணம் செய்வது மிகவும் பிடிக்குமெனில் இந்தியாவில் இருக்கும் மிகச்சிறந்த ரயில் பயணம் என வர்ணிக்கப்படும் நீலகிரி மலை ரயிலில் வாழ்கையில் ஒருமுறையாவது நிச்சயம் பயணம் செய்திட வேண்டும். பொதுவாக ரயில் பயணம் எல்லாருக்கும் பிடிக்கும் என்றாலும், இந்த பயணத்தை தன் வாழ்நாளில் அனுபவித்தவர்கள் அதை நிச்சயம் பிரம்மிப்பாக பார்க்கின்றனர்.

மலைகளின் ராணி :

மலைகளின் ராணி என்றழைக்கப்படும் ஊட்டியில் 1908ஆம் ஆண்டு ஆங்கிலேயே அரசால் துவங்கப்பட்டது தான் நீலகிரி எக்ஸ்பிரஸ் எனப்படும் ஊட்டி மலை ரயில் ஆகும்.

மேட்டுப்பாளையத்தில் இருந்து

இந்த பயணிகள் ரயிலானது கோயம்பத்தூர் மாவட்டத்தில் இருக்கும் மேட்டுப்பாளையத்தில் இருந்து உதகமண்டலம் வரையிலான 46 கி.மீ தொலைவுக்கு இயக்கப்படுகிறது. மேட்டுப்பாளையத்தில் இருந்து உதகமண்டலத்தை அடைய ஏறத்தாழ 5 மணி நேரம் ஆகிறது.

நீலகிரி எக்ஸ்பிரஸ் :

இந்த நீலகிரி எக்ஸ்பிரஸ் ரயிலானது ஊட்டியை அடையும் முன்பாக மொத்தம் 11 ரயில் நிலையங்களில் நின்று செல்கிறது. இதில் குன்னூர், வெல்லிங்டன் மற்றும் அரவங்காடு ஆகியவை முக்கியமான ரயில் நிலையங்களாக இருக்கின்றன.

நீராவி :

இந்த ரயிலானது மேட்டுப்பாளையத்தில் இருந்து குன்னூர் வரை நீராவியிலும், பின் அங்கிருந்து ஊட்டி வரை டீசல் எஞ்சினாலும் இயக்கப்படுகிறது. இங்கே பயன்படுத்தப்படும் நீராவி எஞ்சின்கள் சுவிட்சர்லாந்து நாட்டிலுள்ள ஒரு நிறுவனத்திடம் இருந்து இறக்குமதி செய்யப்பட்டது ஆகும்.

இயற்கையழகை ரசிக்க :

ஊட்டியின் உண்மையான இயற்கையழகை ரசிக்க விரும்புகிறவர்களுக்கு இந்த ரயில் பயணம் மிகப்பெரிய பரிசாக இருக்கும். இந்த ரயில் பாதை நெடுகிலும் மனிதனால் தீண்டப்படாத ஊட்டியின் இயற்கை பேரழகை கண்டு லயிக்கலாம்.

பழமையான ரயில்களில் ஒன்று

இந்தியாவில் உள்ள மிகவும் பழமையான ரயில்களில் ஒன்றான இந்த நீலகிரி மலை ரயிலை 2005ஆம் ஆண்டு யுனெஸ்கோ அமைப்பானது உலக புராதன சின்னங்களில் ஒன்றாக அங்கீகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

கவனத்தில் கொள்ளவேண்டியவை

இந்த ரயிலில் பயணிக்கும் முன்பாக நாம் கவனத்தில் கொள்ளவேண்டிய முக்கியமான விஷயம் இது அடிக்கடி பழுதாகி பாதிவழியில் நிற்கக்கூடும் என்பது தான். அதுமட்டுமில்லாமல் மழை காலங்களில் நிலச்சரிவு, பாறை இடைமறிப்பது போன்றவையும் நடக்க வாய்ப்புள்ளது என்பதால் அந்த நேரத்திற்கு தேவையான உணவு மற்றும் தண்ணீர் ஆகியவற்றை உடன் எடுத்துசெல்வது நல்லது.

மூன்றாம் பிறை :

இந்த ரயிலில் தான் காலங்களை கடந்து நிற்கும் சில திரைப்படங்கள் படமாக்கப்பட்டிருக்கின்றன. கமலஹாசன் நடிப்பில் வெளியான மூன்றாம் பிறை ஷாஹ் ருஹ்கான் நடித்த உயிரே படத்தில் வரும் தையா தையா பாடல் போன்றவை நிதாஹ் ரயிலில் தான் படமாக்கப்பட்டிருக்கின்றன.

நீலகிரி ரயில் செல்லும் வழித்தடம் :

மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்திலிருந்து தொடங்கும் இந்த ரயில் பயணம், கல்லாறு, அட்டர்லி, ஹில்குரோவ், ரன்னிமெடி, காட்டேரி, குன்னூர், வெலிங்க்டன், அரவங்காடு, கெட்டி, லவ்டாலே முதலிய ரயில் நிறுத்தங்களை கடந்து, உதகமண்டலத்தை சென்றடைகிறது.

மேட்டுப்பாளையம்:

நீலகிரி மலை ரயில் மேட்டுப்பாளையத்திலிருந்தே தொடங்குகிறது. மேட்டுப்பாளையமானது கோயம்புத்தூர் மாவட்டத்தில், கோவை நகருக்கு வடக்கு பகுதியில் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இங்கிருந்து நீலகிரி கிட்டத்தட்ட 38கிமீ தூரம் ஆகும்.

இந்த மலை ரயில் ஒரு யுனெஸ்கோ உலக பாரம்பரிய சின்னம் என்பது நம்மில் பலருக்குத் தெரிந்ததுதான். ரயில் பாதை மட்டுமின்றி இங்குள்ள சாலைகளும் சிறப்பாக இருக்கும். நீலகிரிக்கு லாங்க் பைக் ரைடு செல்பவர்கள் இங்கிருந்து தொடங்குவார்கள்.

ஹில்குரோவ்

மேட்டுப்பாளையத்தை தொடர்ந்து, இந்த வழித்தடத்தில் குறிப்பிட்டு சொல்லத்தக்க இடம் என்றால் அது ஹில்குரோவ் ஆகும்.

பயணிகளின் புத்துணர்ச்சிக்காக இங்கு ரயில் நிறுத்தப்படுகிறது. மேலும் இங்கு சிறிய கடைகளும் காணப்படுகின்றன.

மேட்டுப்பாளையத்திலிருந்து இந்த இடத்துக்கு வரும் வழியில்தான் பிளாக் தண்டர் எனும் கேளிக்கை விளையாட்டு பூங்கா அமைந்துள்ளது. இந்த வழியில் அகத்தியர் ஞானபீடமும் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதைத் தொடர்ந்து கல்லாறு பாதுகாக்கப்பட்ட காடுகள் பகுதி நீள்கிறது. இந்த இடத்தில் சில கொண்டை ஊசி வளைவுகள் காணப்படுகின்றன. பைக்கில் செல்பவர்களுக்கு இது தெரிந்திருக்கும்.

குன்னூர் :

தொடர்ந்து செல்லும் வழியில், குன்னூர் ஆற்றையும், காந்திபுரம் எனும் இடத்தையும் காணமுடியும், பின் குன்னூர் ரயில் நிலையத்தை அடையலாம்.

வீட்டில் தயாரிக்கப்பட்ட சாக்லேட் நீலகிரியின் சிறப்பு . குன்னூரும் இதற்கு விதி விலக்கல்ல. குன்னூரின் எந்தத் தெருவிலும் நீங்கள் இதைப் பெற இயலும். கண்டிப்பாக தவற விடக் கூடாத ஒன்று இந்த சாக்லேட். குன்னூர் தாவரவளர்ப்பு மற்றும் தோட்டக் கலைக்கு பெயர் பெற்றது . பல அரிய வகை ஆர்க்கிட்கள் மற்றும் பல வகைப் பூக்கள் இங்கு செடிகளாக வளர்க்கப்பட்டு விற்கப்படுகின்றன. உலகில் வேறெங்கிலும் காணக் கிடைக்காத அரிய வகைப் பூக்கள் இங்கு உள்ளது மன நிறைவான அனுபவத்தை தரும். மலைவாசஸ்தலம் ஆனதால் குன்னூர் இதன் காலநிலைக்குப் பெயர் பெற்றது. குளிர் காலங்கள் அதிகபட்ச குளிருடனும், கோடைக்காலங்கள் மிதமான தட்பவெப்பத்துடனும் காணப்படும்.

வெலிங்க்டன்

அதைத்தொடர்ந்து நாம் செல்வது வெல்லிங்க்டன் ரயில் நிலையம். இந்த ரயில் நிலையத்தைச் சுற்றி நிறைய கோயில்கள் அமைந்துள்ளன. பாலசுப்பிரமணிய சுவாமி கோயில், ஜெய்ன் கோயில், முருகன் கோயில் மற்றும் அய்யப்பன் கோயில் என இவை சிறந்த ஆன்மீக சுற்றுலாப் பயணிகளுக்கு சிறப்பானதாக அமைந்துள்ளன. இங்குள்ள வெல்லிங்க்டன் ஏரி காணத்தக்க இடங்களுள் ஒன்றாகும்.

அரவங்காடு

அரவங்காடு அல்லது அருவங்காடு என்று அழைக்கப்படும் இடம் அடுத்த ரயில் நிலையமாகும். இங்கு ஒரு தேவாலயமும், ஹுப்பதலை ராமர் கோயிலும், பாறை முனீஸ்வரர் கோயிலும் அமைந்துள்ளன. எமரால்டு பள்ளத்தாக்கு எனும் இடம் இந்த பகுதி மக்களிடையே அதிகம் கவரப்படும் இடமாகும்.

கெட்டி

உலகநாயகன் கமல்ஹாசன் தலையில் பானை ஒன்றை வைத்துக்கொண்டு மனம் பிதற்றியதைப் போல நடித்து, மாபெரும் வெற்றி பெற்ற அந்த படத்தில்தான் இந்த இடம் முதன்முதலில் காட்டப்பட்டது. அதன்பிறகு இது மிகவும் பிரபலமாகியது.

லவ்டேல்

லவ்டேல் எனும் பகுதி மிகவும் அழகானதாகவும், பொழுது போக்கு அம்சங்களுடனும் அமைந்துள்ளது. இது தனதருகில் அருள்மிகு வேணுகோபால சாபா கோயிலையும், சிஎஸ்ஐ தேவாலயம் ஒன்றையும் கொண்டுள்ளது.

ஊட்டி

பொடானிக்கல் கார்டன் , தொட்டபெட்டா மலைச் சிகரம், ஊட்டி ஏரி, கல்ஹத்தி நீர்வீழ்ச்சி மற்றும் மலர் கண்காட்சி போன்ற காரணங்களால், உலகம் முழுவதும் இருந்து வரும் சுற்றுலா பயணிகள் மத்தியில், ஊட்டி மிகவும் பிரபலமாக உள்ளது. ஊட்டியைச் சாலை மற்றும் ரயில் வழியாக எளிதில் அடைய முடியும். நெருங்கிய விமான நிலையம் கோயம்புத்தூரில் உள்ளது. ஊட்டியில் ஆண்டு முழுவதும் இனிமையான சூழல் நிலவுகிறது. எனினும், குளிர்காலத்தில், வழக்கத்தை விட சற்று குளிராகவே இருக்கும்.

தொட்டபெட்டா:

தொட்டபெட்டா மலைச் சிகரம் நீலகிரி மலையின் மிக உயர்ந்த மலை சிகரம். தொட்டபெட்டா என்ற சொல் கன்னட மொழியில் பெரிய மலை என்று குறிக்கிறது. இந்த மலை 8650 அடி உயரத்தில், ஊட்டி நகரில் இருந்து சுமார் 9 கிலோமீட்டர் தொலைவில், ஊட்டி-கோட்டகிரிச் சாலையில் உள்ளது. தொட்டபெட்டா மலைச் சிகரத்தில் இருந்து சாமுண்டி மலையை தெளிவாக பார்க்க முடியும். தொட்டபெட்டா மலைச் சிகரம் உச்சியில் இருந்து தெரியும் மற்ற சிகரங்கள் - குல்குடி, கட்ல்தடு மற்றும் ஹெகுபா. இந்த மூன்று சிகரங்களும் ஊட்டிக்கு நெருக்கமாக அமைந்துள்ளன.அதன் உச்சியில் உள்ள தட்டையான வளைவே தொட்டபெட்டாவின் சிறப்பு.

ஊட்டி ஏரி:

ஊட்டிக்கு வருகின்ற சுற்றுலா பயணிகள் மத்தியில் மிகவும் பிரபலமானது ஊட்டி ஏரி. இந்த செயற்கை ஏரி 1824ல், 65 ஏக்கர் பரப்பளவில், ஜான் சல்லிவன் என்பவரால் கட்டப்பட்டது. மழை காலத்தில் மலையிலிருந்து கீழே பாயும் நீரைச் சேகரிக்கும் விதமாக இது உருவாக்கப்பட்டுள்ளது. எனினும் நீர்மட்டம் ஏரியின் அளவைக் கடந்ததால், மூன்று முறை நீர் வெளியேற்றப்பட்டது.

ஏரியில் படகுச் சவாரி உள்ளதால், சுற்றுலா பயணிகள் மத்தியில் பிரபலமாக இருக்கிறது. அமைதியான படகுச் சவாரி மூலம், ஏரியின் கண்ணுக்கினிய அழகை அனுபவிக்க முடியும். ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் போது, மாநில அரசு, இரண்டு நாட்கள் நீடிக்கும் படகு போட்டி ஒன்றை ஏற்பாடு செய்துள்ளது.

மலர் கண்காட்சிP;

ஊட்டியில் மலர் கண் காட்சி, வருடா வருடம் மே மாதம் பொடானிக்கல் கார்டனில் நடைபெறும். பல்வேறு வகையான மலர்கள் வைக்கப்படுவதால் ஒவ்வொரு நாளும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் இதைக் காண வருகின்றனர். 150 வகையான உள்நாட்டு மற்றும் இறக்குமதி செய்யப்பட்ட மலர்கள் இந்தக் கண்காட்சியில் உள்ளதால் நீலகிரி மலர் கண் காட்சி மிகவும் பிரபலமாக உள்ளது. வித்தியாசமான மற்றும் அரிய மலர்கள் கூட இங்கு இருக்கும். இந்தக் கண்காட்சியில் போட்டிகளும் நடைபெறும். ஆசையாக நட்டு வளர்த்த பூக்களைக் காட்ட, நாடு முழுவதும் இருந்து, போட்டியில் சுமார் 250 பேர்,வெவ்வேறு பிரிவுகளின் கீழ் கலந்துகொள்கின்றனர். இரண்டு நாட்கள் நடைபெறும் இந்தக் கண் காட்சியில், இரண்டாவது நாள் முடிவில் வெற்றியாளர்கள் அறிவிக்கப்படுகின்றனர்.Post Comment

Post Comment