பத்மாவத் படத்துக்கு பச்சைக் கொடி காட்டிய உத்தரபிரதேசம் :


Posted by-Kalki Teamதீபிகா படுகோனே நடிப்பில் உருவாகி இருக்கும் வரலாற்று படமான பத்மாவத் படத்துக்கு இந்தியாவில் உள்ள 3 மாநிலங்களில் தடை விதிக்கப்பட்டுள்ளது. உத்தரபிரதேசத்தில் படத்தை ரிலீஸ் செய்ய அனுமதி கிடைத்திருக்கிறது.

ராஜஸ்தானின் சித்தூர் ராணி பத்மாவதியின் வரலாற்றை சித்தரிக்கும் பத்மாவதி படத்துக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியதால் கடந்த டிசம்பர் 1-ந்தேதி வெளியாவதாக இருந்தது நிறுத்தப்பட்டது.

இதையடுத்து படத்தின் பெயர் பத்மாவத் என்று மாற்றம் செய்யப்பட்டும், காட்சிகளில் மாற்றம் செய்தும் சென்சார் போர்டு அனுமதி வழங்கியது. வருகிற 25-ந்தேதி பத்மாவத் படம் திரைக்கு வருகிறது.

பெயர் மாற்றம், காட்சிகளில் மாற்றம் செய்யப்பட்ட பின்பும் பத்மாவத் படத்துக்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது. ராஜஸ்தான் மாநில அரசு இந்தப்படம் ராஜபுத்திரர்களின் மனம் புண்படும்படி இருப்பதால் மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் வகையில் பத்மாவத் படத்துக்கு தடை விதித்து இருப்பதாக தெரிவித்து உள்ளது. இதேபோல் குஜராத் மாநில அரசும் பத்மாவத் படத்துக்கு தடை விதித்துள்ளது.

மத்தியபிரதேசத்திலும் பத்மாவத் படத்துக்கு தடை விதிக்கப்படும் என்று முதல்-மந்திரி சிவராஜ் சிங் சவுகான் சூசகமாக தெரிவித்துள்ளார். இந்த விவகாரத்தில் ஏற்கனவே நான் என்ன கருத்து தெரிவித்து இருந்தேனோ அதுதான் நடக்கும் என்றார்.

கடந்த ஆண்டு ராஜபுத்திர மக்கள் மத்தியில் அவர் பேசுகையில் பத்மாவத் படத்தில் ராணி பத்மாவதியின் மரியாதைக்கு பங்கம் விளைவிக்கும் காட்சிகளோ, உண்மைகளை திரித்துக் கூறும் காட்சிக ளோ இருந்தால் அந்தப் படத்தை திரையிட அனுமதிக் கமாட்டேன் என்றார். இப்போது அதே கருத்தை வலியுறுத்துவதாக தெரிவித்து இருப்பதன் மூலம் பத்மாவத் படத்துக்கு மத்தியபிரதேசத்திலும் தடை விதிக்கப்படும் என்பதை சூசகமாக தெரிவித்துள்ளது தெரியவருகிறது.

கோவாவில் சுற்றுலா சீசன் வருவதால் போலீசார் பாதுகாப்பு பணிக்கு சென்று விடுவார்கள். இதனால் பத்மாவத் படத்துக்கு எதிரான போராட் டத்துக்கு பாதுகாப்பு வழங்க இயலாது, எனவே பத்மாவத் படத்துக்கு தடை விதிக்க வேண்டும் என்று போலீசார் சிபாரிசு செய்துள்ளனர்.

பத்மாவத் படத்தில் மாற்றங்கள் செய்து இருப்பதன் மூலம் உத்தர பிரதேசத்தில் படத்துக்கு எந்த தடையும் இல்லை என்று மாநில அரசு தெரிவித்துள்ளது.

மும்பையில் நேற்று பத்மாவத் படத்துக்கு சென்சார் போர்டு அனுமதி அளித்ததை கண்டித்து கர்னி சேனா அமைப்பினர் ஆர்ப்பாட்டம் செய்தனர். இதையடுத்து அந்த அமைப்பைச் சேர்ந்த 70 பேர் கைது செய்யப்பட்டனர்.


Post Comment

Post Comment