கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் தை அமாவாசை விழா 16-ந்தேதி நடக்கிறது :


Posted by-Kalki Teamகன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் இந்த ஆண்டுக்கான தை அமாவாசை விழா வருகிற 16-ந் தேதி நடக்கிறது.

கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் ஆண்டுதோறும் தை மாதம் அமாவாசை அன்று, தை அமாவாசை விழா கொண்டாடப்படுவது வழக்கம். அதே போல் இந்த ஆண்டும் தை அமாவாசை விழா வருகிற 16-ந் தேதி நடக்கிறது.

இதையொட்டி அன்று அதிகாலை 3.30 மணிக்கு கோவில் மூலஸ்தான நடை திறக்கப்பட்டு சிறப்பு பூை-ஜைகள், தீபாராதனை போன்றவை நடக்கிறது. தொடர்ந்து, அம்மனுக்கு வைரக்கிரீடம், வைரக்கல் மூக்குத்தி, தங்ககவசம் மற்றும் தங்கதிரு ஆபரணங்கள் அணிவிக்கப்பட்டு சந்தன காப்பு அலங்காரத்துடன் சிறப்பு தீபாராதனை நடக்கிறது.

பின்னர் அதிகாலை 4.30 மணிக்கு கோவிலின் வடக்கு பிரதான நுழைவுவாசல் பக்தர்களின் தரிசனத்துக்காக திறக்கப்படுகிறது. அதன்பிறகே பக்தர்கள் கோவிலுக்குள் செல்ல அனுமதிக்கப்படுகிறார்கள்.

தை அமாவாசையையொட்டி அன்றைய தினம் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கன்னியாகுமரி சங்கிலித்துறை கடலில் புனித நீராடி தங்களது முன்னோர்களை நினைத்து பலிகர்மபூஜை செய்வார்கள். தை அமாவாசையையொட்டி பக்தர்களின் தரிசனத்திற்கு வசதியாக அன்று மதியம் 1 மணி வரை கோவில் நடைதிறந்து வைக்கப்படுகிறது. மதியம் 12 மணிக்கு சிறப்பு அன்னதானம் நடக்கிறது.

மாலை 6.30 மணிக்கு சாயராட்சை தீபாராதனையும், இரவு 8 மணிக்கு அம்மன் பலவண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட வெள்ளி கலைமான் வாகனத்தில் எழுந்தருளி மேள, தாளம் முழங்க வீதிஉலா வரும் நிகழ்ச்சியும் நடக்கிறது.

பின்னர் இரவு 10 மணிக்கு முக்கடல் சங்கமத்தில் அம்மனுக்கு கடலில் ஆராட்டு நடக்கிறது. ஆராட்டு முடிந்த பின்னர் வருடத்தில் 5 விசேஷ நாட்களில் மட்டும் திறக்கப்படும் கோவில் கிழக்கு வாசல் திறக்கப்பட்டு அதன் வழியாக உற்சவ அம்மன் கோவிலுக்குள் எழுந்தருளும் நிகழ்ச்சி நடக்கிறது.

பின்னர் அம்மனை பல்லக்கில் எழுந்தருள செய்து கோவிலின் உள்பிரகாரத்தை சுற்றி மேள, தாளம் முழங்க 3 முறை வலம் வரச் செய்யும் நிகழ்ச்சி நடக்கிறது. அதைத் தொடர்ந்து வெள்ளி சிம்மாசனத்தில் அம்மனுக்கு தாலாட்டு நிகழ்ச்சியும், அத்தாள பூஜையும் ஏகாந்த தீபாராதனையும் நடக்கிறது.

விழா ஏற்பாடுகளை குமரி மாவட்ட கோவில்களின் இணை ஆணையர் அன்புமணி, கன்னியாகுமரி பகவதிஅம்மன் கோவில் மேலாளர் சிவராமச்சந்திரன், கோவில் தலைமை கணக்காளர் ஸ்ரீராமச்சந்திரன் ஆகியோர் செய்து வருகிறார்கள்.


Post Comment

Post Comment