வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு இன்று திருப்பதியில் ஆழ்வார் திருமஞ்சனம் :


Posted by-Kalki Teamவைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு இன்று திருப்பதியில் ஆழ்வார் திருமஞ்சனம் நடந்தது. ஆழ்வார் திருமஞ்சனத்தால் பக்தர்கள் தரிசனம் 6 மணி நேரம் நிறுத்தப்பட்டிருந்தது.

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் 29-ந்தேதி வைகுண்ட ஏகாதசி விழாவும், 30-ந்தேதி துவாதசி விழாவும் நடக்கிறது. இதனை முன்னிட்டு ஆழ்வார் திருமஞ்சனம் எனப்படும் சுத்தம் செய்யும் பணி இன்று நடந்தது.

கோவில் ஆழ்வார் திருமஞ்சனம் ஆண்டுக்கு நான்கு முறை நடக்கிறது. யுகாதி பண்டிகை, ஆனிவார ஆஸ்தானம், வருடாந்திர பிரம்மோற்சவ விழா, வைகுண்ட ஏகாதசி ஆகிய விழாக்கள் நடைபெறும் நாளின் முந்தைய வார செவ்வாய்க்கிழமை அன்று நடக்கும்.

அதன்படி இன்று ஆழ்வார் திருமஞ்சனம் நடந்தது. அதிகாலை 2 மணியில் இருந்து 2.30 மணிவரை மூலவருக்கு மார்கழி மாத கைங்கர்யம் முடிந்ததும், 3.30 மணியில் இருந்து 4.30 மணிவரை அபிஷேகம், தோமால சேவை, அர்ச்சனை ஆகியவை நடந்தது.

அதைத்தொடர்ந்து காலை 6 மணியளவில் பிரதான நுழைவுவாயில் கதவு மூடப்பட்டது. மூலவர் வெங்கடாஜலபதியை அர்ச்சகர்கள் விலை உயர்ந்தபட்டு வஸ்திரத்தால் போர்த்தி, கருவறையில் இருந்து பிரதான நுழைவு வாயில் வரை அதிகாரிகள், ஊழியர்கள், அர்ச்சகர்கள் தண்ணீரால் சுத்தம் செய்தனர்.

பகல் 11 மணியளவில் சுத்தம் செய்யும் பணி முடிந்தது. இதையடுத்து கோவிலில் உள்ள சுவர்கள், மாடங்கள், தூண்கள் ஆகியவற்றின் மீது சுகந்த திரவியம் பூசப்பட்டது.

இதையடுத்து மூலவர் வெங்கடாஜலபதி மீது போர்த்தப்பட்ட விலை உயர்ந்தபட்டு வஸ்திரத்தை அகற்றி, மூலவருக்கு சிறப்பு பூஜைகள், நைவேத்தியம் ஆகியவை செய்யப்பட்டது.

இதை தொடர்ந்து நண்பகல் 12 மணிக்கு பிரதான நுழைவு வாயில் கதவு திறக்கப்பட்டு இலவச தரிசனம், திவ்ய தரிசனம், 300 ரூபாய் கட்டண பிரத்யேக பிரவேச தரிசனம் ஆகியவற்றில் சென்று ஏழுமலையானை வழிபட பக்தர்கள் கோவிலுக்குள் அனுமதிக்கப்பட்டனர்.

ஆழ்வார் திருமஞ்சனத்தால் பக்தர்கள் தரிசனம் 6 மணி நேரம் நிறுத்தப்பட்டிருந்தது.Post Comment

Post Comment