சுவாமி ஐயப்பனின் தங்க அங்கி ஊர்வலம் நாளை புறப்படுகிறது :


Posted by-Kalki Teamஆரன்முளா பார்த்தசாரதி கோவிலில் இருந்து சபரிமலைக்கு சுவாமி ஐயப்பனின் தங்க அங்கி ஊர்வலம் நாளை புறப்படுகிறது.

மண்டல, மகரவிளக்கு சீசனை முன்னிட்டு சபரிமலை ஐயப்பன் கோவில் நடை கடந்த மாதம் 15-ந் தேதி திறக்கப்பட்டது. 16-ந் தேதி முதல் வழக்கமான பூஜைகளுடன் நெய் அபிஷேகம் உள்பட சிறப்பு பூஜைகள் நடந்து வருகிறது.

சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறக்கப்பட்ட நாள் முதல் ஏராளமான பக்தர்கள் விரதம் மேற்கொண்டு, இருமுடி கட்டி கோவிலுக்கு சாமி தரிசனம் செய்து வருகிறார்கள்.

சபரிமலை ஐயப்பன் கோவிலில் இந்த ஆண்டுக்கான மண்டல பூஜை வருகிற 26-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) நடக்கிறது.

திருவிதாங்கூர் மன்னர் சித்திரை திருநாள் மகாராஜா, சபரிமலை ஐயப்பனுக்கு 420 பவுன் எடை கொண்ட தங்க அங்கியை வழங்கினார். அந்த தங்க அங்கியானது மண்டல பூஜையின் போது, ஐயப்பனுக்கு அணிவிக்கப்பட்டு ஆண்டாண்டு காலமாக பூஜை நடைபெற்று வருகிறது.

சிறப்பு வாய்ந்த இந்த தங்க அங்கியானது, பத்தனம்திட்டை மாவட்டம் ஆரன்முளாவில் உள்ள பார்த்தசாரதி கோவிலில் வைக்கப்பட்டு இருக்கும்.

மண்டல பூஜையையொட்டி ஆரன்முளா பார்த்த சாரதி கோவிலில் இருந்து சபரி மலைக்கு நாளை (வெள்ளிக்கிழமை) காலை 7 மணிக்கு தங்க அங்கி ஊர்வலம் புறப்படுகிறது. இதையொட்டி சிறப்பு பூஜையும், அதைத்தொடர்ந்து அலங்கரிக்கப்பட்ட பல்லக்கு வாகனத்தில் தங்க அங்கியை வைத்ததும் ஊர்வலம் தொடங்குகிறது. இந்த ஊர்வலம் துப்பாக்கி ஏந்திய போலீசாரின் பலத்த பாதுகாப்புடன் நடைபெறும்.

நாளை இரவு ஓமலூரிலும், 23-ந் தேதி இரவு கோணியிலும், 24-ந் தேதி இரவு பெரிநாட்டிலும் ஊர்வலம் நிறைவடைகிறது. பின்னர் அங்கிருந்து சபரிமலைக்கு கொண்டு செல்லப்படும் தங்க அங்கியானது, 25-ந் தேதி மதியம் பம்பை கணபதி கோவிலை சென்றடையும். அங்கிருந்து மேளதாளம் முழங்க பக்தர்கள் தலைச்சுமையாக தங்க அங்கியை சன்னிதானத்திற்கு எடுத்து செல்கிறார்கள்.

25-ந் தேதி மாலை 5.30 மணிக்கு சன்னிதானத்தில் தங்க அங்கிக்கு திருவிதாங்கூர் தேவஸ்தானம் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்படுகிறது. பின்னர் 18-ம் படிக்கு கீழ் தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு மற்றும் மேல்சாந்தி உண்ணிகிருஷ்ணன் நம்பூதிரி ஆகியோரிடம் தங்க அங்கி ஒப்படைக்கப்படும்.

18-ம் படி வழியாக கொண்டு செல்லப்படும் தங்க அங்கி சுவாமி ஐயப்பனுக்கு அணிவிக்கப்படுகிறது. அதைத்தொடர்ந்து அலங்கார தீபாராதனை நடைபெறும். பின்னர் நடைபெறும் வழக்கமான பூஜைகளுக்கு பின் இரவு 11 மணிக்கு கோவில் நடை அடைக்கப்படும்.

மீண்டும் 26-ந் தேதி அதிகாலை 3 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு வழக்கமான பூஜைகள் நடைபெறுகிறது. அன்றைய தினம் காலை 9 மணி வரை மட்டுமே நெய் அபிஷேகம் நடைபெறும். அதைத்தொடர்ந்து பகல் 11 மணிக்கு நடைபெறும் களபாபிஷேகத்திற்கு பின் பகல் 11.40 மணி வரை தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு தலைமையில் மண்டல பூஜைகள் நடைபெறும்.

மாலை 3 மணிக்கு மீண்டும் நடை திறக்கப்பட்டு பல்வேறு பூஜைகளுக்கு பின் இரவு 11 மணிக்கு கோவில் நடை சாத்தப்படும். மண்டல பூஜையினை காண நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் சபரிமலைக்கு வந்து குவிந்த வண்ணம் உள்ளனர்.

மகர விளக்கு பூஜையையொட்டி, ஐயப்பன் கோவில் நடை மீண்டும் வருகிற 30-ந் தேதி மாலை 5 மணிக்கு திறக்கப்படும். பிரசித்தி பெற்ற மகர விளக்கு பூஜை மற்றும் மகர ஜோதி தரிசனம் அடுத்த மாதம் (ஜனவரி) 14-ந் தேதியன்று நடக்கிறது.

சபரிமலைக்கு வரும் பக்தர்களின் கூட்டம் அதிகரித்து இருப்பதை தொடர்ந்து, பம்பை, சன்னிதானம் மற்றும் நிலக்கல் பகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.


Post Comment

Post Comment