அசைவ உணவை தவிர்ப்பவர்கள் சக மனிதனின் துயரங்களை கண்டு கொள்ளாத போது அகிம்சை என்னவாகிறது?- கமல்


Posted by-Kalki Teamஅ மெரிக்காவில் மசாசூசெட்ஸ் மாகாணத்தில் புகழ்பெற்ற ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் இந்திய மாநாடு நேற்று முன்தினம் நடைபெற்றது.மாநாட்டில் நடிகர் கமல்ஹாசன் பங்கேற்று பேசினார்.

இந்தியாவில் பேச்சு சுதந்திரம் இருக்கிறது அதற்காக எதை வேண்டுமென்றாம் பேசி விட வாய்ப்பில்லையென்பதால் இங்கு கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி சில விஷயங்களை பதிவு செய்கிறேன். ஆனால் ஜனநாயகம் என்றாலே பேச்சு சுதந்திரம் என்பதுதான் என்ற அர்த்தம் தாமாகவே வருகிறது.இப்படி பேசுவதால் இந்திய ஜனநாயகத்தை நான் விமர்சிப்பதாக அர்த்தம் கொண்டு விடக் கூடாது. நான் இந்திய ஜனநாயகத்தை விமர்சிக்கவில்லை. மாறாக, இந்திய ஜனநாயகத்தை நினைத்து நான் பெருமைப்படுகிறேன்.

ஏன் இந்த உலகத்துக்கே முன்னுதாரணமான ஜனநாயக நாடாக இந்திய விளங்க வேண்டுமென விரும்புகிறேன். இந்தியாவில் மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் மாற்றங்கள் நிகழ்கின்றன. நிகழ்ந்து கொண்டிருக்கின்றன. உலகம் புதிய சவால்களை எதிர்நோக்கியிருக்கிறது. புதிய புதிய வாய்ப்புகள் உருவாகின்றன. இந்தியா போதுமென்று மனநிறைவு அடைந்துவிடக் கூடாது.

வேற்றுமையில் ஒற்றுமை என ஜவகர்லால் நேரு கூறினார். ஆனால் இன்றைக்கு அதனை மிகவேகமாகவே இழந்து விட முயற்சித்துக் கொண்டிருக்கிறோம். இன்றைய நாட்களில் ஜனநாயகம் பற்றி பேசுபவர்கள், ஜனநாயகம் என்பது பேச்சு சுதந்திரத்துக்கான நம்பிக்கை என்று நம்ப செய்வதில் ஈடுபடுகின்றனர். ஆனால் ஒரு கலைஞனாக பேச்சு சுதந்திரம் என்பது ஆளும் அரசியல் நிலையில் இருந்து மாறுபட்டது என்று நான் நம்புகிறேன்.

கருத்துச் சுதந்திரத்தைப் பாதுகாக்க வேண்டுமென்றால் நாம் எப்போதும் எச்சரிக்கையாக இருந்தாக வேண்டும் . என்னை பொறுத்தவரை, நுட்பமான முறையில் நம்மைக் கட்டுப்படுத்தும் அரசியல் அதிகாரத்துக்கு எதிராக எப்போதும் காவல் நிற்கும் மிகப்பெரிய ஒரு சமூகத்தின் உறுப்பினன் என்றே கருதுகிறேன். இந்திய அரசியல் வரலாற்றில்கூட அவசர நிலைச் சட்டம் பிரகடனப்படுத்துள்ளது. அதே வேளையில், அதிகார துஷ்பிரயோகத்திற்கு எத்தனையோ முயற்சிகள் செய்யப்பட்ட போதும் நடைமுறையில் வெற்றி கண்டிருக்கும் இந்திய ஜனநாயகம் குறித்து நான் பெருமைப்படுகிறேன்.

காந்தியின் கொள்கையான அகிம்சை மிகக் கடினமான லட்சியம். அசைவ உணவு மறுப்பு மூலம் மட்டும் அடையப்படும் விஷயம் அதுவல்ல. அசைவ உணவை தவிர்க்கும் ஒருவர் சக மனிதனின் துயரங்களைக் கண்டு கொள்ளாதபோது அகிம்சையின் நோக்கம் என்னவாகிறது. என்றார்


Post Comment

Post Comment