எண்ணங்களை இழுத்துக்கட்டும் தியானம் :


Posted by-Kalki Teamதியானத்தை வழக்கப்படுத்திக் கொள்வதன் மூலம், உடல், மன நோய்களில் இருந்து நம்மை முழுமையாகத் தற்காத்துக் கொள்ளலாம்.

எந்த வயதினரும் தியானம் செய்யலாம். இதற்கு வயது பாகுபாடெல்லாம் இல்லை. அவரவர் வயதுக்கு ஏற்ப புரிந்துகொள்ளும் திறனின் அடிப்படையில் தியான முறைகள் இருக்கும்.

யுடியூபில் தியானம் செய்வதற்கான வழிமுறைகள் உள்ளன. தியானம் பற்றிய யுடியூப் சானலை ஆன் செய்து ஹெட்போன் மாட்டிக்கொண்டு அதில் சொல்வதைச் செய்தால் போதும். இவ்வாறு செய்வதன் மூலம் பயணநேரம் வீணாவதால் ஏற்படும் டென்ஷனைக் குறைக்கலாம். தியானத்தின் வழியாக மன நிறைவும் மன அமைதியும் கிடைக்கும்.

அதிகபட்ச கோபம், டென்ஷன், சோகம் போன்ற உச்ச மனநிலைகளில் தியானம் செய்யலாமா என்ற கேள்வி பலருக்கும் உண்டு. கண்டிப்பாகச் செய்யலாம். அந்த உணர்வு நிலையின் தீவிரத்தை மெள்ள அமைதி நிலைக்குக் கொண்டு வர தியானமே சிறந்த வழி.

நமது நன்மைக்காகவும் உச்ச மனநிலையில் இருந்து வெளியில் வரவும் இதைச் செய்யப் போகிறோம் என்ற மனநிலையுடன் கண்களை மூடி மூச்சுப் பயிற்சியைச் செய்தபடி தியானத்தைத் தொடருங்கள். மெள்ள மனம் இயல்பு நிலைக்குத் திரும்பத் தொடங்கும்.

நிறைய எண்ணங்கள் மனதில் ஓடிக் கொண்டிருக்கும். கண்களை மூடி எண்ணங்களைக் கவனிக்கத் தொடங்கும் போது மனதுக்குள் ஓயாமல் கேள்வி பதில் போன்ற உரையாடல் நிகழ்வதைக் கவனிக்கலாம். மூச்சுப் பயிற்சியின் போது மூச்சுக்காற்று உள்ளே செல்வதைக் கவனிக்கலாம். எண்ணங்கள் ஓயாதபோது மனதுக்குப் பிடித்த வார்த்தையைத் தொடர்ந்து உச்சரிப்பதன் வழியாக அதில் மனதைச் செலுத்தலாம்.

இசையைக் கேட்டபடியும் தியானம் செய்யலாம். மனதுக்குள், எண்ணங்கள் கேள்விகள் எழும்போது அதற்கு எதிர்வினை செய்யாமல், பதில் சொல்லாமல் அமைதியாக இருக்க வேண்டும். தொடர் பயிற்சியின் மூலம், தியானம் செய்யும்போது மனம் அமைதியடையும். எண்ணங்களற்ற நிலையை அடையலாம்.


Post Comment

Post Comment