இளந்தேவதையாய் தோற்றம் பெற செய்யும் டூடூ ஆடைகள் :


Posted by-Kalki Teamபெண் குழந்தைகள் குட்டி தேவதைபோல் தெரிகின்ற வாறு இடுப்பிற்கு மேல் இருக்கமாகவும், இடுப்பில் இருந்து கால் பகுதி வரை அதிக மடிப்புகள் கொண்ட குடை மாதிரி உப்பலாக தெரியும் வாறு உருவாக்கப்பட்டதே டூடூ ஆடை.

பெண் குழந்தைகளுக்கு பிறந்த நாள் கொண்டாட்டத்தின்போது அணிவிக்கப்படும் ஓர் ஆடை வகைதான் டூடூ. முதல் பிறந்த நாள் போது பெண் குழந்தைகள் குட்டி தேவதைபோல் தெரிகின்ற வாறு இடுப்பிற்கு மேல் இருக்கமாகவும், இடுப்பில் இருந்து கால் பகுதி வரை அதிக மடிப்புகள் கொண்ட குடை மாதிரி உப்பலாக தெரியும் வாறு உருவாக்கப்பட்டதே டூடூ ஆடை.

நவீன காலத்தில் மேல் ஆடையுடன் இணைந்த பாலே நடன ஆடைதான் டூடூ. இது இரு வகையாக அழைக்கப்படுகிறது. ரொமான்டிக் டூடூ என்பது மென்மையான மணி போன்ற அமைப்பிலானது. கீழ் கணுக்கால் வரை நீண்டு இருக்கும். பழங்கால டூடூ என்பது குட்டையான, இறுக பிடித்துள்ள ஆடை. டூடூ என்ற பெயர் வந்த காரணம் பலரும் அறியாதது. 1881-க்கு பிறகு தான் இந்த ஆடை பரவ ஆரம்பித்தது. இந்த ஆடை உருவாக்கம் செய்யப்பட்ட டூனி என்ற துணி வகை பெயரால் டூடூ என அழைக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இடுப்பு பகுதியில் அதிக மடிப்புகள் கொண்டவாறு பல அடுக்குகள் கொண்ட குடை மற்றும் மணி அமைப்பில் உருவாக்கப்படும் ரொமாண்டிக் டூடூ 1832-க்கு பிறகே உருவாக்கம் பெற்றது. டூடூ ஆடைகள் டார்லடான், பட்டு, மஸ்லின், டூனி மற்றும் நைலான் துணிகளில் உருவாக்கப்படுகிறது. ரொமாண்டிக் டூடூ ஆடைகள் தற்போது புதிதாக பிறந்த நாள் கொண்டாடும் குட்டி தேவதைகளின் தனிசிறப்பு மற்றும் முதல் தர ஆடையாக அறியப்படுகிறது.

விரிந்த குடையாய் அழகிய டூடூ ஆடைகள் :

டூடூ ஆடைகள் என்பதில் வானவில் பூக்கள், சிண்ட்ரெல்லா, வெண்மேகம் என்றவாறு பல டிசைன் மற்றும் வண்ண பிரிவுகளின் அடிப்படையில் பெயர் இடப்படுகின்றன. கண்ணை வர்ணம் மட்டுமல்ல மெல்லிய நெட் துணிகள் அடுக்கடுக்காய் பரந்து விரிந்தவாறு சில மாடல்களில் பெரிய பூக்கள் பதித்தும், இறுக்கமான மேல் சட்டை அமைப்பும் அந்த ஆடையின் கவுரவத்தை உயர்த்துகின்றன.

பெரிய பூக்கள் வடிவமைப்பு செய்யப்பட்ட டூடூ ஆடைகள் :

பெண் குழந்தைகளின் மேல் சட்டை அமைப்பு என்பது பெரிய ஒற்றை பூ (அ) இரு வண்ண மலர் கொத்துகள் கொண்ட அமைப்புடன் உருவாக்கப்பட்டுள்ளன. சில டூடூ ஆடைகளின் மேற்புற பூங்கொத்துகளின் அதே பூக்கள் வலை போன்ற விரிந்த பாவாடை அமைப்பிலும் படர விடப்பட்டுள்ளன. அதிகபட்சம் டூடூ ஆடைகளின் இடுப்பு பகுதிகள் பெரிய ஒற்றை பூவுடன் அலங்கரிக்கப்பட்டுள்ளன.

வடிவங்களில் வேறுபட்ட டூடூ ஆடைகள் :

கணுக்கால் வரை நீண்ட டூடூ ஆடைகள் மட்டுமல்லாது முட்டி பகுதி வரை நீண்ட நடுத்தர குட்டை மற்றும் குட்டை பாவாடை அமைப்பு கொண்ட டூடூ ஆடைகள் வருகின்றன. டூடூ ஆடைகளின் நிறம் பெரும்பாலும் இங்கிலீஷ் கலர்களிலேயே உள்ளன. ஆங்கிலேய பாணி ஆடை அமைப்பு என்பதுடன், அதே நிற கலாசாரத்துடன் வருகிறது. அதாவது வெளிர் நீலம், வெளிர் பச்சை, வெளிர் சிவப்பு, வெள்ளை போன்றவை டூடூ ஆடைகளின் நிற வரிசையாக உள்ளது.

தேவதை என திகழும் பெண் குழந்தைகள் :

நமது பாரம்பரிய குட்டி இளவரசிகளின் ஆடை வேறு. ஆனால் மேற்கத்திய கலாசார குட்டி இளவரசிகளின் ஆடை டூடூ. இந்த டூடூ ஆடை அணிந்து வரும் குழந்தைகள் இளந்தேவதைகள் போலும், இளவரசிகள் போலும் தோற்றமளிக்கின்றனர். அதற்கேற்ற அந்த நெட் துணிகளின் விரிந்த அமைப்பும், ஒரு பக்க மற்றும் இரு பக்க கை அலங்கரிப்பு என டூடூ ஆடைகள் அதிக அலங்கரிப்புடன் திகழ்கின்றன. அதனால்தான் பிறந்த நாள் மற்றும் விழாக்களின்போது அழகிய டூடூ ஆடைகள் பெண் குழந்தைகளை அலங்கரிக்கின்றன.


Post Comment

Post Comment