வெள்ளை தாமரையில் - சகலகலா வல்லி :


Posted by-Kalki Teamமுப்பெரும் பெண் தெய்வங்களில் கல்விக்குரிய கடவுளாகவும், படைப்பு தெய்வமான பிரம்மாவின் மனைவியாகவும் உள்ளவர் சரஸ்வதி.

உலகின் ஒவ்வொரு உயிரினமும் அதனதன் அறிவுக்கு தக்கவாறு ஏதேனும் கற்றுகொண்டு அதன்படியே செயல்படுகின்றன. அனைத்து உயிரினங்களுக்கும் ஞானம் என்பதே பிறவிலேயே உண்டு. அந்த ஞானம் கல்வியை வழங்குபவள் சரஸ்வதி. முப்பெரும் பெண் தெய்வங்களில் கல்விக்குரிய கடவுளாகவும், படைப்பு தெய்வமான பிரம்மாவின் மனைவியாகவும் உள்ளவர் சரஸ்வதி. சரஸ்வதி தேவியை பற்றி கந்த புராணம் “அனைத்து உயிர்களின் நாவிலும் வீற்றிருப்பவள் கலைமகள்” என கூறுகிறது.

இந்தியாவின் மிக பழமையான பல ஆகமங்களும், புராணங்களும் சரஸ்வதியின் சிறப்புகளையும், அவரின் தனித்துவத்தையும் குறிப்பிடுகின்றன. விஷ்ணு தர்மோத்திர புராணம், மகாமத்யம், பிரம்ம வைவர்த்த புராணம், சரஸ்வதீய சித்ரகர்ம சாஸ்திரம், போன்ற புராணங்களும், அம்சுமத் போதாகமம், பூர்வகாரணாகமம் போன்ற ஆகமங்களும் சஸ்வதியின் தோற்ற அமைப்பு, சிறப்பு போன்றவற்றை குறிப்பிடுகிறது.

சரஸ்வதி என்றாள். சமஸ்கிருதத்தில் நகர்தல், ஆற்றொழுக்காக செல்லல் என்று அர்த்தம். அதன் காரணமாகவே ரிக் வேதத்தில் சரஸ்வதி ஆறாக உருவாக்கப்பட்டுள்ளாள். மேலும் வளமை, படைப்பு, துய்மை போன்றவற்றின் பிரதிநிதியாகவும் சரஸ்வதி விளங்குகிறாள்.

கல்வி கடவுள் என்பது மட்டுமின்றி அனைத்து கலைகளுக்கும் தலைவியாக ஞானத்தின் பிறப்பிடமாய் சரஸ்வதி விளங்குகிறாள்.

சரஸ்வதி தேவி தோற்றப்பின்னணி

சரஸ்வதி தேவியின் தோற்றம் குறித்து புராணங்கள் வெவ்வேறு விதமாக கூறுகின்றன. பிரம்மவைவர்த்த புராணத்தின் படி பிரம்மா உலகை படைக்கின்ற போது அவரது உடல் இருபிரிவாக பிரிகின்றது. ஒரு பகுதி ஆண், மற்றொரு பகுதி பெண். அதில் பெண் பகுதியாக தோன்றியவளே சரஸ்வதி.

தேவி பாகவிதம் கூறும் போது பாதி பெண்ணாகவும், பாதி ஆணாகவும் (புருஷ மற்றும் பிரகிருதி) என்ற இரு கூறுகளின் உருவாக்கமாக கூறுகிறது. மேலும் தேவி பாகவிதம் பிரம்மாவின் நாவில் இருந்து தோன்றியவளே சரஸ்வதி எனவும், சாந்த சாத்வீக குணமுடன், மஞ்சள் நிற ஆடை அணிந்து, அணிகலன் சூடி, கையில் வீணையும், சுவடியும் ஏந்தியவள் என்று கூறுகிறது.

அம்சுமத் பேதாகமம்த்தின் படி சரஸ்வதி தேவியின் வடிவம் என்பது வெள்ள தாமரையில் அர்த்த பத்மாசனத்தில் அமர்ந்திருப்பாள் நான்கு கரங்களில் வலப்புற கரங்களில் வியாக்யான முத்திரை, அத்த மாலையும், இடப்புற நகரங்களில் புத்தகமும், வெள்ளை தாமரையும் வைத்திருப்பாள். தலையில் சாடாமகுடம் மற்றும் அனைத்து விதமான அணிகலன் அணிந்திருப்பாள் என கூறுகிறது.

பேச்சுகலையின் தேவதை

இனிமையான பேச்சும், உயர்வான சிந்தனைகள், மகிழ்ச்சியான இடங்களில் தான் உறைபவள் சரஸ்வதி என ரிக்வேதம் கூறுகிறது. மொழி என்ற தொடர்ச்சியான ஒலியில் சரஸ்வதி நிறைந்திருந்து கருத்து, எண்ணம், கலை, கலாச்சாரம் போன்றவைகளில் பரவி பரிணமிக்கிறாள். மொழியின் கடவுள், கலையின் கடவுள், பேச்சுகலையின் தேவதை என்றவாறு போற்றப்படுகிறாள்.

எல்லா சமயங்களும் வணங்கும் தெய்வம்

இந்து சமயம் மட்டுமின்றி சமணம், பெளத்தம், போன்றவையும் சரஸ்வதி வழிபாடு மேற்கொள்கின்றன. இந்து மதத்தின் சைவம், வைணவம், சாக்தம், காணா பத்தியம், செளரம் போன்ற அனைத்தும் கலைமகள் வழிபாடு குறித்தும், பெருமை பற்றியும் கூறுகின்றன.

சமண மதம் சுருதி தேவி, வாக்தேவி, ஜினஐஸ்வர்யா, ஜீனவாணி என்று அழைத்து வணங்குகின்றன.

பெளத்த மதத்தில் மகா சரஸ்வதி, சூரிய சரஸ்வதி, வஜ்ரவீணா, வஜ்ரசாரதா, வஜ்ர சரஸ்வதி என ஐந்து பெயர்களில் சரஸ்வதி தேவியை வணங்குகின்றனர். அதனால் தான் உ.வே.சாமிநாத அய்யர் “கலைமகள் சமயங் கடந்த தெய்வம்” என்று போற்றி குறிப்பிடுகிறார்.

தனி சிறப்பு மிக்க சரஸ்வதி ஆலயங்கள்

சரஸ்வதி தேவியின் ஆலயம் எனும் போது தமிழகத்தில் கூத்தனூர், குலசேகரபுரத்தில் தனி ஆலயம் உள்ளது. தில்லை காளி கோயில் மூன்று தேவியரில் ஒருவராக காட்சி தருகிறாள். கர்நாடகாவின் சிருங்கேரி, ஆந்திராவில் பசர எனும் இடங்களில் தனி ஆலயம் உள்ளது.

தமிழ் புலவர்களான கம்பர் சரஸ்வதி அந்தாதியும், குமரகுருபரர் எழுதிய சகலகலா வல்லி மாலையும் சரஸ்வதி தேவியின் புகழையும், சிறப்பையும் போற்றி பாடுகின்றன.


Post Comment

Post Comment