சனி தோஷம் போக்கும் நிம்மேலி கோவில் :


Posted by-Kalki Teamநிம்மேலி கோவில் சனீஸ்வரனை எள் விளக்கு ஏற்றி வழிபட்டால் சனிப் பார்வையால் அவதிப்படுபவர்களும், அஷ்டமச் சனி உள்ளவர்களும் நிவாரணம் பெறுவது நிஜம் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

நாகை மாவட்டம் சீர்காழி - பனங்காட்டாங்குடி சாலையில், சீர்காழிக்கு மேற்கே மூன்று கி.மீ தொலைவில் உள்ளது நிம்மேலி என்ற தலம்.

நேர்மை நிலமையிலிருந்து விலகி யார் தவறு செய்தாலும் தண்டனையிலிருந்து தப்ப முடியாது. இது இயற்கை நியதி. இந்த நியதி மானிடனுக்கு மட்டுமல்ல சனீஸ்வரனுக்கும் பொருந்தும். அது என்ன கதை?

சனி செய்த தவறு :

திடத நாட்டை ஆண்ட மன்னன் வீரசேனன். அவனது மகன் நளன் குண்டின புரத்து அரச குமாரியான தமயந்தியின் சுயம்வரத்தில் கலந்து கொள்கிறான். இந்திரன், அக்னி, வாயு, எமன் போன்றவர்களும் தமயந்தியின் மேல் ஆசை கொண்டு அந்த சுயம் வரத்தில் நளனின் உருவெடுத்து கலந்து கொள்கின்றனர். தமயந்தி தன் சமயோசித புத்தியினால் நளனை அடையாளம் கண்டு கொள்கிறாள். அவனுக்கே மாலையிடுகிறாள். மற்றவர்கள் ஏமாற்றத்துடன் திரும்புகின்றனர்.

காலதாமதமாக வந்த கலிபுருடன், நளனுக்கு தமயந்தி மாலையிட்டு விட்டாள் என்ற செய்தி அறிந்து நளனின் மேல் பகை கொள்கிறான். எனவே கலிபுருடன் சனியின் துணையை நாடுகிறான். சனியும் தன் நடுநிலையிலிருந்து நழுவி நளனுக்கு மிகுந்த தொல்லை கொடுக்கிறான். கார்கோடன் என்ற பாம்பை ஏவி நளனைத் தீண்டச் செய்கிறான்.

வேதனையடைந்த நளன் திருநள்ளாறு சென்று சிவபெருமானை பூஜிக்க, காரணமில்லாமல் நளனுக்கு துன்பமிழைத்த சனியின் மேல் சிவபெருமான் கோபம் கொள்ள, அஞ்சிய சனி அவரது திருவடிகளில் விழுந்து தன்னை மன்னிக்கும்படி வேண்டுகிறான்.

சனியை சிவலிங்க பூஜை செய்து வருமாறு சிவபெருமான் அருளுகிறார். முன்பே சாபத்தினால் குஷ்ட ரோகம் பெற்றிருந்த சனி, இப்போதைய சாபமும் சேர்ந்து இரட்டிப்பாக, வடக்கு நோக்கி பயணமாகிறான்.

சாபம் நீங்கிய சனி :

நிம்மேலி என்ற தலத்துக்கு வந்து சேர்ந்த சனி அங்கு சிவன் கோவிலின் முன் உள்ள தீர்த்தத்தில் நீராடி, உடல் குளிர்ச்சியடைந்து, அந்த ஆலயத்தில் உள்ள வருண லிங்கத்தை வழிபட, சனியை விட்டு நோய் விலகுகிறது. பின், திருநள்ளாறு நோக்கி புறப்பட்டுச் சென்ற சனி பகவான் அங்கு தர்பாரன்யேஸ்வரரை வணங்கிவிட்டு அங்கேயே தங்கி அருள்புரிய தொடங்கினான்.

சனியின் உடல் வேதனை தீர்ந்து, அவன் நிம்மதி அடையக் காரணமான இத்தலம் ஆரம்பத்தில் நிம்மதி என்றே அழைக்கப்பட்டது. பிறகு அது மறுவி, நிம்மலியாக மாறி, தற்போது ‘நிம்மேலி’ என்று அழைக்கப்படுகிறது.

சனி பகவான் வழிபட்ட ஆலயம்தான் அருள்மிகு விசுவநாதர் ஆலயம். இங்கு அருள்பாலிக்கும் இறைவன் பெயர் அருள்மிகு விசுவநாதர். இறைவி அருள்மிகு விசாலாட்சி.

ஆலய அமைப்பு :

ஆலயம் மேற்கு திசை நோக்கி அமைந்துள்ளது. இது ஒரு சிறப்பு அம்சம். உள்ளே நுழைந்ததும் பலிபீடமும் நந்தியும் உள்ளன. வடக்குப் பிரகாரத்தில் வள்ளி, தெய்வானையுடன் முருகன், இடும்பன் திருமேனிகள் உள்ளன. வடகிழக்கு மூலையில் நவக்கிரக நாயகர்களும், கிழக்கில் சண்டி கேசுவரரும் அருள்பாலிக்கின்றனர்.

உள்ளே நுழைந்ததும் மகாமண்டபமும் அதைத் தொடர்ந்து அர்த்த மண்டபமும் உள்ளன. கருவறையில் இறைவன் அருள்மிகு விசுவநாதர் லிங்கத் திருமேனியில் அருள்பாலிக்கிறார். கருவறையின் வடக்கில் தெற்கு முகம் பார்த்து அருள்மிகு விசாலாட்சி அம்மை வீற்றிருக்கிறார்.

இறைவனின் கர்ப்பக்கிரக தேவக் கோட்டத்தில் தென்புறம் தட்சிணாமூர்த்தி மற்றும் வடபுறம் துர்க்கையின் திருமேனிகள் உள்ளன. நந்தி மண்டபத்தின் வடதிசையில் வருணலிங்கமும் அவரை வணங்கும் சனீஸ்வரனும் காட்சி தருகின்றனர்.

ஆலயத்தின் தலவிருட்சம் அரசமரம். இந்த ஆலயம் சுமார் 500 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டிருக்கலாம் என மதிப்பிடப்பட்டுள்ளது.

சனி பாவ விமோசனம் பெற்ற தலம் இது. எனவே, சனியால் பாதிப்பு உள்ளவர்கள் இத்தலத்திற்கு வந்து இங்குள்ள இறைவனையும் இறைவியையும், வருணலிங்கத்தையும் வழிபடுகின்றனர். சனி பகவானால் பாதிக்கப்பட்டவர்கள் இத்தலம் வந்து விசுவநாதரையும் வருண பகவானையும் சனிக்கிழமைகளில் வழிபட்டு பின்னர் திருநள்ளாறு சென்று சிவனையும் சனி பகவானையும் வழிபட்டு வந்தால் சனி கிரகத்தினால் ஏற்படும் பாதிப்புகள் நீங்கி நலம் பெறுவர் என்கின்றனர் பக்தர்கள்.

நினைவில் இருக்க வேண்டிய உன்னத நாட்கள் :

ஒவ்வொரு ஆண்டும் தொடங்குகிற பொழுதே முக்கிய தினங்களை குறித்து வைத்துக் கொண்டு வழிபாட்டில் ஈடுபட வேண்டும். குறிப்பாக, அமாவாசை, பவுர்ணமி, கிரகண நாட்கள், முன்னோர்களின் திதி தினங்கள், சிவராத்திரி, நவராத்திரி, நமது பிறந்த நட்சத்திர நாட்கள், மகான்களின் அவதார தினங்கள், ராமநவமி, கோகுலாஷ்டமி, வருடப்பிறப்புநாள், மாதப்பிறப்பு நாள், ஏகாதசி, சஷ்டி, குடும்ப உறுப்பினர்களின் பிறந்த நாட்கள் போன்றவற்றை மனதில் பதித்து வைத்துக்கொண்டு அந்த புண்ணிய தினங்களில் நல்ல எண்ணங்களோடு செயல்பட்டு இறைவனையும், முன்னோர்களையும் நினைத்து வழிபட வேண்டும்.

அந்த நாட்களில் ஏழை, எளிய மக்களுக்கு உணவளிக்கலாம். முதியவர்களுக்கு ஆடை தானம் வழங்கலாம். வசதியில்லாத குழந்தைகளின் கல்விக்கு, கல்யாணக் கனவுகளை நிறைவேற்ற ஒரு தொகையை நிதி உதவிக்காக எடுத்து வைக்கலாம். அன்றைய தினம் ஏதேனும் ஒரு நல்ல காரியம் செய்தால் உங்கள் வாழ்க்கையில் உன்னதமான பலன் கிடைக்கும் என்பது உறுதி.

ஐப்பசி பவுர்ணமியில் இங்குள்ள இறைவனுக்கு சிறப்பான முறையில் அன்னாபிஷேகம் நடைபெறுகிறது. மாத பிறப்பு, அமாவாசை, பவுர்ணமி, சோம வாரங்கள், மார்கழி தனுசு நாட்கள், கார்த்திகை போன்ற நாட்களில் இறைவன், இறைவி, வர்ணலிங்கம், சனி பகவான் ஆகியோர்களுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறும். காலை 8 மணி முதல் 11 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 8.30 மணி வரை ஆலயம் திறந்திருக்கும்.

இந்த ஆலயம் செல்ல சீர்காழியிலிருந்து பேருந்து மற்றும் ஆட்டோ வசதி உள்ளது.

சனி பகவானுக்கு அருளிய வருணலிங்கத்தையும் அருகே உள்ள சனீஸ்வரனையும் எள் விளக்கு ஏற்றி வழிபட்டால் சனிப் பார்வையால் அவதிப்படுபவர்களும், அஷ்டமச் சனி உள்ளவர்களும் நிவாரணம் பெறுவது நிஜம் என்பது பக்தர்களின் நம்பிக்கை.


Post Comment

Post Comment