கங்கா தேவியை சிவபெருமான் தலையில் வைத்திருக்க காரணம் என்ன...?


Posted by-Kalki Teamசிவபெருமானுக்கு இரண்டு மனைவிகள் என்று யாவரும் கூறுதுண்டு. ஆனால் அது தவறு. சிவனுக்கு பார்வதி தேவி மட்டுமே மனைவி. அப்படியானால் கங்கா தேவியை சிவபெருமான் தலையில் ஏன் வைத்திருக்கிறார் என நமக்கெல்லாம் கேள்வி எழும். அதற்கான விடையை பார்ப்ப்போம்.

அன்றைய காலத்தில் கங்கையானது பூமியில் ஓடாது, ஆகாய கங்கையாக ஓடி கொண்டிருந்தது. அப்போது பகீரதன் என்ற அரசன் தன் மூதாதையர்களின் ஆத்மா சாந்தி அடைய வழி தேடி முனிவர்களை நாடினான். அப்போது முக்காலம் அறிந்த முனிவர் ஒருவர், ஆகாய கங்கையை பூமிக்கு கொண்டு வந்து அவர்களின் அஸ்தியை அதனில் கரைத்தால் அவர்கள் முக்தி அடைவார்கள் என்று கூறினார். ஆகையால், பகீரதன் கங்கையை பூமிக்கு அழைக்க கங்கா மாதாவை நோக்கி கடுந்தவம் புரிந்தான்.

பகீரதனின் கடுந்தவத்தை மெச்சி கங்கா மாதா அரசன் முன் எழுந்தருளினாள். வரம் தந்த கங்கா தேவி ஒரு நிபந்தனை விதித்தாள். நான் என்னுடைய வேகத்தில் இந்த பூமியை நோக்கி வந்தேன் என்றால் இந்த பூமி என் வேகம் தாங்காது வெடித்து சிதறிவிடும். ஆகவே, என் வலிமையை தாங்க கூடிய ஒருவர் என்னை அவர் தலையில் தாங்கி இந்த பூமிக்கு தருவிக்க வேண்டும். நீ தென்னாடுடைய சிவனை நோக்கி தவம் செய். பரமனால் மட்டும்தான் என் வலிமையை தாங்க முடியும்" என்று கூறி மறைந்தாள்.

பகீரதனும் சிவனை நோக்கி தவம் செய்து தான் எண்ணத்தை வேண்டி நின்றான். சிவ பெருமானும் தன் சடாமுடியை விரித்து அதில் கங்கையை இறங்க சொன்னார். சிவனின் திருமுடியை அடைந்த கங்கா, வேகம் குறைந்து திருமுடியில் இருந்து பூமிக்கு இறங்கினாள். ஆகவே தான், சிவனின் திருமுடியில் கங்கா குடியிருக்கிறாள்.


Post Comment

Post Comment