அரசருக்கு அறிவுறுத்திய விநாயகர் :


Posted by-Kalki Teamஅரசர் ஒருவர் அளவுக்கு மீறிய மிகுந்த அகந்தையும், ஆணவமும் கொண்டராக இருந்தார். ஒரு சமயம் நாரதர் அவரைச் சந்திக்கச் சென்றபோது, அவரை அலட்சியம் செய்தார் அரசர். இருந்த போதிலும் நாரதர் அரசரிடம், ""மன்னா! பகவான் திருவருளால் உன் நாடு செழிப்பதாக! என்று வாழ்த்தினார். அதைக் கேட்டு சிரித்த அரசர், ""என்ன சொல்கிறீர் நாரதரே! பகவான் அருளால் என் நாடு செழிக்க வேண்டுமா? நான் நல்ல முறையில் நிர்வாகம் செய்கிறேன். என்னால் தான் எல்லாம் நடக்கிறது. இதில் பகவானுக்கு என்ன வேலை? என்று ஏளனமாக சொன்னார் . அரசரது பேச்சில் ஆணவம் இருந்ததைக் கண்ட நாரதர், அவருக்கு புத்திமதி சொல்லிவிட்டு, கவுண்டின்ய மகரிஷி ஆசிரமத்திற்குச் சென்றார். அங்கு மகரிஷி நடத்திய விநாயகர் பூஜையில் கலந்துகொண்டுவிட்டு கிளம்பினார்.

வழியில் விநாயகரைக் கண்டார் நாரதர். அவரது முகக்குறிப்பை அறிந்த விநாயகர், ""நாரதரே! உம் முகத்தைப் பார்த்தால் என் உதவி தேவைப்படுவது போலத் தெரிகிறதே! என்றார்.நாரதர் அரண்மனையில் நடந்ததைச் சொன்னார். அரசருக்கு புத்தி புகட்ட விநாயகர் அந்தணனாக உருவெடுத்து, அரண்மனைக்குச் சென்றார். தனக்கு மிகவும் பசிப்பதாகச் சொல்லி உணவு கேட்டார். அரசர் அவரிடம், ""அந்தணனே! அன்ன சாலைக்குச் சென்று வயிறார சாப்பிட்டு விட்டுப் போ, என்றான். அங்கு அவருக்கு சமையற்காரர்கள் விதவிதமான உணவுகளைப் பரிமாறினர். அவை அனைத்தையும் ஒரு பிடிபிடித்தவர்,

"உம்... இன்னும் என்ன இருக்கிறது? கொண்டு வாருங்கள்! எனக்கு இன்னும் பசி தீரவில்லை, என்றார். அவர்கள் சமைத்து வைத்திருந்த உணவு முழுவதையும் அவருக்கு பரிமாறினர். ஊஹும்... அவர் கொஞ்சமும் பசியாறியதாகத் தெரியவில்லை. மேலும் சமைக்க வைத்திருந்த அரிசி, தானியங்களையும், அங்கு தோட்டத்தில் விளைந்த காய், பழங்களையும் சாப்பிடக்கொடுத்தனர். அதை சாப்பிட்டும் அவரது பசி நீங்கவில்லை. மிரண்டு போன சமையற்காரர்கள், பயத்தில் ஓட்டம் பிடித்தனர். நடந்ததை அறிந்த அரசர் அன்னம் பரிமாறும் இடத்திற்கு வந்தான். அவரிடம் அந்தணர், "என்ன மகாராஜா, யானைப்பசிக்கு சோளப்பொரியா? நீ பரிமாறிய உணவு எனக்கு போதவில்லையே!"என்றார்.

அரசர் ஆத்திரத்தில்,"அந்தணனே, இங்கு மேலும் உனக்கு உணவு தர முடியாது. உன் பசி தீர்க்கும் இடம் பார்த்து நீ செல்லலாம்! என்று கத்தினான். "நல்லாட்சி நடக்கிறது. என் நிர்வாகத்தில் மக்களுக்கு ஒருகுறையும் இல்லை. என்னால் எல்லாம் முடியும் என்று வீண் தம்பட்டம் பேசுகிறாயே! உன்னால் என் பசியைக் கூட போக்கமுடியவில்லையே என்று சொல்லிவிட்டு, அங்கிருந்து கிளம்பியவர், தன் பக்தன் திரிசுரன் வீட்டிற்குச் சென்றார். அங்கு திரிசுரனும், அவன் மனைவி விரோசனையும் விநாயகர் பூஜையில் இருந்தனர்.

அவனது வீட்டு வாசலில் நின்றவர், "ஐயா! எனக்குப் பசிக்கிறது. சிறிது உணவிருந்தால் போடுங்கள்! என்று யாசகம் கேட்டார். அவரிடம், "ஐயா! தங்களுக்கு கொடுப்பதற்கு தற்போது எங்களிடம் ஏதுமில்லை. இனிமேல்தான் சமையல் செய்யப்போகிறேன், என்றாள் விரோசனை.ஆனால், திரிசுரனுக்கு வந்தவரை வெறும் கையாக அனுப்ப மனமில்லை. தன் கையில் விநாயகர் பூஜைக்காக வைத்திருந்த அருகம்புல்லை கொடுத்தான். அதை வாங்கிக் கொண்ட அந்தணர், வாயில் போட்டுக் கொண்டார். அந்த கணமே அவரது வயிறு நிறைந்தது.இவ்வேளையில் அரண்மனைக்கு அந்தணனாக வந்தது யார் என அறிய, அவரைத்தேடி திரிசுரன் வீட்டிற்கு வந்தான் அரசர். அங்கு இருவருக்கும் விநாயகர் சுயரூபம் காட்டினார். ""திரிசுரனின் உண்மையான பக்திக்கு கட்டுப்பட்டு சாதாரண அருகம்புல் கூட விநாயகரின் பசியைப் போக்கிவிட்டதே! என்னால் தான் எல்லாம் நடக்கிறது என்று ஆணவத்தால் அறிவை இழந்து விட்டேனே! என விநாயகரிடம் மன்னிப்பு கேட்டார் அரசர்.Post Comment

Post Comment