பெண்களுக்கு வழித்துணையாக வரும் வன துர்க்கை!


Posted by-Kalki Teamஅலுவலகங்களுக்கு சென்று பணிபுரியும் பெண்கள், வெளியூர் சென்று விடுதியில் தங்கிப் படிக்கும் பெண்கள் ஆகியோர் பாதுகாப்பு குறித்து பெற்றோர்கள் பயப்படுவதைப் பார்க்கிறோம். இவர்கள் எல்லோருக்கும் வழித்துணையாக இருந்து பாதுகாப்பு தருகிறாள், ஆதலையூர் நத்தத்தில் அமைந்திருக்கும் வன துர்கை.

ஒரு முறை கைலாயத்தில் மூவுலகையும் ஆளும் பரம்பொருளானவன் ஈசனுக்கும், பார்வதி தேவிக்கும் தங்களுக்குள் யார் பெரியவர் எனும் போட்டி வருகிறது. "சிவம் பெரிதா ! சக்தி பெரிதா !

சக்திதான் பெரிதென்று சாதித்தாள் பார்வதி, சிவமே பெரிதென்று சினந்தார் சிவபெருமான். திருவிளையாடல் ஆரம்பமானது.

தங்களுக்குள் யார் பெரியவர் என்று நிரூபிக்க இருவரும் எதிரும், புதிருமாக நின்று விளையாடல்களைத் தொடந்தனர். மறைந்தும் தோன்றியும், ஓடியும், ஒளிந்தும் அவர்களின் விளையாட்டு தொடர்ந்தது. ஒரு கட்டத்தில் ஒளிந்து விளையாடும் போது பசுவாக மாறி பரம் பொருள் மறைந்து விடுகிறார்.

இதனை அறியாத பார்வதி தேவி பரம் பொருளைத் தேடி அங்கும், இங்கும் அலைகிறார்.

கானகம், வெயில், கடுங்குளிர் பாராது அலைந்தும் பார்வதி தேவியால் பசுவாகி நின்ற பரம் பொருளைக் கண்டுபிடிக்க முடியவில்லை.

பசு வேடம் பூண்ட பரமன் யாராலும் கட்டுப்படுத்த முடியாத வேகத்தில் ஓடிக் கொண்டிருந்தார். பசுவின் வேகத்தைக் கண்ட மனிதர்கள் பலரும் பயந்து ஓடி ஒளிந்து கொள்ள, இவ்வூரைச் சேர்ந்த அந்தணர்கள் சிலர் வழிமறித்து கட்டி விடுகிறார்கள். பசுவாகிய "ஆ வை தளைந்த (கட்டிய) ஊர் என்பதால் இவ்வூருக்கு "ஆதலையூர்என்ற பெயர் வந்தது.

கும்பகோணத்தில் இருந்து நாகப்பட்டினம் செல்லும் சாலையில், நன்னிலத்தில் இருந்து கிழக்கே 4 கி.மீ. தொலைவில் உள்ளது ஆதலையூர்.

பிற்காலத்தில் பாண்டவர்களுக்கும், கெüரவர்களுக்கும் குருஷேத்திரப் போர் தொடங்கிய காலகட்டத்தில் பஞ்ச பாண்டவர்களுள் ஒருவனான பீமன் இத்தலத்திற்கு வந்து இவ்வாலயத்தில் உள்ள சிவபெருமானை வழிபட்டு பலம் பெற்றான்.

பீமன் வழி பட்டதால் இந்த ஈஸ்வரனுக்கு "பீமேஸ்வரர் என்று பெயர்.

அம்பாள் "ஆனந்த நாயகி அம்மன். பிரகாரத்தில் வள்ளி தெய்வானை உடனுறை சுப்பிரமணிய சுவாமி, தட்சிணாமூர்த்தி, நவகிரகங்கள் என்று ஆகம விதிப்படி அமைக்கப்பட்டிருந்தது ஆலயம், கால வெள்ளத்தில் சிதைந்து சிதிலமடைந்து போய்விட்டது. (இன்னும் இந்தக் கோயிலின் சிதிலங்களையும், சிதிலங்களில் இருக்கும் கல்வெட்டுகளையும் பார்க்க முடியும்) காடுமண்டி அடர்ந்த வனமாகிப் போய்விட்டது.

பூஜைகள் இல்லாமல் இருந்த அனைத்து விக்ரகங்களையும், மக்கள் வசிக்கக்கூடிய ஊருக்குள் கொண்டு வந்து பிரதிஷ்டை செய்து இன்று பூஜைகள் நடந்து வருகின்றன.

ஆனால் பிரகாரத்தில் இருந்த

துர்க்கையம்மனை மட்டும் ஊர் மக்களால் அசைக்க கூட முடியவில்லை. புண்ணிய பூமியை விட்டு புறப்படாமல் அழுத்தமாய் நின்று விட்டாள் துர்க்கை.

மக்கள் துர்க்கைக்கு அதே இடத்தில் ஆலயம் அமைத்து வழிபட்டு வருகிறார்கள்.

ஆதலையூர் மற்றும் திருப்பனையூர் என்ற பாடல் பெற்ற தலத்திற்கு இடையே இருக்கிறது நத்தம் காடு. இங்கு அமர்ந்து அருள்பாலிக்கிறாள் அம்மன்.

இன்றைக்கும் கால்நடையாகவே மக்கள் இந்தக் காட்டுப்பகுதியை கடந்து செல்கிறார்கள். போக்குவரத்து வசதிகள் இல்லை.

அத்தனை பேருக்கும் வழித்துணையாக வருகிறாள் அம்மன். இதுவரை இங்கு வழிப்பறியோ, திருட்டோ நடந்தது இல்லை. ஒரு முறை வந்து வழிபட்டு செல்பவர்களின் பின்னால் சூலம் ஏந்தி துர்க்கை பாதுகாப்புக்கு வருகிறாள் என்பது பக்தர்களின் அனுபவம்.

அதுபோலவே இந்த காட்டுப்பகுதியில் வெறும் பொட்டலில் சேமித்து வைக்கப்படும் தானியங்கள் களவு போனதாக செய்தியே இல்லை என்று சிலாகிக்கிறார்கள் ஊர் மக்கள். மேலும் இங்கு வந்து வழிபடும் பெண்கள் மன வலிமையையும் உடல் வலிமையும் பெறுகிறார்கள் என்பது நம்பிக்கை.

இந்த வனதுர்க்கை ஆலயத்திற்கும் (தற்போது இந்த ஊரில் வன துர்க்கையை செல்லியம்மன் என்று வணங்குகிறார்கள்) அருகிலுள்ள கிராம தேவதை கோயில்களுக்கும் கும்பாபிஷேகம் செய்யும்பொருட்டு திருப்பணிகள் நடைபெற்று வருகின்றன.

பக்தர்கள் இவ்வாலய திருப்பணியில் பங்கு கொண்டு இறைவனின் அருளைப் பெறலாம்.


Post Comment

Post Comment