மன்னனின் மனதை மாற்றிய நீறு :


Posted by-Kalki Teamவிபூதி , பஸ்மம், ரக்ஷை, திருநீறு இப்படி எந்த பெயர் வைத்து நாம் வணங்கினாலும் ,திருநீறு என்பது சைவ சமயத்தின் ஒரு ஒப்பற்ற குறியீடாகும். முடியாண்ட மன்னனும் முடிவில் பிடி சாம்பல் ஆவான் என்ற தத்துவத்தை உணர்த்துவதே திருநீற்றின் மகிமையாகும். திருநீற்றின் பெருமைதனை தெரிந்துக்கொள்வோம்.

அரிகேசரி , அரிமர்த்தன பாண்டியனுக்குப் பிறகு மதுரையைச் சிறப்பாக ஆட்சி செய்தவன். கூன் பாண்டியன் என்றால் இன்னும் பிரசித்தம்.சோழர்குலப் பெண்ணான மங்கையர்க்கரசியை திருமணம் செய்துக் கொண்டான்.

வைதீக சமயத்தைப் பின்பற்றி வந்த அரிகேசரி, காலப்போக்கில் சமண சமயத்தின் மீது பற்று வரவே சமணத்தைத் தழுவினான். மன்னன் எவ்வழியோ மக்களும் அவ்வழி என்று மக்களும், மன்னனை பின்பற்றி பெருமளவில் சமண மதத்தைத் தழுவினர். இதைக் கண்டு அரசிக்கு மிகுந்த வருத்தம். அமைச்சர் குலச்சிறையாருக்கோ அரசனுக்கு எதிரில் விபூதி கூட அணிந்து வர முடியாத நிலை.

இதனால் அரசியும்அமைச்சரும் மன்னன் மீண்டும் சைவமதத்துக்கே திரும்ப வேண்டி தினந்தோறும் சோமசுந்தரக் கடவுளை மனமுருகி வேண்டி வந்தனர். இந்த நிலையில் அந்தணர் ஒருவர் மூலமாக திருஞானசம்பந்தரின் மேன்மையைப் பற்றி அறிந்துகொண்டனர். ஏவலர் ஒருவரை அனுப்பி, வேதாரண்யத்தில் இருந்து மதுரைக்கு அவரை அழைத்துவர பணித்தனர்.

அவரும் திருஞானசம்பந்தரிடம் சென்று மதுரையில் சமணத்தின் எழுச்சியையும், சைவத்தின் வீழ்ச்சியையும் எடுத்துரைக்க ,உடனே திருஞானசம்பந்தர் மதுரைக்குப் புறப்படத் தயாரானார். ஆனால் அப்பர் அவரைத் தடுத்தார்.

உடனே திருஞானசம்பந்தரோ "வேயுறு தோளி பங்கன், விடமுண்ட கண்டன் எனத் தொடங்கும் நவக்கிரகப் பதிகத்தைப் பாடி அப்பரிடம் சம்மதம் பெற்று மதுரைக்குக் கிளம்பினார். மதுரையில் அவருக்கு அரசியும் அமைச்சரும் பலத்த வரவேற்பு அளித்தனர். வந்ததும் நேராக சோமசுந்தரக் கடவுளைச் சந்தித்து வல்லமை வேண்டி திருப்பதிகம் பாடினார்.

அடியார்களுடன் மடம் ஒன்றில் இரவில் தங்கினார்.

இதற்கிடையே சம்பந்தர் மதுரை வந்ததை விரும்பாத சிலர் அவர் தங்கியிருக்கும் மடம் தீப்பிடிக்க அபிசார மந்திரம் ஜபித்தனர். மடம் அப்படியே இருக்கவே மடத்துக்குத் தீ வைத்தனர்.

மடம் தீப்பற்றி எரிவதைக் கண்ட சம்பந்தர் சிறிதும் அச்சமில்லாது பதிகம் ஒன்று பாடினார். மடத்தில் தீ அணைந்தது. ஆனால், மன்னன் பாண்டியனை வெப்பு நோய் தாக்கியது. மன்னன் மிகுந்த வேதனை அடைந்தான். வெப்பு தாங்காமல் பதறித் துடித்தான்.

சமண முனிவர்கள் தங்கள் தவ வலிமையின் மூலமாக மயிற்பீலிகைகளால் மன்னன் உடலை வருடினர். அதுவும் தீயில் வெந்து கருகியது. அப்போது அரசி திருஞானசம்பந்தருக்கு நடந்தது பற்றி மன்னனுக்கு எடுத்துரைத்தார். அவர் வந்தால்தான் இதை தீர்க்க முடியும் என்றும் கூறினார்.

உடனே மன்னன் "அவர் என் சூலை நோயைப் போக்கினால், நான் சமணத்தை விடுவேன். அவரை அழைத்து வருவீர்" எனக் கட்டளையிட்டான். அடுத்த கணமே அரசி மடத்துக்குச் சென்று, சம்பந்தரை வணங்கி நடந்ததைக் கூற, அவரும் அரண்மனை வந்தார். வந்து `மந்திரமாவது நீறு என்ற திருப்பதிகத்தைப் பாடினார். மன்னன் உடலில் திருநீறு பூசினார். மன்னனின் வெப்பு நோய் நீங்கியது. மன்னன் பலமுறை சம்பந்தருக்குத் தன் நன்றியைத் தெரிவித்தான்.

பின்பு சம்பந்தருக்கும் சமணர்களுக்கும் இடையே நடந்த வாத போட்டியிலும் சம்பந்தர் வென்றார். பின்னர் பாண்டிய மன்னன் சைவ சமயத்தை ஏற்று சிறப்பாக ஆட்சிசெய்தான் என்பதை சொல்லவும் வேண்டுமோ....?

ஓம் நமசிவாய ......


Post Comment

Post Comment