நன்மைதரும் 108 விநாயகரின் 16 அடி உயர தங்கத்தேர் வெள்ளோட்டம் :


Posted by-Kalki Teamதிண்டுக்கல்லில், நன்மைதரும் 108 விநாயகரின் 16 அடி உயர தங்கத்தேரின் வெள்ளோட்டம் நேற்று நடந்தது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

திண்டுக்கல் கோபால சமுத்திரக்கரையில் நன்மை தரும் 108 விநாயகர் கோவில் உள்ளது. இந்தக்கோவிலில் பக்தர்கள் தங்களது வேண்டுதல் நிறைவேற திருவுளச்சீட்டு மூலமாக விநாயகரிடம் அனுமதி கேட்கும் வழக்கம் இருக்கிறது. அதன்படி இங்கு 36 அடி உயர மகா சங்கடகர சதுர்த்தி விநாயகர் சிலை மற்றும் 16 அடி உயர தங்கத்தேர் ஆகியவை, விநாயகரிடம் அனுமதி கேட்டு தற்போது அமைக்கப்பட்டுள்ளது. இதன் கும்பாபிஷேக விழா மற்றும் விநாயகர் சதுர்த்தி 50-ம் ஆண்டு பொன்விழா நேற்று நடந்தது.

இதையொட்டி நேற்று முன்தினம் மாலையில் உலக நன்மைக்காகவும், மழை வேண்டியும் வருண யாகம் நடந்தது. இதில் விநாயகர் வழிபாடு, மகா சங்கல்பம், கலச பூஜையுடன் முதற்கால பூஜை தொடங்கி தீபாராதனை, பிரசாதம் வழங்கப்பட்டது.

அதனைத்தொடர்ந்து நேற்று காலை 5.30 மணியளவில் 2-ம் கால பூஜை தொடங்கியது. இதையொட்டி பூர்ணாகுதி, கலசங்கள் ஞான உலா நடைபெற்று, 7.45 மணியளவில் 16 அடி உயர தங்கத்தேர் பிரதிஷ்டாபிஷேகம் மற்றும் நன்மைதரும் விநாயகருக்கு புனிதநீர் ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடந்தது.

8.30 மணியளவில் பக்தர்களின் பால்குட ஊர்வலம் தொடங்கி, கோபால சமுத்திரக்கரையை சுற்றி வந்தது. அதன்பிறகு 12 மணியளவில் நன்மை தரும் 108 விநாயகர் மற்றும் 36 அடி மகா சங்கடகர சதுர்த்தி விநாயகருக்கு பால், பழம், பன்னீர் உள்பட 16 வகையான சிறப்பு அபிஷேகம் நடந்தது.

அதனைத்தொடர்ந்து இரவு 7 மணியளவில் நன்மைதரும் தங்க விநாயகரின் தங்கத்தேர் வெள்ளோட்டம் நடந்தது. இதில் 16 அடி உயர தங்கத்தேர் கோபால சமுத்திரகரையை சுற்றி வலம் வந்தது. தேருக்கு தங்கம் வழங்கியவர்கள், நன்கொடையாளர்கள் திருத்தேர் வடம் பிடித்தனர்.

அதன்பிறகு இரவு 8 மணியளவில் திரைப்பட நடிகர் டி.ஆர்.மகாலிங்கத்தின் மகள் டி.ஆர்.எம்.சாவித்திரியின் பக்தி இன்னிசைக்கச்சேரி நடந்தது. இதில் நகரின் முக்கிய பிரமுகர்கள், வர்த்தகர்கள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். அதனைத்தொடர்ந்து வருகிற 25-ந் தேதி (வெள்ளிக்கிழமை) விநாயகர் சதுர்த்தியன்று காலையில் சுவாமிக்கு பூந்தோட்டம் சிறப்பு அலங்காரம், அபிஷேகம், பூஜை மற்றும் இரவு 7 மணியளவில் தங்கத்தேர் உலா நடக்கிறது.


Post Comment

Post Comment