கார்டன் ஆஃப் ஃபைவ் சென்சஸ் பற்றி உங்களுக்கு தெரியுமா?


Posted by-Kalki Teamஐம்புலன்களுக்கும் ஆனந்தத்தை அளிக்கக்கூடிய அற்புதப்பூங்கா என்பதால் இது கார்டன் ஆஃப் ஃபைவ் சென்சஸ் எனும் வித்தியாசமான பெயரால் அழைக்கப்படுகிறது.

கண்களுக்கு விருந்தாக வண்ணமயமான மலர்களையும், காதுகளுக்கு இனிமையாக காற்றில் அசைந்தாடி இசையை ஒலிக்கும் காற்று மணிகளும், நாசிக்கு மணமாகவும் மற்றும் நாவுக்கு சுவையாகவும் பரிமாறப்படும் உணவுப்பண்டங்களும், உடலுக்கு ஓய்வு தர காத்திருக்கும் திறந்தவெளி அரங்கின் இருக்கைகளும், புல்வெளிகளும் இந்த அழகிய பூங்காவில் பயணிகள் மற்றும் பார்வையாளர்களுக்காக காத்திருக்கின்றன.

புது டெல்லியில் மெஹ்ராலி பாரம்பரிய பகுதியில் சைதுல் அஜய்ப் எனும் கிராமத்தில் இந்த கார்டன் ஆஃப் ஃபைவ் சென்சஸ் எனும் பூங்காத்தோட்டம் அமைக்கப்பட்டிருக்கிறது.

20 ஏக்கர் பரப்பளவில் வீற்றுள்ள இந்த பூங்கா டெல்லி சுற்றுலா மற்றும் போக்குவரத்து வளர்ச்சி கழகத்தால் (DTTDC) 10.5 கோடி ரூபாய் செலவில் உருவாக்கப்பட்டு 2003ம் ஆண்டில் பொது மக்களுக்கு திறந்துவிடப்பட்டுள்ளது.

தீம் பார்க் வகையை சேர்ந்த பூங்காவாக வடிவமைக்கப்பட்டுள்ள இந்த பூங்காவில் மூலிகைதோட்டப்பிரிவு, முகலாய தோட்டம், அல்லிக்குளங்கள், சூரிய சக்தி பூங்கா, மூங்கில் அலங்கார அமைப்புகள் போன்றவை காணப்படுகின்றன. டெல்லிவாசிகள் ஓய்வாக பொழுதுபோக்குவதற்கும், ஓய்வெடுப்பதற்கும் இந்த பூங்கா உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த பூங்கா வளாகத்தில் ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் உலோகத்தில் வடிக்கப்பட்டுள்ள பறவை சிலைகள், கல்லால் உருவாக்கப்பட்ட யானைச்சிற்பங்கள், நீரூற்றுகள் ஆகியவை காணப்படுகின்றன.

பூங்காவின் ஒரு ஒதுக்குப்புறத்தில் உணவுக்கூடங்களும் அமைந்துள்ளன. மொத்தத்தில் பெயருக்கேற்றபடி ஐம்புலன்களுக்கும் ஆனந்தத்தை அளிக்கும் அற்புதப்பூங்காவாகவே இது காட்சியளிக்கிறது.


Post Comment

Post Comment