விநாயகப் பெருமானுக்கு யானைமுகம் வந்த வரலாறு:


Posted by-Kalki Teamகயமுகாசுரன் தேவர்களாலும் பூதங்களாலும் மனிதர்களாலும் மிருகங்களாலும் ஆயுதங்களாலும் இறவாதிருக்கச் சிவபெருமானிடம் வரம் பெற்றிருந்தான்.

அப் பேற்றால் அகந்தை கொண்டு அவன் தேவர்களைப் பெரிதும் துன்புறுத்துவானாயினான்.

அதனைப் பொறுக்கலாற்றாத தேவர்கள் சிவபெருமானைச் சரணடைந்து தமது துன்பத்தையெல்லாஞ் சொல்லி முறையிட்டனர்.

அடைந் தாரைப் புரந்தருளும் அருட்பெருந்தகையாளராகிய சிவபெருமான் தேவர்களுக்குத் தேறுதல் கூறி அவர்களை அனுப்பிவிட்டுத் தாம் பார்வதிதேவியாருடன் கைலை மலைச் சாரலில் அணிமலர்ச் சோலையகத்த தாயதொரு திருமணி மண்டபத்துக்கு எழுந்தருளினர்.

ஆண்டொரு சித்திரச் சுவரில் தீட்டப்பட்டிருந்த சித்திரங்களை அண்ணலுந் தேவியுங் கண்ணுற்றுச் செல்லுங்காலைப் பிரணவமந்திரம் ஒரு சித்திரமாய் வரையப்பட்டிருக்கக் கண்ட சிவபெருமான் யானைமுக வடிவிற்றாய அவ்வோங்காரத்தைக் கயமுகாசுரனைக் கொன்று தேவர்களைக் காத்தருளும் திருக்குறிப்புடன் நோக்குவாராயினர்.

அவ்வளவிலே அவ் வோங்காரம் களிறும் பிடியுமாய்ப் பிரிந்துகூட அக் கூட்டத்தின் விளைவாக விநாயகப் பெருமான் யானைமுகத்துடன் தோன்றிக் கணங்களுக்குத் தலைமை பூண்டு கணபதியாய்க் கைலாயத்தில் அமர்ந்தருளித் தேவர்கள் குறைதீர்க்கக் கயமுகாசுரனோடு போர்புரிந்து, ஆயுதங்களால் அவன இறவானென்பதை உணர்ந்து தமது திருமுகத் திருகோட்டில் வலக்கோட்டை ஒடித்து வீசு அதனால் அவ்வசுரனைக் கொன்றனர்.

சிந்துரன் என்னும் அசுரனை அழித்தற்பொருட்டுக் கருவுருக் கொண்டிருக்கையில் அவ்வசுரனால் சிரங் கொய்யப்பட்டு ஆவணி மாதச் சதுர்த்தியில் சிரமின்றித் திருவவதாரஞ்செய்து பின்னர்க் கயாசுரன் சிரத்தைக்கொண்டு திருவுரு முற்றுப் பெற்றதாகக் கூறும் விநாயகபுராணம். கசானனர் திருவவதாரப்படலம் காண்க.

வேறு பிற புராணங்கள் பல, வேறு பலவாறாகக் கூறுவதுமுண்டு. பிரணவ சொரூபம் விளக்கவந்த திருவுருவென்று கோடலே சாலும்.

ஒவ்வொரு கற்ப காலத்திற்கு சில வேறுபாடுகள் வரும்.

ஆன கருவைப் பதிற்றுப்பத்

தந்தா திச்சொல் அலங்கல்முற்றும்

ஞான உருவாம் களவீசன்

நளின சரண மிசைச்சாத்தத்

தான அருவி பொழி தடக்கைத்

தறுகட் சிறுகட் புகர்முகத்துக்

கூனல் இளவெண் பிறைக்கோட்டுக்

குணகுஞ் சரத்தின் அடிதொழுவாம்.

திருமேனி முற்றும் ஞானவடிவாம் களவீசனது தாமரைமலர்போன்ற திருவடிமீது திருக்கருவைப் பதிற்றுப்பத் தந்தாதியான சொல்மாலையைச் சாத்த, மதத்தை அருவிபோலச் சொரியும் நீண்ட துதிக்கையையும்,

அஞ்சாமையையும், சிறிய கண்களையும், புள்ளிவாய்ந்த முகத்தையும் வளைந்த இளமையான வெள்ளிய பிறைபோன்ற தந்தங்களையும் உடைய குணவிநாயகருடைய திருவடிகளை வணங்குவாம்.

குட்டித்திருவாசகம் எனும் திருக்கருவைப் பதிற்றுப்பத் தந்தாதி எனும் அருள் நூல்லிருந்து.


Post Comment

Post Comment