ஆனி பெருந்திருவிழா: நெல்லையப்பர் கோவிலில் நாளை தேரோட்டம் :


Posted by-Kalki Team



நெல்லையப்பர் கோவில் ஆனி பெருந்திருவிழா தேரோட்டம் நாளை (வெள்ளிக்கிழமை) காலையில் நடக்கிறது. இதையொட்டி பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன.

நெல்லையப்பர் கோவில் சுவாமி மற்றும் அம்பாள் தேர்கள் அலங்கரிக்கப்பட்டு வருவதை படத்தில் காணலாம்.

தமிழகத்தில் பிரசித்தி பெற்ற சிவ ஆலயங்களில் ஒன்றாக நெல்லை டவுனில் அமைந்துள்ள நெல்லையப்பர் கோவில் விளங்குகிறது. இந்த கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் ஆனி பெருந்திருவிழா வெகு சிறப்பாக கொண்டாடப்படும். நெல்லையப்பர், காந்திமதி அம்பாள், விநாயகர், சுப்பிரமணியர், சண்டிகேசுவரர் ஆகிய சுவாமிகளுக்கு 5 தேர்கள் உள்ளன. நெல்லையப்பர் சுவாமி தேர் 450 டன் எடை கொண்டது. 28 அடி நீளமும், 28 அடி அகலமும் கொண்டது.

இந்த ஆண்டுக்கான ஆனிபெருந்திருவிழா கடந்த 29-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து தினமும் சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு பூஜைகளும், வீதி உலா வருதல், கலை நிகழ்ச்சிகள் நடந்து வருகின்றன. 7-ம் திருவிழாவான நேற்று காலையில் சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனையும், காலை 8.30 மணிக்கு சுவாமி தந்தப்பல்லக்கிலும், அம்மாள் முத்து பல்லக்கில் தவழ்ந்த கோலத்தில் வீதி உலா நடந்தது.

இரவு 9 மணிக்கு சுவாமி வெள்ளி குதிரை வாகனத்திலும், அம்பாள் காமதேனு வாகனத்திலும் வீதி உலா வரும் நிகழ்ச்சி நடந்தது. இரவு 10 மணிக்கு சுவாமி நடராஜர் திருக்கோலத்தில் மேளதாளம் முழங்க வீதி உலா வந்தார். நேற்று இரவில் பள்ளி மாணவிகளின் பரத நாட்டிய நிகழ்ச்சியும், நித்ய ஸ்ரீமகாதேவனின் பக்தி இன்னிசை நிகழ்ச்சியும் நடந்தது.

8-ம் திருவிழாவான இன்று (வியாழக்கிழமை) காலை 7 மணிக்கு நடராஜர் வெள்ளை சாத்தியும், 8.30 மணிக்கு பச்சை சாத்தியும் வீதி உலா நடக்கிறது. தொடர்ந்து மாலை 6 மணிக்கு சுவாமி கங்காளநாதர் தங்க சப்பரத்தில் வீதிஉலா நடக்கிறது. இரவு 10 மணிக்கு சுவாமியும், அம்பாளும் தேர்களை பார்வையிடும் நிகழ்ச்சியும், சுவாமி தங்க கைலாச பர்வத வாகனத்திலும், அம்மாள் தங்ககிளி வாகனத்திலும் வீதி உலா நடக்கிறது. நள்ளிரவு 12 மணிக்கு தேரடி கருப்பசாமி கோவிலில் சுவாமிக்கு சிறப்பு அலங்கார படைப்பு தீபாராதனையும், அன்னதானமும் நடக்கிறது.

விழாவில் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் நாளை (வெள்ளிக்கிழமை) நடக்கிறது. இதையொட்டி நெல்லையப்பர் கோவிலில் உள்ள தேர்கள் சுத்தம் செய்யப்பட்டு அலங்காரம் செய்யப்பட்டு வருகிறது. தேருக்கு ஆயுதம் தாங்கிய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.

நாளை (வெள்ளிக்கிழமை) அதிகாலை 4 மணிக்கு மேல் 5 மணிக்குள் சுவாமி, அம்பாள் தேரில் எழுந்தருள்கின்றனர். காலை 8.45 மணிக்கு மேல் 9.15 மணிக்குள் தேர் வடம் பிடித்து இழுக்கப்படுகிறது. நிகழ்ச்சியில் அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டு தேரை இழுக்கிறார்கள்.

முதலில் விநாயகர் தேர், 2-வதாக சுப்பிரமணியர் தேர், 3-வது சுவாமி தேர், அதன்பின்பு அம்பாள் தேர் இழுக்கப்படும். இந்த தேர்களுக்கு பின்னால் சண்டிகேசுவரர் தேர் வரும். ஒரே நாளில் தேரை நிலைக்கு கொண்டு வர ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. தேரோட்டத்தன்று உள்ளூர் விடுமுறை விடப்பட்டு இருப்பதால் மாவட்டம் முழுவதும் இருந்து ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வருவார்கள்.

விழா ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையாளர் பரஞ்சோதி, உதவி ஆணையாளர் சாத்தையா, ஆய்வாளர் ஆனந்த் நெல்லையப்பர் கோவில் செயல் அலுவலர் ரோஷினி மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகிறார்கள்.


Post Comment

Post Comment