லிங்க வடிவில் சிவபெருமானை வழிபடுவது ஏன்?


Posted by-Kalki Teamலிங்க வடிவில் சிவபெருமான் இருப்பது தெரிய வந்ததற்கு முக்கிய காரணம் பிரம்மாவும், விஷ்ணுவும் தான். இது குறித்த ஆன்மிக கதையை பார்க்கலாம்.

மூம்மூர்த்திகளில் ஒருவர் தான் சிவபெருமான். மற்ற கடவுள்களை மனித உருவ சிலைகளால் வணங்குவோம். ஆனால் சிவபெருமானை பெரும்பாலும் லிங்க வடிவில் தான் நாம் பூஜை செய்து வணங்குவோம். இப்படி லிங்க வடிவில் சிவபெருமான் இருப்பது தெரிய வந்ததற்கு முக்கிய காரணம் பிரம்மாவும், விஷ்ணுவும் தான்.

மேலும் பிரம்மா மற்றும் விஷ்ணுவிற்கு இடையே யார் பெரியவர் என்ற சண்டை வந்தது. அந்த சண்டைக்கு முற்றுப்புள்ளி வைத்தது சிவபெருமான் தான். இங்கு லிங்க வடிவில் இருக்கும் சிவபெருமான் வந்த கதை கொடுக்கப்பட்டுள்ளது.

பிரம்மா படைக்கும் கடவுள் என்றால் விஷ்ணு காக்கும் கடவுளாவார். அவர்கள் இருவரும் சேர்ந்து வேலை பார்த்து வந்த போது அண்டம் நன்றாக இருந்தது. இருப்பினும் பிரம்மனுக்கும் விஷ்ணுவிற்கும் ஒரு முறை சண்டை வந்தது. அப்போது "பிரம்மா, நான் காக்கும் கடவுள். நான் உன்னை விட மிகப்பெரியன்.", என விஷ்ணு கூறினார்.

இதை கேட்டு கோபமடைந்த பிரம்மன், "நான் மட்டும் எதையும் படைக்கவில்லை என்றால் உமக்கு வேலையே இருந்திருக்காது..." என கூறினார். "என்னை தான் பலரும் வணங்குகின்றனர்" என விஷ்ணு கோபமாக கூறினார். இந்த சண்டை மிகப்பெரியதாக வளர்ந்து கொண்டே போனது. இதனால் மற்ற கடவுள்கள் சிவபெருமானிடம் சென்றனர். தான் இதனை கவனித்துக் கொள்வதாகவும், அவர்களை அமைதியுடன் செல்லுமாறும் சிவபெருமான் கேட்டுக் கொண்டார்.

விஷ்ணுவும் பிரம்மனும் ஒருவரை ஒருவர் கோபமுடன் பார்த்துக் கொண்டிருந்ததால், அவர்களுக்கு இடையே ஒரு பெரிய தூண் ஒன்று உருவானது. இந்த தூண் மிகப்பெரியதாக இருந்ததால் அது எங்கே தொடங்குகிறது, எங்கே முடிவடைகிறது என்பதை விஷ்ணுவாலும் பிரம்மனாலும் கண்டுபிடிக்க முடியவில்லை.

சண்டையை மறந்த அந்த இருவரும் ஒன்றாகினர். "இது என்னவாக இருக்கும் விஷ்ணு? நீங்கள் இதனை....", என பிரம்மன் அதை சுட்டிக்காட்டி கேட்டார். விஷ்ணு தலையை அசைத்தார். "இந்த தூண் எவ்வளவு பெரியது என்பதை பார்க்கலாம். நான் மேலே செல்கிறேன்..." என்றார் பிரம்மன். அதனை ஒப்புக்கொள்ளும் விதமாக தலையை அசைத்தார் விஷ்ணு, "நான் கீழே செல்கிறேன்" என கூறினார்.

அன்ன உருவத்தை எடுத்த பிரம்மன் மேலே பறந்தார். பன்றி உருவத்தை எடுத்த விஷ்ணு கீழ் நோக்கி சென்றார். மேலே மேலே பிரம்மன் சென்ற போதிலும் கூட தூணின் ஆரம்பம் வந்த பாடில்லை. இது என்னவாக இருக்கும் மற்றும் எவ்வளவு நீளமாக இருக்கும் என பிரம்மன் நினைத்தார். திடீரென பிரம்மனுக்கு ஒரு யோசனை வந்தது, "விஷ்ணு ஒரு வேளை கீழே தூணின் அடிப்பகுதிக்கு முதலில் சென்று விட்டால்? பிறகு என்னை விட அவர் தான் சிறந்தவர் என மீண்டும் என்னை பார்த்து கேலி செய்வாரே.". மிகவும் அதிவேகத்தில் பிரம்மன் பறக்க தொடங்கினார். ஆனாலும் அவரால் தூணின் முடிவை கண்டுபிடிக்க முடியவில்லை.

பறந்து கொண்டிருக்கும் போது அழகிய தாழம்பூவை பிரம்மன் கண்டார். "தாழம்பூ மலரே, நீ மிகவும் அழகாக இருக்கிறாய், நீ என்ன செய்கிறாய்"? என பிரம்மன் கேட்டார். "இந்த தூணிற்கு அர்பணிக்க நான் அனுப்பப்பட்டுள்ளேன். காற்று அடிக்கும் போது, தூணின் மீது நான் வீசப்பட்டேன். ஆனால் இந்த தூண் மிக நீளமாக இருப்பதால், சில வருடங்கள் ஆகியும் கூட நான் தூணின் மீதே இருக்கிறேன்." என அது கூறியது.

பூவை பார்த்த பிரம்மனுக்கு ஒரு யோசனை தோன்றியது. "தாழம்பூவே, நீ இந்த தூணின் மீது இருந்துள்ளாய். உனக்காக நான் ஏதாவது செய்ய ஆசைப்படுகிறேன். எனக்காக ஒரு பொய் சொல்ல முடியுமா?" என பிரம்மன் கேட்டார். சந்தேகத்துடன் பிரம்மனை பார்த்த அந்த மலர் பயத்துடன் சிரித்தது. "யார் சிறந்தவர் என்பதை அறிய, நான் விஷ்ணுவிடம் ஒரு பந்தயம் போட்டிருந்தேன். அப்போது தான் இந்த தூண் எங்களுக்கு இடையே வந்தது. தூணுக்கு மேலே நான் சென்றேன். தூணுக்கு கீழே விஷ்ணு சென்றார். நான் உன்னை எடுத்துக் கொண்டு உன்னை தூணின் உச்சியில் பார்த்தேன் என விஷ்ணுவிடம் கூறுவேன். நீயும் அதையே கூறு. அப்போது நான் விஷ்ணுவை விட வலிமையானவனாக இருப்பேன்" என பிரம்மன் கூறினார். மெதுவாக தலையை அசைத்த தாழம்பூ, "நான் இந்த கதையையே சொல்கிறேன்" என கூறியது.

சந்தோஷமடைந்த பிரம்மன் அந்த மலரை தன் கையில் எடுத்து பரக்க ஆரம்பித்தார். பன்றி வடிவில் இருந்த விஷ்ணுவை சந்தித்தார் பிரம்மன். விஷ்ணுவாலும் அடிப்பாகத்தை கண்டு பிடிக்க முடியவில்லை என்பதை பிரம்மன் தெரிந்து கொண்டார். சோர்வடைந்திருந்த விஷ்ணு பிரம்மனை சந்தித்தார். "பிரம்மா, உங்களால் ஆரம்பித்த பகுதியை காண முடிந்ததா?" என விஷ்ணு சோர்வுடன் கேட்டார்.

பெருமையுடன் மலரை எடுத்த பிரம்மன், "ஆம் தூணின் ஆரம்பத்தை நான் கண்டு விட்டேன்" என கூறினார். நம்ப முடியாத பார்வையோடு பிரம்மனை விஷ்ணு பார்த்தார். "அதற்கு சாட்சியாக நான் இந்த மலரை எடுத்து வந்துளேன்", என பிரம்மன் மேலும் கூறினார். தாழம்பூவை அவர் தூணின் மீது வைத்தார். "இந்த மலர் தூணின் உச்சியில் இருந்தது. அதனை நான் எடுத்து வந்துள்ளேன்." என பிரம்மன் சற்று நடுக்கத்துடன் கூறினார். "ஆம் விஷ்ணு பகவானே, பிரம்மன் கூறுவது உண்மையே. நான் தூணின் உச்சியில் இருந்தேன். பிரம்ம தேவன் தான் என்னை இங்கு அழைத்து வந்தார்", என தாழம்பூ கூறியது.

நொந்து போன விஷ்ணு, "மிக நல்லது பிரம்மா அவர்களே... என்னால் கீழ் பகுதிக்கு செல்ல முடியவில்லை. நான் கீழே சென்றேன், சென்றேன், சென்று கொண்டே இருந்தேன்.... ஆனால் தூண் முடியுமாறு தெரியவில்லை." என கூறினார். "அப்படியானால் நான் தான்...." என கிண்டலாக சிரித்தார் பிரம்மன்.

பிரம்மனுக்கு அதிசயம் தரும் வகையில் அந்த தூண் இரண்டாக பிளந்தது. தூணில் இருந்து 3 கண்களை கொண்ட சிவபெருமான் வெளியே வந்தார். தங்கள் முன் சிவபெருமான் சக்தியோடு தோன்றியதை கண்டு மிரண்டு போய் நின்றார்கள் பிரம்மனும் விஷ்ணுவும். வாயை பிளந்து கொண்டு நின்ற பிரம்மனை பார்த்த சிவபெருமான், " தூணின் உச்சியை நீர் கண்டீரா." என கேட்டார்.

பிரம்மன் எதுவுமே பேசவில்லை. கீழே குனிந்து கொண்டு அமைதியாக இருந்தார். எதுவும் புரியாமல் நின்று கொண்டிருந்த பிரம்மனை பார்த்த சிவபெருமான், "நீர் பொய் சொல்லிவிட்டீர் பிரம்மா! நானே இந்த தூண். இது ஒரு சுயம்பு லிங்கம். என்னை சுலபமாக கண்டு கொள்ள கூடிய ஒரு வடிவம். இந்த லிங்கத்திற்கு தொடக்கமோ முடிவோ கிடையாது. நான், நீர் மற்றும் விஷ்ணு என மூன்று பேருக்குமே தனித்தனி வேலைகள் உள்ளது. அது தான் படைத்தல், காத்தல் மற்றும் அழித்தல். நம்மில் யார் சிறந்தவர் என்ற கேள்விக்கே இடமில்லை.", கோபத்துடன் கூறினார். "நாம் ஒன்றாக சேர்ந்து செயல்பட வேண்டுமே தவிர இப்படி சண்டையிடக் கூடாது." என்றும் கூறினார்.

சிவபெருமானிடம் பிரம்மனும் விஷ்ணுவும் மன்னிப்பு கோரினர். இருப்பினும் சிவபெருமான் அதோடு நிறுத்தவில்லை. "பிரம்மா, தங்களின் பொய்க்காக நான் உங்களை சபிக்கிறேன்... உங்களை இனி யாரும் வணங்க மாட்டார்கள்." என சிவன் கூறினார். பின் மிகுந்த கோபத்துடன், "தாழம்பூவே, இனி நீ பூஜைக்கு பயன்படுத்தப்பட மாட்டாய்" என்றும் கூறினார். இதனை பிரம்மனும் அந்த மலரும் மறுக்கவில்லை. தங்களின் பொய்க்கான விலை இது என அமைதி காத்தனர்.

இந்தியாவில் பிரம்மனுக்கு குறைந்த அளவிலான கோவில்களே உள்ளது. அவர் தானியாக வழிப்படப்படுவதும் மிக அரிதே. சிவபெருமானின் சாபமும் இதற்கு காரணமாக கூறப்படுகிறது. இன்று அளவிலும் தாழம்பூவை பூஜைக்கு யாரும் பயன்படுத்துவதில்லை. சிவபெருமான் எப்போதும் லிங்கத்தின் வடிவில் தான் வழிப்படப்படுகிறார். இதுவே அவரின் சின்னமாக பார்க்கப்படுகிறது. பிரம்மன் மற்றும் விஷ்ணுவுக்கு இடையேயான சண்டையை தீர்ப்பதற்கு தான் முதன் முதலில் இந்த வடிவத்தை சிவபெருமான் எடுத்தார்.


Post Comment

Post Comment