மீனாட்சி அம்மன் கோவிலில் ஆனி உற்சவம்: சொக்கநாத பெருமானுக்கு 8-ந்தேதி முப்பழ பூஜை


Posted by-Kalki Teamமதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் ஆனி உற்சவ விழா வருகிற 29-ந் தேதி முதல் 8-ந் தேதி வரை 10 நாட்கள் நடைபெற உள்ளது. இந்த நாட்களில் சாயரட்சை பூஜைக்கு பின் மீனாட்சி-சுந்தரேசுவரர் பஞ்சமூர்த்தியுடன் புறப்பாடாகி சுவாமி சன்னதி 100 கால் மண்டபத்தில் உள்ள ஊஞ்சல் மண்டபத்திற்கு எழுந்தருளுகிறார்.

பின்னர் மாணிக்கவாசகர் அருளிய திருவாசகத்தின் திருப்பொன்னூஞ்சல் பதிகம் (9 பாடல்கள்) தல ஓதுவாரால் பாடப்படுகிறது. அதனை நாதசுவர கலைஞர் கள் 9 வகையான ராகத்தில் இசைக்கிறார்கள். பின் தீபாராதனை முடிந்து 2-ம் பிரகாரம் சுற்றி சேர்த்தியாகிறார்கள்.

29-ந் தேதி அதிகாலை 3 மணியளவில் பஞ்ச சபை நடராஜர், சிவகாமி அம்மனுக்கு கால்மாறி ஆடுகிறார். பின்னர் கால பூஜைகள் முடிந்ததும் காலை 7 மணிக்கு நடராஜர்- சிவகாமி அம்மன் ஆகியோர் மாசி வீதிகளில் உலா வருகிறார்கள்.

30-ந் தேதி காலை பழைய திருக்கல்யாண மண்டபத்தில் பாலாபிஷேகம் நடைபெறும். இரவில் பஞ்ச மூர்த்திகளுடன் ரி‌ஷப வாகனத்தில் மாசி வீதிகளில் சுவாமி-அம்மன் எழுந்தருளுகிறார்கள்.

ஆனி மாத பவுர்ணமியான 8-ந்தேதி பகல் 12 மணிக்கு மூலஸ்தான சொக்கநாத பெருமானுக்கு மா, பலா, வாழை ஆகிய முக்கனிகளால் பூஜை மற்றும் அபிஷேகம் நடைபெறுகிறது.

மக நட்சத்திரத்தில் தொடங்கும் விழா மூல நட்சத்திரமான ஜூலை 8-ந் தேதி நிறைவடைகிறது. உற்சவ நாட்களில் திருக்கல்யாணம், தங்கரத உலா ஆகியவை பதிவு செய்து நடத்திட இயலாது என்று கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.


Post Comment

Post Comment