இவரது தோசை மீது அமெரிக்காவுக்கே ஆசை... !


Posted by-Kalki Teamஇலங்கையிலிருந்து பிழைப்பதற்காக நியூயார்க் சென்ற தமிழர் ஒருவர் நடமாடும் வண்டியில் விதவிதமான தோசைகளை சுட்டு அசத்தி வருகிறார்.

இந்தக் கடை குறித்து நமது ஒன் இந்தியாவின் நியூயார்க் வாசகரும், அந்த தோசைக் கடையின் வாடிக்கையாளருமான, கணேஷ் சுவையான தகவல்களை பகிர்ந்துள்ளார்.

அமெரிக்காவில் தமிழர்கள் பலரும், சாப்ட்வேர் இன்ஜினியர், டாக்டர், சிவில் இன்ஜினியர், ஏரோநாட்டிகல் இன்ஜினியர் உள்ளிட்ட பல்வேறு தரப்பு படிப்புகளை படித்துவிட்டு கைநிறைய சம்பளத்தில் வேலை பார்த்து வருகின்றனர்.

இவர்களுக்கு மத்தியில் திருக்குமார் வித்தியாசமான ஒரு தொழிலதிபர். இலங்கையில் இருந்து பிழைப்பு தேடி அமெரிக்கா சென்ற திருக்குமார் கடந்த 2001-ஆம் ஆண்டில் சிறிய அளவிலான தோசைக் கடையை நியூயார்க்கில் அமைத்தார். இதன்பிறகு, பல்வேறு நாட்டினரின் நாக்குகள் இவரது தோசைக்கு அடிமை. இவருக்கு பாராட்டுகள் குவியாத நாளே கிடையாது என்று சொல்லும் அளவுக்கு கலிபோர்னியா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளிலும் ரசிகர்கள் உண்டு.

அமெரிக்காவுக்கு பல்வேறு நாட்டை சேர்ந்தவர்கள் விஜயம் செய்வதால் இவரது கடை குறித்த விவரங்கள் 42 புத்தகங்களில் இடம்பெற்றுள்ளன. மிகவும் குறைந்த விலையில் ருசியான உணவு வகைகளை கொடுப்பதால் இவர் கடையில் எப்போதும் கூட்டம் காணப்படும்.

இவரது கைப்பக்குவத்தில் ஒரு முறை தோசையை ருசித்து விட்டால் அடுத்த முறை எப்போது நியூயார்க் நகருக்கு சென்றாலும் அங்கு வாஷிங்டன் சதுக்கத்தில் உள்ள திருக்குமாரின் தோசை கடைக்கு செல்லாமல் இருக்க மாட்டார்கள். உலகிலேயே மிகப்பெரிய சைவ தோசை தள்ளுவண்டி கடை என்றால் அது இவரது கடைதான்.

இவரது கைவண்ணத்தில் தோசை மட்டுமல்லாது வெங்காயம், உருளைக்கிழங்கு மசாலா நிரப்பப்பட்ட சமோசாக்களும் தயார் செய்கிறார். மிகவும் ஆரோக்கியமான ,தரமான இந்த சமோசாக்களை குழந்தைகள் விரும்பி உண்கின்றனர். மேலும் குளிர்பானங்களையும் இவரே தயாரித்து விற்கிறார்.

பல்வேறு தோசைக்கு தேவையான எல்லா பொருள்களையும், சட்னி, சாம்பார், இட்லி பொடி என அனைத்தையும் வீட்டில் இவரே தயாரித்து எடுத்துவருவதால் சுவையில் எந்த மாற்றமும் ஏற்படுவதில்லை. இதனால்தான் இவரது தயாரிப்புகள் மிகவும் ருசியாக உள்ளன.

இவருக்கு சீனா, பிரான்ஸ், ஜப்பான் மற்றும் லண்டன் ஆகிய இடங்களில் கிளைகள் உண்டு. கடந்த 2007-ஆம் ஆண்டு சாலையோரக் கடைகளுக்கான போட்டியில் வெற்றி பெற்றபோது கொடுக்கப்பட்ட கோப்பை மற்றும் சான்றிதழ்கள் இவரது வாகனத்தில் வாடிக்கையாளர்கள் பார்க்கும்படி வைத்துள்ளார். திங்கள்கிழமை முதல் சனிக்கிழமை வரை மதியம் 12 மணி வரை பிற்பகல் 3 மணி வரை இவரது கடை திறந்திருக்கும்.

பாண்டிச்சேரி மசால் கறி தோசை, தேங்காய் மற்றும் மிளகாய் பொடி தூவிய மலையாள தோசை உள்ளிட்ட தோசைகளை மக்கள் விரும்பி சாப்பிடுகின்றனர். ஆலிவ் எண்ணெயில் தயாரிக்கப்படும் மொறு மொறுப்பான பேபி தோசையை குழந்தைகள் விரும்பி சாப்பிடுகின்றனர். ஒரு தோசையின் விலை 7 டாலர்கள் ஆகும்.

இவர் பற்றிய செய்தி முதன்முதலாக கடந்த 2002ஆம் ஆண்டு நியூயார்க் மேகஸின் பத்திரிகையில் வெளிவந்தது. அத்துடன் பிரபல அமெரிக்க பத்திரிகைகளில் இவர் குறித்து செய்திகள் வந்துள்ளன. இவருக்கு பேஸ்புக், டிவிட்டர் ஆகிய சமூக வலைதளங்களிலும் வாடிக்கையாளர்கள் உள்ளனர். இவரது தோசை வகைகளை நியூயார்க் பல்கலை மாணவர்கள் ஒரு கை பார்க்காமல் இருந்தது இல்லை.

இலங்கை தலைநகர் கொழும்புவில் டிராவல் ஏஜென்சி நிறுவனம் வைத்திருந்த திருகுமார், பணி நிமித்தமாக பாங்காங் சென்றார். அப்போது சமைக்க தெரியுமா என்ற கேள்வியை எதிர்கொண்டார். அப்போது அவர் சமைத்தார்.

அதற்கு அவருக்கு ஊதியமும் வழங்கப்பட்டது. அதுமுதல் பாங்காங் செல்லும்போதெல்லாம் அப்பணியை மேற்கொண்டார். கடந்த 1990-இல் ரஜினி என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு சஜினி என்ற 24 வயது மகள் உள்ளார்.

நியூயார்க் சென்றால் நீங்களும் திருக்குமாரின் கைப்பக்குவத்தில் உருவாகும் தோசைகளை ஒரு கட்டு கட்டுவீராக!

source - one india


Post Comment

Post Comment