புதுவையில் முதன் முறையாகசுண்ணாம்பாற்றில் படகு வீடு 28ம் தேதி முதல் இயக்கம்


Posted by-Kalki Teamபுதுச்சேரி: புதுவை சுண்ணாம்பாற்றில் வருகிற 28ம் தேதி முதல் படகு வீடு இயக்கப்படுகிறது. இதன் முதல் ஓட்டத்தை முதல்வர் ரங்கசாமி தொடங்கி வைக்கிறார். புதுவை சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜவேலு நிருபர்களுக்கு அளித்த பேட்டி: புதுவையில் சுற்றுலாவை மேம்படுத்த நோணாங்குப்பம்

சுண்ணாம்பாற்றில் படகு வீடு அறிமுகப்படுத்தப்படும் என முதல்வர் ரங்கசாமி கடந்த பட்ஜெட்டில் அறிவித்தார். அதன்படி, புதுவை சுற்றுலா வளர்ச்சி கழகம், சென்னை மந்த்ரா போட் அவுஸ் நிறுவனத்துடன் ஓர் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்தது. இதனை தொடர்ந்து, மந்த்ரா போட் அவுஸ் நிறுவனம், சுண்ணாம்பாற்றில் ரூ.70 லட்சம் செலவில் படகு வீடு கட்டும் பணியை தொடங்கியது.

தற்போது இப்பணிகள் நிறைவு பெற்று வரும் 28ம் தேதி அதிகாரப்பூர்வமாக படகு வீடு இயக்கப்படும். இதன் முதல் ஓட்டத்தை முதல்வர் ரங்கசாமி தொடங்கி வைக்கிறார்.இப்படகில் பயணம் செய்ய 24 மணி நேரத்திற்கு ஒரு அறைக்கு 2 நபர்களுக்கு உணவு உள்பட ரூ.10 ஆயிரம் கட்டணம்

வசூலிக்கப்படும். சுற்றுலா பயணிகள், படகில் இருந்தபடியே இயற்கை அழகை ரசிக்கலாம். காலை 11 மணிக்கு நோணாங்குப்பம் படகு குழாமில் இருந்து தொடங்கும் இப்பயணத்தின் போது பயணிகளுக்கு தேநீர் அல்லது பழரசம் வழங்கப்படும்.

மதியம் 12 மணிக்கு பாரடைஸ் தீவை படகு சென்றடையும். அங்கு சுற்றுலா பயணிகளின் விருப்பத்திற்கேற்ப சைவ மற்றும் அசைவ உணவுகளை படகிலேயே சமைத்து உடனடியாக பரிமாறப்படும். உணவு உண்ட பின்னர், சுற்றுலா பயணிகள் படகில் ஓய்வு எடுக்கலாம். அல்லது பாரடைஸ் தீவில் பொழுதை கழிக்கலாம். பின்னர், 3 மணியளவில் படகு மீண்டும் புறப்பட்டு

சுண்ணாம்பாற்றில் நீண்ட தூரம் பயணிக்கும். அப்போது பயணிகள், கரைகளில் வளர்ந்துள்ள தன்னை மரங்களின் செழுமை, இயற்கை அழகை கண்டு ரசிக்கலாம். பின்னர் மாலை 6 மணியளவில் படகு நங்கூரம் பாய்ச்சப்பட்டு ஆற்றின் நடுவில் நிறுத்தப்படும்.பயணிகள், படகு வீட்டிலேயே தங்கி மகிழலாம். இரவு உணவும் உண்டு.

மறுநாள், காலை 6 மணியளவில் சூரிய உதயத்தை காணலாம். பின்னர், காலை சிற்றுண்டி படகில் பரிமாறப்படும். அதன்பின், படகு போட் அவுசுக்கு வந்து சேரும். தீயணைப்பு கருவிகள், பாதுகாப்பு உடைகள், உயிர்காக்கும் பயிற்சி பெற்ற உதவியாளர்கள், மருத்துவ வசதிகள் இப்படகு வீட்டில் செய்யப்பட்டுள்ளன. இப்படகு வீட்டின் மூலம் புதுச்சேரி சுற்றுலா வளர்ச்சி கழகத்திற்கு மாதம் ரூ.20 ஆயிரமும், படகு வீட்டின் அறைகள் மாதம் முழுவதும் முழுமையாக நிறைவு பெற்றால் ரூ.45 ஆயிரமும் கிடைக்கும். பெருமழையால் சேதமடைந்த போட்அவுஸ் மற்றும் பாரடைஸ் பீச்சில் சீரமைப்பு பணிகள் துரிதமாக நடந்து வருகிறது.

விரைவில் இப்பணிகள் நிறைவடையும். கடந்தாண்டு புதுவைக்கு 12 லட்சம் பேர் சுற்றுலா பயணிகள் வந்தனர்.

தொடர் மழையால், சுற்றுலா பயணிகள் வருகை 2 சதவீதம் குறைந்தது. நோணாங்குப்பம் போட்அவுஸ் மூலம் மாதத்திற்கு ரூ.81 லட்சம் வருவாய் கிடைக்கிறது என்றார். அப்போது சுற்றுலாத்துறை இயக்குனர் முனுசாமி, சென்னை மந்த்ரா போட் அவுஸ் நிறுவன இயக்குனர் அனு மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.


Post Comment

Post Comment