மகாராஜா ரெயிலில் 8 நாள் சுற்றுலா செல்ல ரூ.5 லட்சம் கட்டணம் :


Posted by-Kalki Teamதங்க தட்டில் சாப்பிடலாம், தங்க கப்பில் டீ குடிக்கலாம், மகாராஜா ரெயிலில் 8 நாள் சுற்றுலா செல்ல ரூ.5 லட்சம் கட்டணம் செலுத்த வேண்டும். இந்த ரெயில் வரும் ஜூலை 1-ந்தேதி திருவனந்தபுரத்தில் இருந்து மும்பைக்கு புறப்படுகிறது.

இந்திய ரெயில்வேயின் கீழ் செயல்படும் இந்திய ரெயில்வே கேட்டரிங் மற்றும் சுற்றுலா நிறுவனம் (ஐ.ஆர்.சி.டி.சி) மும்பை-டெல்லி- கொல்கத்தா இடையே மகாராஜா எக்ஸ்பிரஸ் ரெயிலை கடந்த 2010-ம் ஆண்டில் இருந்து இயக்கி வருகிறது. முதன் முறையாக தென்மாநிலங்களின் வழியாக இயக்கும் வகையில் தென்னகத்து அணிகலன்கள் - பருவ மழைக்கால சிறப்பு ரெயில் என்ற ரெயில் வரும் ஜூலை 1-ந் தேதி திருவனந்தபுரத்தில் இருந்து இயக்கப்படுகிறது. இந்த ரெயிலுக்கான முன்பதிவு தொடங்கப்பட்டு உள்ளது.

இதுகுறித்து இந்திய ரெயில்வே கேட்டரிங் மற்றும் சுற்றுலா நிறுவனத்தின் தென்மண்டல பொதுமேலாளர் எஸ்.எஸ்.ஜெகநாதன், கூடுதல் பொதுமேலாளர் ரவிக்குமார் ஆகியோர் சென்னையில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

மன்னர்களின் ராஜ பயணத்தை நினைவூட்டும் வகையில் 7 நட்சத்திர அந்தஸ்து கொண்ட மகாராஜா ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. உலகில் 5 மிகப்பிரபலமான சொகுசு ரெயில்களில், இந்த ரெயில் 2-வது இடத்தை பிடித்து உள்ளது. ஜூலை 1-ந்தேதி இரவு 9 மணிக்கு திருவனந்தபுரத்தில் இருந்து புறப்படும் இந்த ரெயில் நாகர்கோவில் வழியாக காரைக்குடிக்கு 2-ந்தேதி காலை சென்று சேருகிறது. அங்கு தமிழ் கலாசார உணவு வழங்கப்படுகிறது. கட்டிடங்கள், ஆத்தங்குடி தரை ஓடுகள் செய்யும் இடங்கள் சுற்றுலா பயணிகளுக்கு சுற்றி காண்பிக்கப்படுகிறது.

அன்று இரவு அங்கிருந்து புறப்பட்டு 3-ந்தேதி செங்கல்பட்டு ரெயில் நிலையத்துக்கு இந்த ரெயில் வருகிறது. அங்கிருந்து சொகுசு பஸ்களில் மாமல்லபுரத்துக்கு பயணிகள் அழைத்து செல்லப்படுகின்றனர். பின்னர் மீண்டும் அன்று இரவு செங்கல்பட்டில் இருந்து புறப்பட்டு மைசூர், ஹம்பி, கோவா வழியாக மும்பைக்கு 8-ந்தேதி இந்த ரெயில் சென்று சேருகிறது. இந்த இடங்களில் உள்ள வரலாற்று சிறப்பு மிக்க இடங்கள் பயணிகளுக்கு சுற்றி காண்பிக்கப்படுகிறது. பயணிகள் 8 பகல் பொழுதும், 7 இரவுகளிலும் இந்த ரெயிலில் பயணிக்க முடியும்.

இதில் பயணம் செய்வோருக்கு ரெயில் செல்லும் அந்தந்த மாநிலங்களின் உணவுவகைகளுடன், வெளிநாட்டினருக்காக அவர்கள் நாட்டு உணவு வகைகளும் கிடைக்கும். இதற்காக 2 சமையல் கூடங்கள் உள்ளன. மன்னர்களுக்கு வழங்குவது போன்று உணவு தங்க தட்டிலும், டீ, காபி போன்றவை தங்க கப்புகளிலும் வழங்கப்படுகிறது.

இதுதவிர வெளிநாடு மற்றும் உள்நாட்டு வகை மதுபானங்கள் அடங்கிய பார் ஒன்றும் உள்ளது. பயணம் செய்ய டீலக்ஸ் கேபின் கட்டணம் ரூ.5 லட்சத்து 680, ஜூனியர் சூட் ரூ.7 லட்சத்து 23 ஆயிரத்து 420, சூட் ரூ. 10 லட்சத்து 9 ஆயிரத்து 330, பிரெசிடென்சியல் சூட் ரூ.17 லட்சத்து 33 ஆயிரத்து 410 ஆகும். வெளிநாட்டு பயணிகள் முழு தொகையும் செலுத்த வேண்டும்.

இந்தியர்களுக்கு மட்டும் சலுகையாக பயணி தன்னுடன் ஒருவரை அழைத்து வரலாம். 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு கட்டணம் இல்லை. 5 வயது முதல் 14 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு 50 சதவீதம் கட்டண சலுகை வழங்கப்படுகிறது. 8 நாட்கள் பயணம் செய்ய முடியாதவர்களுக்காக அவர்கள் விரும்பும் ஏதாவது ஒரு நாள் பயணம் செய்ய டீலக்ஸ் கேபின் கட்டணமாக ரூ.33 ஆயிரத்து 250 வசூலிக்கப்படுகிறது. பயணிகள் செல்லும் இடங்களில் அந்தந்த மாநில வழக்கப்படி பாரம்பரிய முறையில் இசைக்கருவிகளுடன் வரவேற்பு அளிக்கப்படுகிறது.

இந்த ரெயிலில் பயணம் செய்வதற்காக முன்பதிவு தொடங்கப்பட்டு உள்ளது. கூடுதல் விவரங்களுக்கு http://www.themaharajas.com அல்லது http://www.irctctourism.com என்ற இணையதளங்களை பார்த்து தெரிந்து கொள்ளலாம்.

இதுதவிர 98409-02916, 90031-40657, 98409-02919 என்ற அலுவலக செல்போன்எண்கள் மூலம் விவரங்களை தெரிந்து கொள்ள முடியும். வேலைநாட்களில் ravindran.m@irctc.com. malathi63262irctc.com. tour-ismmas@irctc.com ஆகிய இ-மெயில் மூலமும் தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு அதிகாரிகள் கூறினார்கள்.


Post Comment

Post Comment