சிலிர்க்க வைக்கும் தேள் வழிபாடு :


Posted by-Kalki Teamகர்நாடக மாநிலத்தில் உள்ள செலினா பேட்டை என்ற மலையின் மீதுள்ள கொண்டம்மை கோவிலில் நாக பஞ்சமி அன்று தேளை வழிபடுவதற்காக வருகிறார்கள்.

கர்நாடக மாநிலம், யத்கீர் பகுதியில் இருக்கிறது கண்டகூர் கிராமம். இங்குள்ள செலினா பேட்டை என்ற மலையின் மீது கொண்டம்மை கோவில் அமைந்திருக்கிறது. நாக பஞ்சமி தினத்தன்று இந்த ஆலயத்தைத் தேடி வரும் பக்தர்களின் எண்ணிக்கை ஏராளம். நாக பஞ்சமி என்பதால், நாக வழிபாடு செய்வதற்காக வருகிறார்கள் என்று நீங்கள் நினைத்தால் அது தவறு.. இந்தப் பகுதிக்கு வரும் பக்தர்கள் அனைவரும் தேளை வழிபடுவதற்காக வருகிறார்கள். என்ன! பாம்பு வழிபாட்டிற்கு பெயர்போன நாக பஞ்சமி தினத்தில் தேளை வழிபடுகிறார்களா? என்று ஆச்சரியமாக இருக்கிறதல்லவா. வாருங்கள் அந்த ஆலயத்தின் வழிபாட்டை அறியலாம்.

கண்டகூர் கிராம மலையின் உச்சியில் இருக்கிறது கொண்டம்மை கோவில். இந்த ஆலயத்தில்தான் தேள் வழிபாடு நடக்கிறது. இங்கு தேள் வடிவம் பொறிக்கப்பட்ட சிலை இருக்கிறது. இந்த சிலைக்குத் தான் நாக பஞ்சமி தினத்தில் பக்தர்கள் வழிபாடு செய்கிறார்கள். இந்த மலைப் பகுதியில் தேள்கள் நூற்றுக்கணக்கில் இருக்கின்றன என்பதே, நாக பஞ்சமி தினத்தில்தான் பார்க்க முடியும். மற்ற நாட்களில் அங்கொன்றும் இங்கொன்றுமாக தென்படும் தேள்கள், இந்த குறிப்பிட்ட நாளில் மட்டும் மலையின் மீதுள்ள ஆலயத்தை நோக்கி படையெடுக்கின்றன.

இந்த ஆலயம் தேள் வழிபாட்டிற்கான இடம் மட்டுமல்ல.. தேள் விளையாட்டிற்கான இடமும் கூட. ஆம்! நாக பஞ்சமியில் தேள் கோவிலைத் தேடி வரும் பக்தர்கள், அங்கு சுற்றித் திரியும் தேள்களை எடுத்து விளையாடத் தொடங்கி விடுகின்றனர். பெரியவர்கள், குழந்தைகள்... என அனைவரது உடலிலும் ஊர்ந்து விளையாடுகின்றன இந்த தேள்கள். விஷத் தன்மை கொண்ட இந்த தேள்கள், நாக பஞ்சமி தினத்தில் மட்டும் செல்லப் பிராணியாக மாறிவிடுவதாக தெரிவிக்கிறார்கள் அங்கு வரும் பக்தர்கள். பல ஆண்டுகளாக நடந்து வரும் இந்த தேள் வழிபாட்டில், இதுவரை பக்தர்களை தேள் கொட்டியதாக செய்தியே இல்லை என்பதுதான் அனைவரையும் ஆச்சரியத்தில் மூழ்க வைக்கிறது. அந்தளவிற்கு தேள் கடவுளான கொண்டம்மை, பக்தர்களை பாதுகாப்பதாக கூறி மெய்சிலிர்க் கிறார்கள் பக்தர்கள்.

ஒரு காலத்தில் பாம்புக்குத்தான் இந்த ஆலயத்தில் வழிபாடு இருந்திருக்க வேண்டும். குறிப்பிட்ட தினத்தில் ஆலயத்தைத் தேடி வரும் தேள்களின் கூட்டத்தைப் பார்த்து விட்டு, பக்தர்கள் அனைவரும் அந்த தினத்தில் தேளை வழிபடத் தொடங்கியிருக் கலாம் என்று ஒரு சிலர் தெரிவிக்கின்றனர்.

நாக பஞ்சமி அன்று காலை முதலே பக்தர்கள் மலையேற தொடங்கிவிடுகின்றனர். அவர்களோடு சேர்ந்து தேள்களும் மலையேறத் தொடங்கி விடுகின்றன. பக்தர்களின் வழித்தடத்தில் தேள்கள் வந்துவிடக்கூடாது என்பதற்காக, மலை அடிவாரத்தில் பிரத்யேக பூஜை செய்யப்படுகிறது. அதன்பிறகே அனைவரும் மலையேறத் தொடங்குகின்றனர். அந்த வேண்டுதலுக்கு கொண்டம்மை செவி சாய்த்தது போலவே, பக்தர்களின் பாதையில் தேள்கள் குறுக்கிடுவது இல்லையாம். மேலும் மலையேறி செலினா பேட்டா மலை உச்சியை அடையும் வரை தேள் கடவுளை புகழ்ந்து பாடியவாரே செல் கிறார்கள்.

ஆலயத்தை அடைந்ததும் பக்தர்கள், தாங்கள் கொண்டு வந்த பாலை, தேள் கடவுளுக்கு செலுத்தி அபிஷேகம் செய்கின்றனர். சில பக்தர்கள் புடவை, தேங்காய், எண்ணெய் பொருட்களை காணிக்கையாக்கிறார்கள். இப்படி கடவுள் வழிபாடு முடிந்ததும், கோவிலில் அமர்ந்து தேள் விளையாட்டை ஆரம்பித்துவிடுகிறார்கள். குழந்தைகளின் உடலில் தேளை ஊறவிடுவதும், கைகளில் எடுத்து முத்தம் கொடுப்பதுமாக நாக பஞ்சமி பொழுது கழிகிறது.

குறிப்பிட்ட தினமான நாக பஞ்சமியில் மட்டும் கொண்டம்மை ஆலயத்திற்கு நூற்றுக்கணக்கான தேள்கள் வந்து கூடுவதன் மர்மம் தான் யாருக்கும் புரியவில்லை.


Post Comment

Post Comment