பக்தர்கள் நலம் காக்கும் சிவகாசி பத்திரகாளியம்மன் திருக்கோவில் :


Posted by-Kalki Teamவிருதுநகரில் இருந்து 21 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது சிவகாசி பத்திரகாளியம்மன் திருக்கோவில். இந்த கோவில் வரலாற்றை தெரிந்து கொள்ளலாம்.

பிரம்மதேவனின் புதல்வனான தட்சன், தன் மகளான தாட்சாயனியை ஈசனுக்கே தாரைவார்த்துக் கொடுத்தார். இருப்பினும் தனது அகந்தையால் சிவ பெருமானைப் பகைத்துக் கொண்டான். நித்தமும் சிவ நிந்தனையையே சிந்தையில் கொண்டான். ஒருமுறை, தட்சன் ஒரு பெரிய யாகத்திற்கு ஏற்பாடு செய்து, அதற்கு சிவனையோ தாட்சாயனியையோ அழைக்காமல் தவிர்த்தான். இதனால் வெகுண்ட ஈசன், தட்சனின் அந்த முறைகெட்ட யாகத்தை அழிக்க தம்மில் இருந்து வீரபத்திரரை உண்டாக்கினார். அவரது அருகில் இருந்த அம்பாளின் கோபத்தில் இருந்து பத்திரகாளி உருவானாள். வீரபத்திரரும், அவரது துணைவியாய் உண்டான பத்திரகாளியுமே ஈசனின் கட்டளைப்படி தட்சனின் யாகத்தை அழித்தனர்.

பத்திரகாளியம்மன் ஆலயம் :

அதன் பிறகு ஈசனின் கோபத்தில் இருந்து தோன்றிய வீரபத்திரரும், அம்பாளின் கோபத்தில் இருந்து தோன்றிய பத்திரகாளியும் ஈசனின் கட்டளைப்படி உலக மக்களின் நல்வாழ்வுக்காக ஆங்காங்கே திருக்கோவில் கொண்டனர். அப்படி பத்திரகாளியம்மன் விரும்பி திருக்கோவில் கொண்ட சில தலங்களில் முதன்மையானது சிவகாசி பத்திரகாளியம்மன் திருக்கோவில்.

கருவறையில் பத்திரகாளியம்மன் எட்டு திருக்கரங்களுடன் உடுக்கை, கட்கம், கபாலம், சூலம், ஹஸ்தம், நாகம், மணி, கிண்ணத்துடன் அருள்பாலிக்கிறாள். அன்னை கருவறையில் ஒய்யாரமாக தனது வலது திருபாதத்தை தூக்கி குத்துக் காலிட்டு, தனது இடது திருபாதத்தை அரக்கனின் தலைமேல் வைத்தவண்ணம் அமர்ந்த திருக்கோலத்தில் வீற்றிருக்கிறாள். பல்லாயிரக்கணக்கான குடும்பங்களின் குல தெய்வம் இவள்.

இந்த அன்னையை பவுர்ணமி, செவ்வாய், வெள்ளி, அமாவாசை முதலிய நாட்களில் அந்திசாயும் பொழுதில் வழிபடுவது நல்லது. வழிபாட்டின் போது அம்மனின் கருவறை தீபத்தில் நல்லெண்ணெய் சேர்த்து, 8 உதிரி எலுமிச்சை பழங்களை அவள் திருப்பாதத்தில் வழிபட வேண்டும். இவ்வாறு செய்வதால் வியாபாரத்தில் மிகுந்த லாபம் கிடைக்கும். சிலர் தங்கள் வியாபாரத்தில் கிடைக்கும் லாபத்தில் ஒரு குறிப்பிட்ட பங்கை, பத்திரகாளி அம்மனுக்கு காணிக்கையாக செலுத்தி வருகிறார்கள். தன லாபம் கிட்ட, எதிரிகள் தொல்லை அகல, சுபகாரிய தடைகள் அகல செவ்வாய்க்கிழமை ராகு காலத்தில் தொடர்ந்து 8 வாரங்கள் எலுமிச்சை பழ தீபம் ஏற்றி பத்திரகாளி அம்மனை வழிபட வேண்டும். குழந்தைகளின் பாலாரிஷ்ட நோய்களும், திருஷ்டி கோளாறுகளும் இவளை வழிபட நீங்குகிறதாம்.

ஆலய அமைப்பு :

இந்தத் திருக்கோவில் ராஜகோபுரம் ஏழு நிலைகளுடன் கன கம்பீரமாக நம்மை வரவேற்கிறது. ஆலய வெளிப் பிரகாரத்தில் நாகராஜா, ஐயப்பன், அனுமன், லட்சுமி நாராயணர் சமேத அஷ்டலட்சுமி சன்னிதிகள் உள்ளன. இத்தல விநாயகர் பஞ்சமுக விநாயகர். இவரும் ஆலய வெளி சுற்று பிரகாரத்தில்தான் உள்ளார். இவரை சங்கட ஹர சதுர்த்தி நாட்களில் வழிபட்டு வரலாம். மேலும் தொடர்ந்து 8 சங்கடஹர சதுர்த்தியில் அருகம் புல் சாற்றி வழிபட வினைகள் அறுபட்டு நம் சங்கடங்கள் யாவும் தீரும்.

அஷ்ட லட்சுமி சன்னிதியில் வெள்ளிக்கிழமை மற்றும் அட்சய திருதியை நாட்களில் பசு நெய் தீபம் ஏற்றி, தாமரை, மரிக்கொழுந்து மாலை சூட்டி லட்சுமியின் துதியை பாராயணம் செய்து வந்தால், வறுமை அகலும். கடன் தொல்லை நீங்கும். செல்வம் சேரும். அஷ்டலட்சுமியுடன், இத்தலத்தில் உள்ள பைரவரையும் தேய்பிறை அஷ்டமி நாளில் நெய் தீபம் ஏற்றி வழிபட்டு வந்தால் திரண்ட செல்வம் வந்து சேரும்.

இத்தல வீரபத்திரர், அனுமன் சன்னிதியில் பவுர்ணமி நாளில் வெண்ணெய் சாத்தி, வெற்றிலை மாலை சூட்டி, நெய் தீபம் ஏற்றி வழிபட உடல் நோய்கள், மன நோய்கள் அகலும். இங்கு ஆலய உள் பிரகாரத்தில் கன்னி விநாயகர், பைரவர், வீரபத்திரர், மாட சுவாமி, வெயிலுகந்த அம்மன், இருளப்ப சுவாமி, கருப்ப சுவாமி, பேச்சியம்மன் சன்னிதிகள் உள்ளன. பத்திரகாளியம்மனின் சகோதரி பேச்சியம்மன். இந்த அம்மனுக்கு பஞ்சமி நாட்களில் நெய் தீபம் ஏற்றி, தொடர்ந்து 11 பஞ்சமி நாட்கள் சிவப்பு அரளி மலர்களால் அர்ச்சித்து வந்தால், சொல்வாக்கும், நல்ல செல்வாக்கும் கிடைக்கும்.

நம்பிக்கை அவசியம் :

குழந்தை பாக்கியம் வேண்டு பவர்கள், இத்தல அம்பாள் பத்திரகாளியம்மனிடம், தொட்டில் பிரார்த்தனை செய்து, அவளது கருவறை தீபத்தில் நல்லெண்ணெய் சேர்த்து வழிபட்டு வர உடனே குழந்தை பாக்கியம் கிட்டும் என்பதில் சிறிதும் ஐயமில்லை. குழந்தை பாக்கியம் வேண்டும் தம்பதிகள் இங்கு வந்து அம்மனிடம் வேண்டிக்கொள்ள கண்டிப்பாக குழந்தைபாக்கியம் அளித்திடுவாள் பத்திரகாளியம்மன். ஆம்! நமக்கு தேவை அவள்பால் உறுதியான நம்பிக்கை மட்டுமே. அதுவும் நாம் அவள்பால் வைக்கும் நம்பிக்கை அபிராமி பட்டர் போல இருக்க வேண்டும்.

அபிராமிபட்டர் மிகச்சிறந்த அன்னை பக்தர். அவர் திருக்கடையூரிலே அருளும் அன்னை அபிராமியிடம் அளவு கடந்த அன்பு வைத்திருந்தார். இருந்தாலும் அன்னை அவரது முதல் பாடலிலோ, 50-வது பாடலிலோ, 60-வது பாடலிலோ கூட வந்து அமாவாசையை பவுர்ணமி ஆக்கவில்லை. அவரை நன்கு சோதித்து, தன் பால் அவர் வைத்துள்ள நம்பிக்கையை சோதித்து, அவரது 79-வது அபிராமி அந்தாதி பாடல் பாடும் போது தான் அமாவாசையை பவுர்ணமி ஆக்கினாள். அதுபோன்றதொரு நம்பிக்கையை நாமும் பத்திரகாளியம்மன் மீது வைக்க வேண்டும்.

இங்கு சித்திரையில் நடக்கும் கயிறு குத்து திருவிழா, பொங்கல் விழா, தேரோட்டம் வெகு சிறப்பானதாகும். கயிறு குத்து என்பது உடம்பில் கரும்புள்ளி, செம்புள்ளி குத்தி அன்னையை வழிபடுவது. உடல் நோய், கண் திருஷ்டி அகல இந்த நேர்ச்சையை செய் கிறார்கள்.

ஜாதக ரீதியாக லக்னத்தை, செவ்வாய் பார்த்தால் அந்த ஜாதகத்திற்குரிய குழந்தைகள் துறுதுறுவென இருப்பார்கள். இத்துடன் ராகு போன்ற கிரகங்கள் பார்த்தால், குழந்தைகளின் பிடிவாதம் பெருகும். பிள்ளைகளை நல்வழியில் கட்டுப்படுத்தவும், குறைந்த அறிவுத்திறன், மெதுவாக புரிந்து கொள்ளும் திறன் போன்ற பாதிப்பு உள்ள குழந்தைகளை இத்தலம் அழைத்து வந்து, இத்தல பத்திரகாளியை அமாவாசை, பஞ்சமி, பவுர்ணமி நாட்களில் அபிஷேகம் செய்து வழிபட்டால் குறைகள் அகலும் என்கிறார்கள். இத்தல வெயிலுகந்த அம்மனுக்கு இளநீர், தயிர், பன்னீர் அபிஷேகம் செய்து வழிபட வெயிலின் தாக்குதலால் ஏற்படும் நோய்கள் அண்டாது. மேலும் வெயிலுகந்த அம்மனுக்கும், பத்திரகாளி அம்மனுக்கும் தொடர்ந்து 18 நாட்கள் இளநீர் அபிஷேகம் செய்து வழிபட்டால், கண்டிப்பாக மழைபொழியும் என்கிறார்கள்.

ஆதி பத்திரகாளியம்மன் :

இத்தல ஆலயத்தின் உள்ளே பத்திரகாளி அம்மனின் எதிரே உள்ள நந்தவனத்துக்குள் ஆதி பத்திரகாளி பீடம் உள்ளது. முதன் முதலில் இத்தல பத்திரகாளி அம்மன் அமர்ந்த ஆதி பீடம் இதுவாகும். இந்த நந்தவனத்திற்குள் ஆண்களுக்கு மட்டுமே அனுமதி. பெண்களுக்கு அனுமதி இல்லையாம். உடல் உறுப்புகள் நலம் அடையும் பொருட்டு பத்திரகாளியம்மனிடம் வேண்டிக்கொண்ட பக்தர்கள், அவள் அருளால் நலம் பெற்றதும் மண், வெள்ளியினால் ஆன கை, கால் போன்ற உடல் உறுப்புகளையும் காணிக்கையாக செலுத்துகின்றனர். வீடு வாங்க வேண்டும் என்று நினைப்பவர்கள், மண்ணில் செய்த வீடு போன்ற உருவத்தை இங்கு அம்பாளுக்கு சமர்ப்பிக்கிறார்கள்.

விருதுநகரில் இருந்து 21 கிலோமீட்டர் தொலைவில் சிவகாசி உள்ளது.Post Comment

Post Comment