கோடைக்காலத்துக்கு ஏற்ற பிராணாயாமப் பயிற்சிகள் :


Posted by-Kalki Teamகோடைக்காலத்தில் செய்வதற்கென்றே சில பிராணாயாமங்கள் உள்ளன. இந்த ஆசனங்களை செய்து வந்தால் மனச்சோர்வு மற்றும் மனஅழுத்தத்தைக் குறைக்கிறது. சீரான தூக்கத்துக்கு உதவுகிறது.

சந்திரநாடி பிராணாயாமம் :

செய்முறை: வஜ்ராசன முறையில் அமர வேண்டும். வலது கையை நாசிக்கான முத்ராவில் வைக்க வேண்டும். இப்போது, வலது நாசியில் வலது கையின் பெருவிரலை வைத்து மூட வேண்டும். இடது நாசியால் மூச்சை இழுத்து விட வேண்டும். இதேபோல் 10 - 15 முறை செய்யலாம். இந்தப் பிராணாயாமப் பயிற்சியை மூன்று வேளையும் செய்யலாம்.

பலன்கள்: சந்திரநாடி பிராணாயாமம் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்த உதவும். மனஅழுத்தம், மனச்சோர்வு குறையும். தூக்கமின்மையைச் சரிசெய்து, எளிதில் செரிமானசக்தியைச் சீராக்கும். உடலைக் குளிர்ச்சி அடையச் செய்யும்.

ஷீட்டாலி பிராணாயாமம் :

பயிற்சி: பத்மாசன நிலையில் உட்கார வேண்டும். இரண்டு கைகளையும் சின்முத்திரையில் வைக்க வேண்டும். கண்களை மூடிய நிலையில் வைத்து நாக்கை வெளியே நீட்டி, உருளை போன்று உட்புறமாக மடக்கி வைத்துக்கொள்ள வேண்டும். இப்போது நாக்கின் வழியாக மூச்சை உள் இழுக்க வேண்டும். மூச்சை உள்ளே இழுத்ததும், நாக்கை உள்ளே கொண்டு செல்ல வேண்டும். பிறகு, பற்களின் வழியாக மூச்சை வெளியிட வேண்டும். இதேபோல் ஐந்து முறை செய்யலாம். இறுதியாக, இரண்டு உள்ளங்கைகளையும் தேய்த்து, கண்களில் வைக்க வேண்டும். பின்பு கண்களைத் திறக்க வேண்டும்.

பலன்கள்: இது உடல் குளிர்ச்சி அடைய உதவுகிறது. சுவாசம் சீராக உடலினுள் பரவ உதவுகிறது. நுரையீரல் பிரச்னைகள், சளி மற்றும் காய்ச்சலைக் குணப்படுத்தக்கூடியது. மன அமைதிக்கு உதவுகிறது.

ஷீட்கரி பிராணாயாமம் :

பயிற்சி: பத்மாசன நிலையிலோ அல்லது சாதாரணமாகவோ உட்கார வேண்டும். முதுகுத்தண்டு நேராக இருக்கும்படி அமர வேண்டும். கைகள் இரண்டையும் சின்முத்திரையில் வைக்க வேண்டும். நாக்கை உட்புறமாக மடித்து வைத்துக்கொள்ள வேண்டும். இப்போது, பற்களின் இடுக்குகள் வழியாக மூச்சை இழுக்க வேண்டும். பின்பு, மூக்கின் வழியாக மூச்சை வெளியிட வேண்டும்.

பலன்கள்: உடலைக் குளிர்ச்சி அடையச் செய்யும். கோடைக்காலத்துக்கு ஏற்ற பிராணாயாமப் பயிற்சி இது. மனச்சோர்வு மற்றும் மனஅழுத்தத்தைக் குறைக்கிறது. சீரான தூக்கத்துக்கு உதவுகிறது.


Post Comment

Post Comment